காதல் படப் போட்டி கதை: பக்குவமான மனது 

by admin 2
49 views

எழுதியவர்: பிரகதாம்பாள்  

கந்தன் கடற்கரையில் உட்கார்ந்து இருந்தான். அவன் கண்களுக்கு எதிரே ஒரு துடிக்கும் இதயம் தெரிந்தது. கடற்கரையின் அலைகள் வந்து வந்து போவதை அவனால் ரசிக்க முடியவில்லை.. ஏனென்றால் , அவன் மனசுக்குள் அதே நிலைதான்.

அவளின் பெயர் நந்தினி. அவன் நெஞ்சுக்குள் செதுக்கிய அன்புப் பெயர். அவள் புன்னகைக்காக அவன் பகலிரவு போராடியவன். அவள் கண்களில் தெரிந்த ஓர் அர்த்தம், அவனுக்குள் காதலின் விதையை முளைக்கச் செய்தது. ஆனால், அவள் சொன்ன ஒரே வார்த்தை, அந்தக் கனவை சிதைத்துவிட்டது—

“நாம் நல்ல நண்பர்கள்தான்,”

அவன் எத்தனை முறை கேட்டாலும் அதே பதில்தான். ஆனால் அவன் மனது இன்னும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது. காதல் வேண்டுமென அவன் மனம் திறந்து சொல்ல  முடியவில்லை.

நிலவு மெதுவாக கடல்மேல் மிதந்து சென்றது. காற்று அவன் முகத்தை வருடியது. அவன் கண்களில் மறைந்து போன கனவுகள் மீண்டும் எழுந்தன.

“நீயே காதலை உணரவில்லை என்றால், நானே எப்படிப் புரிய வைக்க?”

அவன் புரிந்து கொண்டான். காதல் ஒருபுறத்திலிருந்து வந்தாலும், அது நிஜமாய் மாறவேண்டும் என்றால், இருவரும் அதே உணர்வில் இருத்தல் அவசியம்.

அவன் கடலை பார்த்தான். அழைக்கின்றது போல் இருந்தது. ஆனால் அவன் திரும்பி சென்றான். எதிர்காலம் அவனுக்காக இன்னும் ஒரு புதிய காதலை தரலாம் என்ற நம்பிக்கை மலர் பூத்தது.

காதல் வேண்டும்தான். ஆனால், அது பகிர்ந்து கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.

நாம் சந்திப்பவர்களை நாம் நேசித்தாலும் அவர்களுக்கு அந்த உணர்வு வரவில்லை என்றால் நாம் அவர்களை நீ என்னை கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது காதல் என்பது கட்டாயப்படுத்தி வருவதில்லை மனதுக்குள் தானாக மலரும் ஒரு அருமையான உணர்வு.

நந்தினி தன்னை  நிராகரித்த பிறகு கந்தன் இதை கண்டிப்பாக உணர்ந்து கொண்டான்.

நல்லவேளை காதலிப்பது போல் நடித்து கடைசியில் நான் உன் தோழி என்று சொல்லாமல் முதலிலேயே எனக்கு உன் மீது காதல் உணர்வு இல்லை என்று மிக அருமையாக தன் மனம் திறந்து பேசிய நந்தினியை அவன் பாராட்டினான்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று உணராமல் பார்த்தவுடன் காதல் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் காதல் நிலை உள்ளது.

ஆனால் கந்தன் அந்த மனநிலையில் இல்லை தன்னை பக்குவப்படுத்திக் கொண்டான். இனி காதலிப்பதற்கு முன்  யாரையும் யோசித்து காதலிக்க வேண்டும் என்று தீர்மானித்து புதிய வாழ்க்கையை தொடங்க தயாரானான். 

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!