எழுத்தாளர்: குட்டி பாலா
திருச்சி நெடுஞ்சாலையில் விராலிமலையில் அறுபது ஆண்டுகட்கு மேலாக ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறாள் மூதாட்டி கற்பகம். அந்தச் சாலையில் பயணிக்கும் லாரி ஓட்டுநர்கள் அவள் கடையில் இரவு உணவு சாப்பிடாமல் செல்வதில்லை- கற்பகத்தின் கைப் பக்குவம் அப்படி.
அன்று எல்லா வேலையும் முடிந்து அவள் படுக்கப்போகும்போது இரவு இரண்டு மணி. தடதடவென்று கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து போய் திறந்தவளை “அம்மா என்னை காப்பாற்று” என்று அழுதபடி கட்டிக் கொண்டாள் மகள் தனம்.
40 ஆண்டுகளுக்கு முன் 18 வயதில் சொல்லாமல் கொள்ளாமல் லாரி ஓட்டுநர் சரவணனுடன் ஓடிப் போனவள் இன்று இப்படி வந்ததும் செய்வதறியாது ஒரு கணம் திகைத்தாலும் “வா தனம். உள்ளே போய் பேசுவோம். சாப்பிட்டாயா? இப்பதான் சோற்றில் தண்ணீர் ஊற்றினேன். மோரும் ஊறுகாயும் இருக்கு. சாப்பிட்டுவிட்டு பேசலாம்” என்று அணைத்தபடி அழைத்துச் சென்றாள்.
“அம்மா, உன்னிடம் சொல்லாமல் உன்னைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் ஓடிப் போய் திரும்பி வந்த போதும் உன் அன்பு மாறவில்லையே அதைவிட 40 ஆண்டுகளாக நீ எப்படி இருக்கிறாய் என்று கூட தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையே என்று கோபப்படாமல் அன்று போலவே ‘சாப்பிட்டாயா’ என்று கேட்கிறாய். ஆனால் காதலித்து மணந்துகொண்ட என் கணவரோ என்னை கொலை செய்யவும் துணிந்து விட்டாரே” என்று அழுதாள்.
“நன்றாக சென்று கொண்டிருந்த இல்வாழ்க்கையில் எப்படியோ இந்த போதைப் பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டது. ஒரு வருடமாக தினமும் அடியும் உதையுந்தான். எனது ஒரே மகளை அவள் விரும்பியவனுக்கே திருமணம் முடித்து சென்னையில் வசதியாக இருக்கிறாள். தந்தையின் போதைப்பழக்கம் தெரிந்தால் அவள் வாழ்விலும் விரிசல் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். எப்படியெல்லாமோ அறிவுரை சொல்லியும் அவர் திருந்தவில்லை” என்று பெருமூச்சு விட்டாள்.
“ஒழுங்காக வேலைக்கு போகாதால் பணப்புழக்கமும் குறைந்துவிட்டது. நேற்று மளிகைக்காக வைத்திருந்த 500 ரூபாயைத் தர மறுத்ததால் என்னை கீழே தள்ளி முகத்தில் தலையணையால் அழுத்தியதால் உயிருக்கு பயந்து தப்பித்து கடைசியாக உன்னைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வந்திருக்கிறேன்” என்றாள்.
ஏதும் பேசாமல் தனத்தின் தலையை வருடியபடி “எல்லாமே ஏதோவொருவித போதையால் தான்; உனக்கு அன்றிருந்த ஒருவித போதையில் நீ போனாய். இப்போது தெளிந்து வந்திருக்கிறாய் அல்லவா. அதுபோல் அவரும் திருந்தி வருவார். கவலைப்படாதே.
நீ வருவாய் என 40வருடங்களாக நான்காத்திருக்கவில்லையா”
என்று தேற்றினாள்.
அன்னை சொல் ஆறு மாதத்தில் பலித்து விட்டது. ஆம்-சரவணன் திருந்தி வந்து மூவரும் கற்பகத்தின் விராலிமலை வீட்டிலேயே மகிழ்ச்சியாக வசிக்கிறார்கள்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: