காதல் படப் போட்டி கதை: இதுவரையிலும் இது காதல் தான்!

by admin 2
109 views

எழுதியவர்: உ. ராஜேஷ்வர் 

“மழை இன்னும் விடல”, அவசரகதியில் ஆடைகளை உடுத்திக்கொண்டிருந்தவளிடம் அவன் முணுமுணுத்தான். “பரவா இல்ல, நான் கிளம்பனும்”, அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் அந்த நுரை ததும்பும் பேரிருளில் அவள் தன் மேற்சட்டையை அணிந்துகொண்டே கூறினாள்.
“இப்போ என்ன அவசரம்?”, அவன் விசும்பினான். அவளிடமிருந்து எந்த பதிலும் எழவில்லை.
“உனக்கு பிடிக்கலையா? இது காதல் தானே? ஒருவரை ஒருவர் மறந்து, ஒருவர் மீது ஒருவர் படர்ந்திருந்த
விழுமியத்தை எப்படி இப்படி புறந்தள்ளிவிட்டு புறப்படுகிறாய்?”, அவனும் தன் ஆடைகளை கையில் ஏந்தியபடி வினவினான்.
“இது காதல் இல்லை, இல்லவே இல்லை”, அவள் உறுதியிட்டு கூறினாள்.
“பிறகு?”, அவன் அவளையே ஊடுருவியபடி வினவினான்.
“இது காமம், முழுக்க முழுக்க காமம்”, இம்முறை அவன் கண்களை அறைந்தது அவள் பார்வை.
சில வினாடிகளுக்கு அவனிடமிருந்து எந்த அசைவும் வெளிப்படவில்லை. மழை ஓய்ந்திராத அந்த பின்னிரவின் நிழலில் அவனும், அவளும் அசையாது நின்றிருந்தனர். அந்த சிறிய அறையில் சிதறிக்கிடந்த புத்தகத்தின் பக்கங்கள், காற்றின் அசைவிற்கேற்ப கலகலத்துக்கொண்டிருந்தன.
“நமக்குள் இத்தனை மாதங்களாக நிகழ்ந்த கடிதப்போக்குவரத்தும், அதன் வழியே நாம் பகிர்ந்து கொண்ட அலாதி நினைவுகளும், இந்த படுக்கையில் காமமாக கசிவதற்குத் தானா? இதில் காதலுக்கு எள்ளளவும் இடமில்லையா?”,
அவன் மற்றொரு முறை வினவினான். அவள் வெற்றுப்புன்னகையை வீசிவிட்டு, தாழிட்டக் கதவுகளைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கினாள்.
“ப்ளீஸ், கொஞ்சம் நில்லு, எதாச்சும் ஹர்ட் பண்ணிருந்தா எக்ஸ்ட்ரீம்லி சாரி!”, அவசர அவசரமாக தனது
ஆடைகளை உடுத்திக்கொண்டு அவனும் வீதியில் இறங்கி ஓட்டம்பிடித்தான்.
ஆங்காங்கே ஒளிரிக்கொண்டிருந்த தெருவிளக்குகளின் சிற்றொளியில் அவள் தேகம் சிதறிக்கொண்டிருந்தது. அவள் விட்டுச்சென்ற டோப்பமைனின் வழித்தடத்தில் அவன் விரைந்துகொண்டிருந்தான். ஒருவருமற்ற அவ்வீதியில் மழையின் ஹார்மொநிக்ஸ் அவன் கூக்குரலை சீர்குலைத்தது. அவளை தொட்டுவிடாத தூரத்தில், ஒன்றும் பேசாது அவள் காதோடு துடித்துக்கொண்டிருந்த ஜிமிக்கியை கண்கொட்டாமல் பார்த்தபடி பயணத்தைத் தொடர்ந்தான்.
இருவரும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே அவளுக்காகவே காலிப்பெட்டிகளை கோர்த்துக்கொண்டு விலாசத்தைத் துளைத்தபடி ரயிலொன்று நின்றுகொண்டிருந்தது.
“இதற்கு முன்பாக இந்த ரயிலை நான் பார்த்ததே இல்லையே?, உள்ளே யாரும் இல்லை? இந்த நேரத்தில் இது எங்கே போகிறது?”, தனித்து நின்றிருந்த அந்த ரயிலை பார்த்தபடி அவன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தான். அவன் கேட்டு முடிப்பதற்கும், மழை சட்டென நிற்கவும் சரியாக இருந்தது.
“நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் நீ பதில் கூறவில்லை, இந்த விளையாட்டைத் துவங்கியது நீ, இந்த இரவின் அடர்த்தியில் அத்துமீரியதும் நீதான்!
நீ யார், எங்கிருந்து வந்தாய், எங்கே செல்கிறாய் எதுவும் எனக்கு தெரியாது, நான் எழுத்தாளன் நீ வாசகி அவ்வளவு தான் இதுவரையில் எனக்கு தெரிந்திருக்கும் சேதி. இப்போதும் எனக்கு எந்தவொரு தகவலும் தேவை இல்லை, நீ போதும், உன் இருத்தல் போதும். இதுவரையிலும் இது காதல் தான்!”, அடைமழைக்கு பிறகான தனது இதயத்து இடி முழக்கத்தை அவளிடத்தில் கொட்டித்தீர்த்தான்.
ரயில் சிணுங்கியது.
“கேள்விகள் முடிந்ததா? முடிந்திருக்கத்தான் வேண்டும்”, அவள் அவன் பக்கம் திரும்பினாள்.
“நான் யார் என்பதை இதுவரையில் நீ கேட்கவில்லை, உனக்கு அது தேவையும் இல்லை. நான் பார்த்தவரையில் உன்னுடையது விசித்திர போதை, எழுதி முடிக்காத உன்னுடைய பல கதைகளில் தொக்கி நிற்கிறது உனது வாழ்க்கை! எக்காரணத்தினாலோ அவை உன்னை வெகுசீக்கிரத்தில் விடுவதில்லை. கரைகளில் மோதுகிற அலைகளுக்கு ஒருபோதும் ஓய்வு கிடைப்பதில்லை, அதுபோலவே உன் மனமும். இது நான் இல்லை, இந்த இருத்தலின் அர்த்தம் வேறு!”,
அவள் இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்க அவனுக்கு தலை சுற்றியது.
“எனக்கு ஒன்னும் புரியல, நீ எப்படி நீயாக இல்லாமல் போவாய்?”, அவன் அவளை ஒருகணம் கட்டியணைத்து உடலெல்லாம் தழுவினான், நெற்றியில் முத்தங்களை விதைத்தான்.
“எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது”, தனக்குள்ளாக முணுமுணுத்தான்.
“இதோ பார், நான் மறுபடியும் கூறுகிறேன், இது காதல் தான்!”, அவன் ரயிலின் சிணுங்களை கடந்து அலறினான்.
அவள் அவனிடம் நெருங்கினாள். தன் பார்வையை அவனிடத்தில் அசையாது நிலை நிறுத்தினாள்.
“இது காதல் இல்லை, காமம், முழுக்க முழுக்க காமம்!”, அவள் ரயிலேறி புறப்பட்டு சென்றாள்.
அவன் இடைவிடாது அலறி துடித்தான். மூளை நரம்புகள் வெடித்துச் சிதறுவது போல தோன்றியது. கண்களை மைஇருட்டு பூதம் விழுங்கியது.

மறுநாள் விடியலில்
“ஒன்னும் இல்ல சார், ஏதோவொரு கதைக்கு கிளைமாக்ஸ் எழுதிட்டு இருந்துருக்காரு, அது சரியா வரல, சோ அளவுக்கதிகமா DRUGS CONSUME பண்ணிருக்காரு, அதுபோக விடாம சுயஇன்பம் வேற! சோ RESULT ‘இல்லுஷன்’!
அதுனால தான் சுயநினைவில்லாம இருந்துருக்காரு. Tablets எழுதிருக்கேன் follow பண்ண சொல்லுங்க, continuous medication ல இருக்கணும், இல்லனா next time ரயில்வே track ல கூட கெடக்கலாம், BE CAREFUL”, மருத்துவர் அவன் நண்பனிடத்தில் விளக்கினார்.
“See, அவருடைய பாக்கெட்ல இந்த பேப்பர் இருந்துது”, செவிலியர் நனைந்த காகிதம் ஒன்றை நீட்டினாள்.
மழையில் நனைந்து, சுயநினைவின்றி கிழிந்துவிடும்படியாக இருந்த வெற்றுக்காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரே வார்த்தை

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!