ஒரு பக்க போட்டிக்கதை: புண்ணியக் கணக்கு

by admin
86 views

எழுத்தாளர்: ஜி.எஸ். கோபு

முக்கூட்டு சாலையில் பேருந்தை விட்டு நான் இறங்கிய போது கூடவே நெற்றியில் குங்குமத்துடன் மிடுக்கும் வசதியுமான தோற்றத்தில் வயதான பெண்மணியும் இறங்கினாள். சூரியன் உச்சியில் இருந்தது. குடையைப் பிரித்து தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு சாலையின் இடதுபுறம் திரும்பி ஊரை நோக்கி நடக்க தொடங்கினேன். கூடவே அந்த அம்மாளும் இடதுபுறம் திரும்பி நடக்கத் தொடங்கியவள் கால் தடுக்கி தடுமாறவே சட்டென்று அவளைப் பிடித்துக் கொண்டேன். பிடித்து மரத்தடியில் அமர வைத்து குடிக்க கொஞ்சம் தண்ணீர்  கொடுத்தேன். செருப்பு அறுந்து போகவே என் தாலியிலிருந்து ஊக்கெடுத்து அதில் குத்தி சரி செய்து தந்தேன்.

“போன வாரம் தான் வாங்கினது” என்று செருப்பை சரியாக மாட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

அவள் சகஜமாக பேசவே நானும் இயல்பாக கேட்டேன். “இந்த வேகாத வெய்யிலில் எங்கம்மா போறீங்க?”

“என் மூத்த மகன் பள்ளிக்கூடத்துல வாத்தியாரா இருக்கான். இப்ப சாப்பாட்டுக்கு மணியடிப்பாங்கல்ல. அதான்”

“ஏம்மா வீட்டுக்கு போய் பாக்க கூடாதா?” என்று கேட்ட எனக்கு கேள்வியின் பின்புலம் புரியாமலில்லை.

“அப்படின்னு இல்ல” என்று மருமகளை விட்டுக் கொடுக்காமல் சமாளித்தவள் “வீட்டுக்கு இன்னும் தூரம் நடக்கணும். போற வழியிலேயே அவனை பார்த்துட்டேனா  இப்படியே பஸ் ஏறிடுவேன்”

“ரொம்ப அர்ஜண்டா பாக்கப் போறீங்களா?”

“அர்ஜண்டெல்லாம் இல்ல. மாசாமாசம் வர்றது தான்”

“மாசாமாசம் இந்நேரம் தான் வருவீங்களா? கூட்டிக்கிட்டு வர்றதுக்கு யாரும் ஆளில்லையா?

“என் புருஷனுக்கும் மத்த பிள்ளைங்களுக்கும் நான் இவனைப் பாக்க வர்றதே பிடிக்காது”

“அப்புறம் ஏன்மா வரீங்க?”

“மாசாமாசம் ஐநூறு ரூபாய் தருவான். அவனையும் ஒரு எட்டு பாத்தா மாதிரி ஆச்சு”

‘இந்த ஐநூறை வாங்கவா இந்த வெய்யில்ல வரீங்க”

“இதைத் தான் என் சின்ன மவனும் கேட்டு சண்டை போடறான்” என்றவள் நீண்ட ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இந்த வாத்தியாரு என் மூத்த மகன். காடுகரை எல்லாம் அடமானம் போட்டு காலேசுக்கு அனுப்பி படிக்க வெச்சோம். அப்புறம் ரெண்டு பொண்ணுங்க. கடசிப்பய கண்டேட்டரா பஸ்ல ஓடறான். பொண்ணுங்களும் வீடு வாசல்னு நல்லாத் தான் இருக்காங்க. வரும் போதெல்லாம் ஏதாவது குடுத்துட்டு தான் போவாங்க. ஒன்னும் கொறையில்லம்மா” என்றாள் நிறைவாக.

“அப்புறம் எதுக்கும்மா யார் பேச்சையும் கேக்காம இம்மாம் கஷ்டப்பட்டு இவரு குடுக்குற

ஐநூறு ரூபாயை வாங்காட்டி என்ன? ஒருவேளை படிக்க வெச்சதுக்கு ஜீவனாம்சமா வாங்கறீங்களா?” என்று துடுக்குத்தனமாக சொல்லி விட்டு அவள் திகைத்து நிற்பதைப் பார்த்து விட்டு “சாரிம்மா” என்றேன்.

பட்டென்று ஒரு பெரிய மனுஷியை பார்த்து இப்படி கேட்டு விட்டேனே என்று பதறிய என்னை கையில் மெல்ல தட்டி ஆசுவாசப்படுத்தினாள் அந்த அம்மாள்.

“சாரிம்மா” என்றேன் ஆத்மார்த்தமாக.

“பரவால்லம்மா. நீ மட்டுமா கேக்கறே?  எங்க வீட்டு சனங்க மட்டுமில்ல. சொந்த பந்தமே கேக்குது. அவ்வளவு ஏன் என் மவனும் அப்படித் தான் நெனச்சிட்டு இருக்கான்” என்று துக்கத்தில் தொண்டையடைக்க சொன்னாள்.

அவளுடைய வேதனையைப் பார்க்க சகிக்கவில்லை எனக்கு. அதனால் மெல்ல கேட்டேன். ”ஏதாவது காரணமில்லாம இருக்காதும்மா. எனக்கு புரியுது” என்றேன்.

சற்று நேரம் அமைதியாக நடந்து விட்டு பின் மெல்ல சொன்னாள். “வீட்டுக்கு மூத்தவனா தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணியிருக்கணும். தம்பியை படிக்க வெச்சிருக்கணும். இதெல்லாம் கடமை. செய்யாட்டி குத்தமில்ல. ஆனா பெத்தவங்களை பாத்துக்காட்டி அது பாவம். அந்த பாவத்தை காசிக்கு போய் கங்கையில முழுகி எழுந்தாலும் கழுவ முடியாது. வாத்தியாரா எத்தனை சொத்து சுகம் சம்பாரிச்சாலும் பெத்தவங்களைப் பாத்துக்கற புண்ணியத்தை விட்டுட்டானே. அதனால நாம கஷ்டம் பாக்காம வந்து இந்த பணத்தை அவன் கையாள வாங்கிட்டா அவனுக்கு புண்ணியக் கணக்காகுமேன்னு தான்” என்றவள் பள்ளிக்குள் நுழைந்தாள்.

அன்னிக்கு உதிரத்தை பாலாக ஊட்டியவள் இன்னைக்கு புண்ணியத்தை ஊட்டுகிறாள்.

மாமியார் வாங்கி வர சொன்ன சாமான்கள் கையில் கனக்க, இந்த தாய் மனதில் கனக்க நான் மேலே நடந்தேன்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!