எழுத்தாளர்: குட்டி பாலா
மூன்று மணி அளவில் அந்தப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி கேட்டு அலுவலகத்திலிருந்து பள்ளிக்கு விரைந்து வந்த பூபதியும் பூமாவும் பூட்டியிருந்த பள்ளிக் கதவினைப் பார்த்து அதிர்ந்தனர்.
காவலர்களிடம் கேட்டதற்கு எல்லா மாணவர்களையும் பெற்றோர்கள் கூட்டிச் சென்று விட்டதாகவும் அதன் பின்னரே ஆசிரியர்கள் சென்றதாகவும் தெரிவித்தனர்.
மகள் நித்யாவை யார் கூட்டிப் போயிருப்பார்கள் என்று இருவரும் கலங்கினார்கள்.
“பள்ளி சிறார்களை கடத்தும் கும்பல் நகரில் நடமாடுவதாக செய்தித்தாள்களில் படித்ததை நினைத்து பயமாய் இருக்கிறது” என்ற பூமாவை (மனதுக்குள் தானும் பயந்தாலும்) தேற்றினான் பூபதி.
தாயுள்ளமோ துடித்தது. சட்டென்று நித்யாவின் வகுப்பாசிரியை வசந்தாவை மொபைலில் அழைத்தாள் பூமா. அவர் நித்தியாவை அவள் பாட்டி வந்து கூட்டிப் போனதாகவும் சாட்சியாக அவர்களின் புகைப்படத்தையும் அனுப்பினார்.
பெருமூச்சுவிட்டு அதை பூபதியிடம் காட்டி “இந்த வருஷம் நித்யா படிப்பு முடியும் வரை நாம் நாவலூர் போக வேண்டாம். அம்மாவுடனே சேர்ந்து இருப்போம். தாயுடன் இருப்பது யானை பலம்” என்றாள்.
“தினமும் அவ்வளவு தூரம் அலைந்து வேலைக்குப் போய் வருவது சிரமமாய் இருக்கிறது என்று நீ சொன்னதால்தானே எங்க அம்மா எதிர்ப்பையும் மீறி நாலு மாதம் முன்பு நாவலூருக்கு போனோம்” என்ற பூபதியிடம்
“உங்களுக்கு புரியாது ஒரு தாயின் பாசம். ஏதோ காரணம் கண்டுபிடித்து உங்கள் அம்மாவிடமிருந்து பிரிந்து வந்தது உண்மைதான்.
ஆனாலும் “பள்ளியில் வெடிகுண்டு” என்ற செய்தி கேட்டு துடித்து ஓடி வந்து நித்யாவை பத்திரமாக கூட்டிப்போன உங்கள் அம்மாவுடன் சேர்ந்து இருப்பது தான் நமக்கு நல்லது” என்றாள் பூமா.
இருவரும் நேராக பூபதியின் தாய் சுமதியின் வீட்டுக்கு விரைந்தார்கள்.
அவர்களிடம் சுமதி நடந்ததை விவரித்தாள்.
“தொலைக்காட்சியில் நகரில் 10 பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை கூட்டிப்போகுமாறு பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக ஒளிபரப்பானது. அதில் நம் நித்யா படிக்கும் பள்ளியும் ஒன்று என்று பார்த்தேன்.
” உடனே வீட்டைப் பூட்டிவிட்டு ஆட்டோவில் விரைந்தேன். அங்கே பெற்றோர்கள் கூட்டத்தோடு காவலர் கூட்டமும் நிறையவே இருந்தது.
‘மூன்றாம் வகுப்பு ‘பி’ பிரிவு நித்யா’என்று கேட்டு அவள் இருக்கும் இடம் நெருங்கியபோது அங்கிருந்த ஆசிரியையும் காவலரும் பள்ளிக்கு கொடுத்துள்ள விபரங்களில் உங்கள் புகைப்படமும் பெயரும் மட்டுமே இருப்பதாகவும் என் விவரம் இல்லை என்பதால் என்னுடன் அனுப்ப முடியாது என்றனர்.
ஐந்து நிமிடம் வாதாடிய பின் நித்யாவிடம் நான் அவள் பாட்டி தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டு நித்யாவையையும் என்னையும் மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நான் போய் குழந்தையைக் கூட்டி வர ஏதுவாக பள்ளியில் என்னுடைய விவரங்களையும் பதிவு செய்துவிடுங்கள்” என்றாள்.
“இங்கு மட்டுமல்ல. எந்தப் பள்ளியில் சேர்த்தாலும் அவசியம் செய்வோம். இந்த வருடம் அவள் படிப்பு முடியும்வரை முன்புபோல் உங்களுடனேயே சேர்ந்திருப்போம் அம்மா. அடுத்த வருடம் எல்லோரும் நாவலூர் போகலாம்” என்றாள் பூமா.
இதைக் கேட்ட நித்யா பாட்டியை இறுகக் கட்டிக்கொண்டாள்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: