எழுத்தாளர்: காயத்ரி.ஒய்
காலையில் கண் விழிக்கும்போதே மனதுள் மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் இத்தனை சந்தோஷம்? நேற்று மாலை அத்தையும் மாமாவும் ஊருக்குப் போய் விட்டார்கள். கோயம்புத்தூரில் இருக்கும் சின்ன மாமியார் ரொம்ப நாளாகக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். டிரெயின் டிக்கெட்டையும் புக் செய்து விடவே, நாலு நாட்களில் திரும்பி விடுவதாகச் சொல்லிக் கிளம்பினர்.
‘அது போதுமா? அஞ்சாறு நாள் சேர்த்து இருந்துட்டு வாங்களேன்’ மைன்ட் வாய்ஸை மறைத்துக் கொண்டு அவர்களைச் சுமுகமாக வழியனுப்பி வைத்தேன்,
‘ஹப்பாடி இன்னிக்கு ஃப்ரீயா ஜாலியாக இருக்கலாம். இறக்கின முதல் டிக்காஷனில் காப்பி கலந்து குடிக்கலாம். லேட்டா தோணும்போது குளிக்கலாம். ஒரு நாள் கிச்சனுக்கு லீவு விட்டு ஆன்லைனில் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். தினமும் சாயங்காலம் ஏழு மணியிலிருந்து ஓடும் சீரியல்களுக்கு லீவு கொடுத்து மியூசிக் சேனலைப் போட்டு அலற விடலாம்.’
என்னென்னவோ இன்ப எண்ணங்களை அசை போட்டவாறு பல் துலக்கினேன். பால் பாக்கெட்டை எடுக்கப் போனபோது வாசற்படி வெறுமையாக இருந்தது.
‘இந்தப் பால்காரப் பாட்டிக்கு என்னாச்சு? உடம்புக்கு முடியலன்னா பேரனையாவது அனுப்பி விடுமே…’
பால்பூத் நாலு வீதிகள் தாண்டி இருக்கிறது. மாமனார் இருந்திருந்தால் உடனே வண்டியெடுத்துப் போய் வாங்கி வந்திருப்பார். கணவன் எழுந்திருக்க இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்.
‘சரி லேட்டா குடிச்சாலும் லேட்டஸ்ட்டா அப்புறமா குடிப்போம்.’ காப்பிக்காகத் தவித்த நாக்கிற்கு சமாதானம் சொன்னது மனது.
சமையலறையில் எண்ணெய்ப் பிசுக்குடன் தோசைக் கல்லும், கரண்டியும் வரவேற்றன. வழித்துப் போட்ட மாவு ஏனத்தில் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து கிடந்தது.
தொட்டியில் கன்னாபின்னாவென கிடந்த கரண்டிகள் டம்ப்ளரிகளின் மேல் கருப்புப் படை போல குட்டிக் கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.
“ராத்திரி எந்நேரமானாலும் மேடையைத் துப்புரவாக்காம படுக்கக் கூடாது, பாத்திரத்தைப் போட்டு வச்சா கரப்பு வரும்.”
அத்தையின் குரல் அசரீரியாக ஒலித்தது. ஒவ்வோர் இரவும் மந்திரம் போல இதைச் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவர்தான் இல்லையே என நேற்று எல்லாவற்றையும் அப்படியே அசட்டையாக போட்டது எத்தனை பெரிய தவறு? பாத்திரங்களைத் தேய்க்கத் தேய்க்க ஆத்திரமாக வந்தது.
எல்லாவற்றையும் கழுவி வடிய வைத்து, மேடையை ஸ்கர்ப் போட்டு துப்புரவாகக் கழுவித் துடைத்ததில் வியர்த்துப் போனது.
அக்கடா என காற்றாடியைப் போட்டு சோஃபாவில் உட்காரப் போனால் இம்மியளவு கூட இடமில்லாமல் குன்று போலத் துணிகள். மாமனார் இருந்தால் சீரியல் பார்த்துக் கொண்டே மடிப்பார்.
ரொம்பவும் நேர்த்தியாக இராவிட்டாலும் உடைகளை நேராக்கி மடித்து விடுவார். மாமியார் அவரவர்களுடைய அறையில் கொண்டு வைத்து விடுவார்.
