எழுதியவர்: தஸ்லிம்
தேர்வு செய்த படம்: படம் 6
பரிதிக்கு அன்று விடிந்ததில் இருந்தே இருப்புக் கொள்ளவில்லை. இன்று அவன் மிகவும் எதிர்பார்த்த நாள். சீக்கிரமே தான் நினைப்பது நடக்கப் போகிறது என்று கர்வத்துடன் இருந்தான். அவசர அவசரமாக கிளம்பி தன் தாய் தந்தையையும் அழைத்துக் கொண்டு அவர்கள் மறுப்பையும் மீறி அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல் நீதிமன்றத்திற்குச் சென்றான். வெற்றிக் களிப்புடன் அவனின் வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவரும் இன்று அவன் நினைத்தது கண்டிப்பாக நடந்து விடும் என்று அவனின் அகந்தைக்கு தூபம் போட்டு கொண்டிருந்தார். நேரம் சென்றுக் கொண்டே
இருந்தது. ஆனாலும் அவன் எதிர்பார்த்த அந்த நபர் மட்டும் இன்னும் வந்தபாடில்லை.
சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு முதல் முதலில் தான் நீதிமன்றத்திற்கு எதற்காக வந்தோம் என்பது அவன் நினைவில் வந்து போனது. அதே சமயத்தில் அங்கு வருவதற்கு காரணமாக இருந்த ருத்ராவின் நினைவும் சேர்ந்து வந்தது.
ருத்ரா அவனின் காதல் மனைவி. இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்த போது இருவருக்கும் பிடித்துப் போக வேலையில் சேர்ந்ததும் வீட்டில் பேசி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
பெற்றோர்கள் கிராமத்தில் இருக்க இவர்கள் வேலைக் காரணமாக சென்னையில் தனியாக வசித்து வந்தார்கள். கொஞ்சலும் கெஞ்சலும், சீண்டலும் தீண்டலும், ஊடலும் கூடலும், காதலும் காமமுமென அவர்களின் உலகம் மிக சுவாரஸ்யமாகவே அவர்களுக்கு சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வருடங்களும் உருண்டோடி விட அதற்குப் பிறகான நேரம் தான் அவர்களின் சோதனை காலமாக தொடங்கியது. இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட அதில் ஊடல் மட்டுமே நிறைந்து இரக்க கூடலுக்கு வழியில்லாமல் இரண்டு பேருமே முட்டிக்கொண்டு நின்றனர். பெற்றவர்களும்
அருகில் இல்லாமல் சொல்லித் திருத்தவும் முடியாமல் அவர்களாகவும் பேசி சமாதானமாகாமல் சின்ன விஷயம் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழி வகுத்து நின்றது. அதுவரை குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் இப்பொழுது நல்ல வேல குழந்தை இல்லை என்று இருவருமே நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள் சண்டைகள் வலுத்தது. ஒரு கட்டத்தில் இதற்கு தீர்வு இல்லை என்று முடிவு செய்த பரிதி இருவரும் பிரிந்து விடலாம் என்று ருத்ராவிடம் சொன்னதும் தான் அவளுக்கு பிரச்சனையின் வீரியமே புரிய ஆரம்பித்தது. அதிலிருந்து அவளும்
விட்டுக் கொடுக்க தொடங்கினாள். ஆனால் எதற்கும் பரிதி இசைந்த பாடு இல்லை.
“இது சரிவராது! இது ஒர்க் அவுட் ஆகாது!” என்று தன் முடிவில் ஒரு உறுதியாக இருந்தான். ஒரு கட்டத்தில் ருத்ரா அவனிடம் கெஞ்சவே ஆரம்பித்து இருந்தாள். ஆனால் எதற்கும் அவன் செவிசாய்க்கவில்லை. கோபத்தில் அவன் வார்த்தைகளை விட அவள் அவனை பளார் என்று அறைந்து இருந்தாள். அவள் அடிப்பாள் என்று எதிர்பார்க்காத பரிதி உறைந்து போய் நின்று விட்டான். அதற்குப் பிறகு அவன் முடிவில் அவன் இன்னும் இறுகிப் போனான். அதற்குப் பிறகு அவன் பெற்றோர்கள் சொல்லியும் கூட காதில்
எதையுமே போட்டுக் கொள்ளவில்லை. தான் எடுத்த முடிவில் இன்னும் இறுகிப் போனான்.
அவளும் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று முடிவில் உறுதியாக இருந்தாள். தங்களின் காதலை மீட்டு எடுத்து விடலாம் என்று பெரும் நம்பிக்கையில் இருந்தாள். ஆனால் அவள் நம்பிக்கை எல்லாம் பொய்த்துப் போனது அவனிடத்தில். அவள் அழுகை அவ்வப்போது அவன் காதல் கொண்ட மனதை கரைத்தாலும் கூட தன்னை அறைந்ததில் ஆண் என்ற அகம்பாவம் காதலை நொறுக்கி விட்டது. தன்னை அடித்ததற்கு அவள் கண்டிப்பாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.
தற்போது நிகழ்காலத்தில் வந்தவன் இன்னும் ருத்ரா நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதை உணர்ந்து ஏன் இன்னும் அவள் வரவில்லை என்று நினைத்தவன் கண்களில் அவளின் வழக்கறிஞர் தென்பட அவரிடம் கேட்கலாம் என்று நகர்ந்தவனிற்கு அவர் சொல்லிக் கொண்டிருந்த செய்தி திகிலடைய செய்தது.
“என்ன சார் என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமா போன் பேசுறீங்க?” என்று கேட்ட அந்த வழக்கறிஞரின் ஜூனியரிடம்..
“ருத்ரம் மேடம் ஆட்டோல இங்க தான் வந்துகிட்டு இருந்தாங்களாம்.. எதிரில் வந்த லாரி மோதி அவங்க ஸ்பாட் அவுட். அங்க இருந்தவங்க லாஸ்ட்டா கால் பேசுன என் நம்பருக்கு கூப்பிட்டு சொல்றாங்க” என்று சொன்னதை கேட்டவனுக்கு உலகமே இருள் அடைந்தது போல இருந்தது.
அவளின் வேதனையை கண்கொண்டு பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து பெரும் ஆவலுடன் இருந்தவன் இப்பொழுது வேதனையில் துடித்துக் கொண்டிருந்தான். விதி வலியது.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.