எழுத்தாளர்: இரா சாரதி
இன்றோடு ஏழு மாத குழந்தை கேசவனுக்கு இவள் சேவகியாக முயற்சி செய்து ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆச்சு ,ஒரு மாதம் ஆச்சு ,இவளது அக்கா ஒரு விபத்தில் உயிரிழந்து அவளது மகன் கேசவனை விட்டுப் பிரிந்து. கேசவன் நிர்க்கதியாக தாயின்றி நின்றக் கோலத்தைப் பார்த்து தமக்கையின் தங்கை இவள் தாயாக மாற தயாரானாள். ஆனால் இவள் கேசவனுக்கு அருகில் சென்றாள் அவன் அழுகிறான், தவழ்ந்து ஓடுகிறான்.இவனைப் பார்ப்பதற்காகவே அக்காவின் கணவனையே உடனடியாக கல்யாணம் செய்து வைத்தனர். ஏற்றுக் கொண்டாள். முதல் இரவு முதல் இன்று வரை இரவு பகலாக அக்காவின் மகனுக்காக தாயாக அர்ப்பணித்து அன்றாடம் ஒவ்வொரு வித்தையை கையாள்கிறாள். முதலில் புட்டி பாலைக் கொடுத்தாள். மறுத்தான்.சரி குழந்தை பசித்தால் புசிக்கும் எனக் காத்திருத்தாள்.ஆனால் அவன் அருகில் வர மறுக்கிறான்.சரியென, அக்கா உபயோகித்த சேலையை கட்டினாள்., காட்டினாள் . அக்கா உபயோகிக்கும் பெரிய பொட்டு, ஆசை வார்த்தை… மசியவில்லை. யோசித்து யோசித்துப் பார்த்தாள். அக்காவின் அலைபேசியில் இருக்கும் வீடியோக்களை திரும்பத் திரும்பப் பார்த்தாள். அக்காவின் அதே மாதிரியான கெஞ்சல்கள் , கொஞ்சல்களைச் செய்தாள். தாயின் ஏக்கத்தில் அவன் பட்டினிக் கிடக்க , அவனது எடை குறைய இவளது மனம் பாரமானது.
‘ இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பார்ப்பேன் குழந்தை தன்னை தாயாக ஏற்காவிடில் தான் மாயமாக மறைவது ‘ என்று முடிவெடுத்தாள். இப்பொழுது குழந்தை பக்கத்து அறையில் அழுது கொண்டிருந்ததான். இவள் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டு தனது அக்கா பாடிய பாடல் ஒன்றை உதட்டில் உச்சரிக்க ஆரம்பித்தாள். ‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் ..” பக்கத்து அறையில் அழுது கொண்டிருந்த குரல் நின்றது. இவளுக்கு ஆச்சரியம் , தொடர்ந்து உதட்டால் உச்சரித்தாள். திறந்திருந்த கதவின் வழியே குழந்தையின் தலை தவழ்ந்தவாறு எட்டிப் பார்த்தது. இவளுக்கு சந்தோஷம்! இருப்பினும் , மறைத்துக்கொண்டு தொடர்ந்து உதட்டை அசைத்தாள். குழந்தை இவளைப் பார்த்து தடதடவென தவழ்ந்து வந்தது .தொடர்ந்து பாடினாள். அருகில் வந்து இவள் மீது பாய்ந்து கட்டிக் கொண்டது. தாய் தயாராக வைத்திருந்த புட்டிப் பாலை அவனுக்கு ஊட்டினாள். குழந்தை ஆசை ஆசையாக உட் கொண்டது. மற்றொரு கையால் தனக்குப் பின்னே பாடிக்கொண்டிருந்த அலைபேசியை சற்று மெதுவாக்கினாள். ஆம் தனது அக்கா பாடிய பாடலை இவள் பாடுவது போல பாசாங்கு செய்து பாசத்தை வென்றிருக்கிறாள். இவளுக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம். இப்போது வெகு அருகில் தன் மடியில் குழந்தை.இவளுக்கு ஆச்சரியம் உடனே உதட்டை அசைத்து பாடுவது போல செய்கை செய்தாள். அக்கறையான பாசத்துக்கு முன்னால் உதடுகளின் உச்சரிப்பு உண்மையானதாகத் தெரிந்தது . இசையில் இவள் ஒரு ஞான சூன்யம் ஆனால் அக்கா நன்றாக பாடுவாள் . அக்கா பாடுவது போல நடித்தாள். தாய்மை எதற்கும் தயார்தான் . ஆயர்பாடி கண்ணன் இனி அவளின் மடியில்தான்!
“ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…” கேசவன் அவன் வயிறு நிறம்பத் தூங்கினான் . கன்னித்தாய் இவள் மனம் நிறம்ப கூறிக் கொண்டாள், “எப்படியும் இந்தப் பாட்டை மனப்பாடம் செய்து ராகத்தோடு பாட கற்றுக்கொள்ள வேண்டும்.”
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: