எழுத்தாளர்: காந்திமதி உலகநாதன்
வீட்டில் வேலை பார்க்கும் பொன்னி அசந்து போய் நின்றாள்.எத்தனை விளையாட்டு சாமான்கள்! வித விதமாக ! அவள் பலவற்றை பார்த்தது கூட கிடையாது. எங்கே அவர்கள் வாழ்வில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம். தினம் தினம் பல பிரச்சினைகளை சமாளித்துக் கொண்டு நாங்களும் வாழ்கிறோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
நல்ல சாப்பாடும் துணிமணியும் கிடைத்தாலே சொர்க்கம் என்று இருக்கும் சூழ்நிலையில் எங்கே விளையாட்டு சாமானுக்கு போவது!
வளர்ந்து அனுபவப்பட்ட மக்களுக்கே புரியாத சில உணர்வுகள் குழந்தைகளுக்கு எப்படி புரியும்!
செல்லப்பிராணி என்று நாயைக் கூட காரில் கூட்டிப் போகிறவர்கள் அவளைப் போன்ற மனிதர்களிடம் பாகுபாடு ஏன் காண்பிக்கிறார்கள்! அவளுக்குப் புரியத்தான் இல்லை.
வெட்டியாக ஆடம்பரத்துக்காக எவ்வளவோ பணத்தை கொட்டுவார்கள் அவளுக்கு கொடுக்கும் போது மட்டும் கை சுருங்குவது ஏன்! புரியவில்லை.
பொன்னி வேலை பார்க்கும் வீட்டில் அந்த அம்மாவின் பெண் வந்திருக்கிறாள்.
எங்கேயோ தூரதேசத்தில் (அமெரிக்கா என்று சொன்னதாக நினைவு) இருக்கிறாளாம்.
தினமும் உறவினர் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தது.பொன்னிக்கும் வேலை நெட்டி முறி த்தது. ஆனால் இந்த பதினைந்து நாட்களாக சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை.
சிலபேர் மாதிரி மிஞ்சிய சாப்பாட்டை மறு நாள் எடுத்துக்கொள் என்று சொல்லாமல் அன்றே தந்து விடுவார்கள்.
வருபவர்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வரும் ஸ்வீட் பலகாரங்கள் பழங்கள் எல்லாமே அவ்வப்போது சரிசெய்து விடுவார்கள். அதிலும் அவளுக்கு கொடுப்பார்கள். நல்ல பெண்மணி தான்! நன்றாக பேசக்கூட செய்வார்கள் தான்.ஆனால் அதற்காக வரம்பு மீற முடியாது இல்லையா?
அந்த தாய் மனம் தன் பெண் குழந்தைக்காக ஏங்கியது. சின்ன சின்ன வீட்டுச்சாமான்கள் வாங்க கூட பணம் இல்லாத நிலையில் விளையாட்டு சாமானுக்கு எங்கே போவது!
தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டும் மறுகிக் கொண்டும் வேலை செய்து கொண்டிருந்தாள்.ஆயிற்று ! அந்த வீட்டுப் பெண் கிளம்பும் நாளும் வந்தது.
அம்மாவும் பெண்ணும் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தார்கள். பொன்னிக்கு வியப்பாக இருந்தது. தினம் தினம் அலைபேசியில் பேசத் தானே செய்கிறார்கள்! சரி ,இது நமக்கு புரியாத விஷயம் என்று ஒதுக்கினாள் பொன்னி.
அன்று வேலைக்கு வந்த போது அம்மா ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்தார்கள். ‘எதுக்கும்மா! ‘,என்றவளிடம் ‘உனக்கும் தான் இந்த மாதம் வேலை அதிகம் இல்லையா!’ என்றார்கள்.
“அம்மா “,என்றவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. எதிர்பாராது கிடைத்த இந்த ரூபாயில் எந்த கடனை அடைக்கலாம் என்று தான் மனம் யோசித்தது.
மறுபடியும் தன் சின்னப் பெண்ணுக்காக யோசிக்க முடியாமல் நிதர்சனம் தலைகாட்டியது.
‘அம்மா’, என்று ஏதோ சொல்ல வந்தவளிடம் “பொறு பொன்னி ! உன் பொண்ணுகிட்டே இதை கொடு !”என்று நீட்டினார்கள்.
‘இது என்னம்மா! ‘விளையாட்டு சாமான்கள் ! சின்ன சின்ன கார்கள் எஞ்சின்கள் இன்னும் பல பொருட்கள்.அவளால் பார்க்க முடியாமல் கண்ணீர் மறைத்தது.
‘என்ன பொன்னி! அசந்து போயிட்டே! எனக்குத் தெரியும்! நீ உன் பெண்ணை எப்போதும் கூட்டிக் கொண்டு வருவாய்! இந்த முறை நீ அவளைக் கண்ணிலேயே காட்டவில்லையே!
எனக்கு புரிந்து விட்டது.
பிரபா கிளம்பும் வரை ஒன்றும் பேச முடியவில்லை.”அவளும் எல்லாவற்றையும் உன்னிடம் கொடுக்க சொல்லிவிட்டு தான் போனாள்’.
‘அடுத்த மாதம் அவள் பிறந்த நாளைக்கு கொடுக்க சொல்லி தனியாக ஒரு கிஃப்ட் பார்சல் வைத்திருக்கிறாள்’.
‘அம்மா’, என்றபடி கால்களில் விழப் போனாள் பொன்னி .
“இதெல்லாம் ஒன்றுமே இல்லை. வசதியானவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவோ கொடுத்துக் கொள்கிறோம். ஆனாலும் எங்கள் குழந்தைகளுக்கே ஆசை விடுவதில்லை.
சின்னப் பெண் அவளிடம் கொடு அவளுக்கும் பாவம் ஆசை இருக்கும் இல்லையா!” என்று சொன்ன எஜமானி அம்மாள் அவளுக்குத் தெய்வமாகவே தெரிந்தாள்.
ஒரு தாயாக இருந்து மற்ற குழந்தைகளுக்கும் அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குழந்தைகளுக்கும் மனது இரங்கிய அவர் அவள் கண்களுக்கு தெய்வமாக தோன்றியதில் வியப்பில்லையே!
முற்றும்.