ஒரு பக்க போட்டிக்கதை: தாயுமானவள்

by admin
67 views

எழுத்தாளர்: தெ. குப்புசாமி

அன்று, அரசு வேலைக்கான தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த பாரதிக்குப் பேரதிர்ச்சிக் காத்திருந்தது. குலதெய்வக் கோவிலுக்கு அம்மா, அப்பா, அக்கா, மாமா ஆகியோர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூவர் இறந்துவிட நிறைமாதக் கர்ப்பிணியான  அக்கா மட்டுமே தலையில் காயத்தோடு உயிர் தப்பியதாகச் செய்தி!

ஊரே கூடியழ, மூன்றுபேரின் இறுதிச் சடங்குகள் முடிந்தபின், அக்காவை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்கு விரைகிறாள், பாரதி.


‘‘சாரி, உங்க சிஸ்டரோட குழந்தையை மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சிது…’’
என்று மருத்துவர் சொல்லிவிட்டுச் செல்ல, ஒரு பெண் குழந்தையை அவள் கையில் கொடுக்கிறார், நர்ஸ். பாரதி கதறியழ குழந்தையும் வீரெனக் கத்துகிறது. மார்பு வலிக்க, தொண்டைக் குழிக்குள் அழுத்தி அழுகையை அடக்கிக் கொள்கிறாள், அவள். தேவி என அக்குழந்தைக்குப் பெயரிட்டு, அன்றிலிருந்து தாய்ப்பால் என்ற ஒன்றைத் தவிர பாரதியே அக்குழந்தைக்கு முழுமையானத் தாயாகிப்போகிறாள்.

ஆனால், எல்லாரையும் இழந்து நிற்கும் அவளுக்குள்,
‘‘இந்தக் குழந்தையை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்?’’
என்ற கேள்வி பெரும் அலையாக எழும்பி துயரக்கடலுக்குள் அவளை இழுத்துச் செல்கிறது. அப்போது,  ஆண்டவன் அனுப்பிய தோனியாக, அவள் எழுதிய தேர்வில் வெற்றிபெற்றதால் அரசு வேலைக்கான ஆணை வந்து சேர்கிறது.
ஒரு வேலைக்கார அம்மா குழந்தையைப் பகலில் பார்த்துக்கொள்ள,  வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் சமையல் முதல் குழந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து முடித்து ‘அப்பாடா!’ எனப் படுக்கையில் விழுந்தாலும் குழந்தை அவளைத் தூங்க விடுவதில்லை.

இதற்கிடையில் சில சுற்றத்தாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி சிலரைப் பெண் பார்க்கவர அனுமதிக்கிறாள், பாரதி. ஆனால், வந்தவர்கள்  குழந்தையைத் தான்தான் பராமரிக்கவேண்டும் என்ற அவளது நிபந்தனையை ஏற்க மறுத்துச் சென்றுவிடுகிறார்கள். அதற்காக பாரதி வருத்தப்படவேயில்லை. மாறாக, தேவியை வளர்க்க வந்த தடைகள் நீங்கியதாக எண்ணி மகிழ்ச்சியே கொள்கிறாள்.

இப்படியாகக் காலங்கள் கடந்தோட, தேவி வளர்ந்து படித்துப் பெயருக்கு ஏற்ப அழகான பருவமங்கையாகப் பரிணமிக்க, பாரதியோ கன்னித்தாயாகவே தன் வாழ்நாளில் முக்கால்வாசியைக் கழித்து வேலையிலிருந்து ஓய்வும் பெற்றுவிடுகிறாள். தேவி அவளை வளர்த்த பாரதியை ஒருநாளும் சித்தியாகப் பார்ப்பதும் இல்லை; சித்தி என அழைப்பதும் இல்லை ; அம்மா என்றே அழைத்து அன்பைப் பொழிந்துவந்தாள். அவள் கொடுத்த ஊக்கத்தாலும் தன்னுடைய முயச்சியாலும் தேர்வுகள் பல எழுதி வெற்றியும் பெற்று ஓர் அதிகாரியாகவே அரசு வேலைக்குத் தேர்வாகிவிடுகிறாள், தேவி.

‘மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் வளமாக வாழலாம்’, என்ற எண்ணத்தோடு பெண் தேடும் இன்றைய இளைஞர்கள் பலர் தேவியை மணக்க வரிசைகட்டுகின்றனர். அன்று குழந்தையோடுதான் வருவேன் என்று அடம்பிடித்த பாரதியைப் போலவே இன்று என் தாயோடுதான் புகுந்த வீட்டுக்கு வருவேன் என்ற  நிபந்தனையோடும் தன் தாயின் சம்மதத்தோடும் ஒருவரைக் கரம்பிடிக்கிறாள், தேவி.

சில ஆண்டுகளில் பேரக்குழந்தைகளோடு மகிழ்ச்சியாக விளையாடி காலம் கழித்த பாரதி இன்று எழுபத்தைந்தைத் தாண்டி முதுமையால் ஓர் அறையில் முடங்கிவிடுகிறாள். மருந்து மாத்திரைகள் மட்டுமே அவளது அறையை அலங்கரிக்க, முனகல் ஒலியும் இருமல் சத்தமுமே அவளுடைய இருப்பை இருப்பவர்களுக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், குழந்தையாக இருந்தபோது பாரதி தன்னிடம் காட்டிய அன்பையும் அரவணைப்பையும் பன்மடங்காகப் பெருக்கி அவளை ஆதரித்துவருகிறாள், தேவி.

ஒரு நாள் இரவு,
‘‘தேவி, நான் ஒன்னு சொல்வேன், கோபப்படக்கூடாது,’’
என்ற தூபத்தோடு தொடங்குகிறான், அவளது கணவன். அவள் என்னவென்று கேட்க,
‘‘உன் சித்திக்கு ரொம்ப வயசாயிட்டுது. அவுங்கள ஒரு முதியோர் இல்லத்துல சேத்துட்டா என்ன… அங்கே நல்லாவே பாத்துப்பாங்க. அவுங்களும் நிம்மதியா இருப்பாங்க. இங்கே நாமும் நிம்மதியா இருக்கலாம்,’’
என்கிறான்.

இதைக் கேட்டதும் வெகுண்டெழுகிறாள், தேவி.
‘‘அவுங்கள யாருன்ன நெனச்சீங்க? எனக்குச் சித்தி மட்டும் இல்ல, தாய். தாயார்  மட்டுமில்ல… அதுக்கும் மேல! ஒருத்தி, பெற்றெடுத்த குழந்தைக்காக தியாகம் செய்வது உலகத்துல நடக்கக்கூடியது. ஆனால், தான் பெறாத  குழந்தைக்காகத் தன் சுகத்தையெல்லாம் பறிகொடுத்து வாழ்ந்த தெய்வம், அது.’’

‘‘நீங்க நாலு அண்ணன் தம்பிகள் இருந்தும் உங்க அப்பாவை முதியோர் இல்லத்துல விட்டிருக்கீங்க. என்னையும் அப்படி நெனச்சிட்டீங்களா? என் தாயைவிட இந்த வாழ்க்கைகூட எனக்குப் பெரிசு இல்ல…’’
மூச்சிறைக்க அவள் கொட்டி முழக்கியதைக் கேட்டு மூர்ச்சையாகி சோபாவில் சாய்கிறான், அவன்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!