‘கச்சாமுச்சான்னு சுருட்டி வச்சுருக்கு…’ என அவ்வப்போது அவர் காதுபடவே முணுமுணுத்திருக்கிறேன். இப்படி பரத்திப் போடாமல் மடித்து உள்ளே சேர்ப்பது எவ்வளவு பெரிய உபகாரம் என உறைத்தது.
வெறுத்துப்போய் டைனிங்க் டேபிள் சேரில் பொத்தென உட்கார்ந்தேன். பிளாஸ்டிக் கூடையின் கீழ் இரண்டு வாழைப்பழங்கள் படுத்துக் கொண்டிருந்தன.
நேற்று குழந்தைக்கு அதை மாமியார் வற்புறுத்தி ஊட்டிவிட்டார்.
“சாப்பிடு கண்ணு, உடம்புக்கு நல்லது…”
“கருப்பா யக்கியா இருக்கு. வேணாம் பாத்தி…”
“வெளிலதான் அப்டி இருக்கு, உள்ள தேனாட்டம் இனிக்கும், பாட்டி ஊட்டி விடுறேன். பாப்பாவுக்கு அப்றம் தொப்பை வலியே வராது.”
அது ஏனோ என்னைப் பார்த்து சொன்ன மாதிரியே இருந்தது. வெளியில் கரடு முரடாகத் தெரிந்தாலும் உள்ளே மனசுக்குள் மிக நல்லவர். அவர் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டால் வாழ்க்கையில் பிரச்சனைகளே வராது. அதை இப்படி வாழைப்பழத்துக்குள் வைத்து சூசகமாகச் சொல்கிறாரோ? நிறைய சீரியல் பார்த்து கெட்டுப் போய்விட்டார். சிரிப்பாக வந்தது.
ஆனால் அத்தை இருந்தால் வியாவைச் சமாளிப்பது எளிது. சாப்பிட்டதும் ஏதாவது கதை சொல்லி தூங்க வைத்துவிடுவார். சாயந்திர வேளைகளில் மாமனார் அவளை அழைத்துக் கொண்டு பூங்காவுக்குச் சென்று வருவார். நாலு நாள் எப்படி இவளை மேய்க்கப் போகிறோம்?
கணவரை அழைத்து கொண்டு மாலை பூங்காவுக்குப் போய்விடலாம். அங்கிருந்து அப்படியே ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம்.
“கீர்த்தி… கீர்த்தி”
யோசனைகளை எல்லாம் கலைத்துப் போட்டது கணவரின் குரல்.
“ஒடம்பெல்லாம் சுடுதுடி. கைகால் மூட்டுலெல்லாம் பேய் வலி. வாய் கசக்குது. டெம்பரேச்சர் எவ்ளோ இருக்குன்னு பாரேன்…”
வெப்பநிலை 99 ஃபாரன்ஹீட்தான் இருந்தது. பயப்பட ஒன்றுமில்லை.
இருந்தாலும் அத்தை இருந்தால் ஒரு ஆதரவாக இருக்கும். வெற்றிலை, வேப்பிலை, சித்தரத்தை இன்னும் என்னென்னவெல்லாமோ சேர்த்துக் கஷாயம் வைத்துக் கொடுப்பார். விரளி மஞ்சளைக் கருக்கிப் புகை போடுவார். கொரோனா காலங்களில் அவர் இருந்தது எவ்வளவு தெம்பாக இருந்தது?
‘இந்த நேரம் பார்த்தா அவங்க ஊருக்குப் போகனும்?’ நிலமையை அவர்கள் இல்லாமல் சமாளிக்கவே முடியாது எனத் தோன்றியது. வீட்டுப் பெரியவர்கள் இல்லாவிட்டால் உருவாகிவிடும் வெற்றிடத்தை மனம் உணர்ந்து கொண்டது.
ஒரு நொடி தாமதிக்காமல் அலைப்பேசியை எடுத்து அத்தையை அழைத்தேன். “என்னாச்சு தாயீ? இவ்வளவு வெள்ளென கூப்பிட்டிருக்க? எல்லாரும் ஒடம்பு சாதாரணமா இருக்கீங்களா?”
அந்தக் குரலிலிருந்த அக்கறையும் வாஞ்சையும் சட்டென நெஞ்சைத் தொட்டன. இவ்வளவு நாளாக நானும்தான் வாழைப்பழத்தின் வெள்ளைப் பக்கத்தை பார்க்கத் தவறியிருக்கிறேன்!
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: