காதல் பேசும் பிப்ரவரி: நள தமயந்தி 2024

by admin 2
31 views

எழுதியவர்: குட்டிபாலா 

சித்திரை மாதம் கத்தரி வெயில். சென்னை நகரத்தில் மெரினா பீச்சில் மாலை நேரம்.  பெருந்திரளான மக்கள் இலவசமாக காற்று வாங்கி சுவைத்துக் கொண்டிருந்தனர். மணலில் படுத்து நிர்மலமான ஆகாயத்தில் ஓடும் மேகங்கள் அவ்வப்போது முழு நிலவை மறைத்தும்  விடுத்தும் கண்ணாமூச்சி ஆடியதை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தார் நாராயணன்.
அப்போது அருகே வந்தமர்ந்த இளம் ஜோடி முதலில் கிசுகிசு என்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அந்த பெண் லேசாக அழும் சத்தம் அவர் காதில் விழவும்  அவர்கள் பேச்சை உற்றுக் கேட்கலானார்.
ஆண்: தவறு, தமா (தமயந்தியின் சுருக்கம் தற்காலத்திற்கு ஏற்ப).  பெற்றோர் சம்பந்தமில்லாமல் அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
பெண்: அப்படியென்றால் மூன்று வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கும் நாம் இன்னும் 30 ஆண்டுகளானாலும் காதலர்களாகவே இருக்க வேண்டியதுதான்.
ஆண்: ஏன் எதிர்மறையாகவே யோசிக்கிறாய்? இதுவரை உன்னைப் பெண் பார்க்க வந்த ஐந்து பையன்களை இப்போது திருமணம் வேண்டாமென்று நீ நிராகரித்ததிலிருந்தே உன் பெற்றோர் ஓரளவு புரிந்து கொண்டிருப்பார்கள். காத்திருப்போம்.
பெண்:  எவ்வளவு காலம் காத்திருந்தாலும் என் தந்தை உங்களை கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை உங்களிடம் ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன். நீங்கள்  புரிந்து கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை கல்யாணமே வேண்டாம் என முடிவு செய்து விட்டீர்களோ என்று குழப்பமாய் இருக்கிறது.
ஆண்: தமா, அதற்காக ஓடிப்போய் திருமணம் செய்யலாமென்று நீ சொல்லுவதை என்னால் ஏற்க முடியாது உன்னைத் தவிர்த்து வேறு திருமணம் செய்து கொண்டு விடுவேனோ என்று என்மீது உனக்கு சந்தேகமென்றால் நீ என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
பெண்: இல்லவே இல்லை. ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறோம். நாம் காதலிப்பது நம் அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியும். இன்னும் நாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் பலரும் பலவிதமாக கிசுகிசுப்பது உங்களுக்கும் தெரியுமே. சில சமயங்களில் வார விடுமுறைக்குப் பின் திங்கள் கிழமையன்று நாம் சேர்ந்து அலுவலகத்திற்குள் நுழையும் போது சிலரின் பார்வையையும் மறைமுகமாக சிலர் தங்களுக்குள் கண்ணடித்து ஜாடை காட்டி நக்கலாக சிரிப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை. நமக்காக இல்லாவிட்டாலும்
ஊருக்காகவாவது நாம் விரைவில் திருமணம் செய்து கொண்டேயாக வேண்டும். உங்கள் பெற்றோர் சம்மதித்து வெகு நாட்களாகிவிட்டன. பிடிவாதம் பிடிக்கும் என் பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்தால் நான் ஔவையாராகி விடுவேன்.
ஆண்: (சிரித்தபடி) பரவாயில்லை. நீ ஔவையாரானாலும் நான் காத்திருப்பேன்.
பெண்:(கோபத்துடன் எழுந்து)  காதலிக்க தொடங்கும் முன்பே உங்களிடம் ஜாதகம் உள்ளதா என்று கேட்காதது என் தவறுதான். நான் வருகிறேன். ஜாதகம் உள்ளதா என்று அவள் கேட்டதும் காதுகளை தீட்டிக் கொண்டு அந்த ஆணுடைய பதிலைக் கேட்க ஆவலாக காத்திருந்தார்  நாராயணன்.
ஆண்: நான் என்ன செய்ய முடியும் அதற்கு? கொட்டும் மழையில் நடு இரவில் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே நான் பிறந்து விட்டேனாம். ஏதோ பிறந்த நாளாவது சரியாக தெரிந்ததே என்று என் பெற்றோரும் நானும் திருப்தி அடைந்துள்ளோம். அதனால் ஜாதகம் இல்லை. உன் தந்தை ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் என்பதில் இவ்வளவு பிடிவாதமாக இருப்பார் என்பதை நீ
முதலிலேயே சொல்லியிருந்தால் நானும் உன்னை காதலிக்காமல் இருந்திருப்பேன்.

பெண்: “இதற்கு முடிவே கிடையாது என்று நினைக்கிறேன். நான் முடிவு செய்துவிட்டேன். ஒரு மாதமோ ரெண்டு மாதமோ பொறுத்து பார்ப்பேன். இல்லையென்றால்…..” என்று நிறுத்தினாள்.
ஆண் :இல்லையென்றால் என்னை விட்டு பெற்றோர் பார்க்கும் பையனை மணந்து கொள்ள போகிறாயா?
பெண்: (முகத்தில் கோபம் கொப்பளிக்க)சீ சீ. அது ஆண்கள் செய்வது. காதல் தோல்வியால் இளம் பெண் தற்கொலை என்று பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் போட்டோவோடு செய்தி வரும்போது உங்களுக்கு புரியும். நான் கிளம்புகிறேன்.
ஆண்; (அவள் கையைப்பிடித்திழுத்து) சராசரி பெண் போல நீயும் பேசாதே. இருவரும் ஐபிஎஸ் தேர்வு எழுதியிருக்கிறோம். ஒரு வருங்கால ஐபிஎஸ் அதிகாரிபோல் தைரியமாக இருப்பதைவிட்டு கோழையைப் போல பேசுகிறாயே! எல்லாம் விரைவில் சரியாகிவிடும். வா போகலாம்.
நம்புவோம் நாராயணனை என்று எழுந்தான் படுத்திருந்த நாராயணன் எழுந்து அவர்களிடம் தன் விசிட்டிங் கார்டை கொடுத்து “நானும் நாராயணன் தான். நீங்கள் இருவரும் பேசியதை ஒட்டு கேட்டது தப்புதான். ஆனால் என்னால் உங்கள் குழப்பத்தை தீர்க்க உதவ முடியும் என்று நினைக்கிறேன்.
நாளை மாலை என் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள் நான் ஒரு ஜோசியர். எங்கள் பரம்பரையே ஜோசியர்கள்தான். நான் தாசில்தாராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். ஜோசியம் பார்ப்பதை ஒரு சேவையாக செய்து வருகிறேன் உங்கள் பிறந்த நாளை ஆதாரமாகக்கொண்டு உங்கள் ஜாதகத்தை கணிக்க முடியும் அதன் பிறகு உங்கள் திருமணமும் உங்கள் விருப்பப்படியே பெற்றோர் சம்பந்தத்தோடு நடக்கும் என்றதும் இருவரும் குனிந்து அவர் காலைத் தொட்டு கும்பிட்டனர். மறுநாள் மாலை இருவரும் வந்தபோது தமயந்தியிடம்  அவளுடைய ஜாதகத்தை வாங்கிக் கொண்ட நாராயணன் அந்தப் பையனிடம் (கோகுல்) அவனுடைய பிறந்தநாளையும் அவனுக்கு தெரிந்தவரை பிறந்த ஊர், சுமாரான நேரம் போன்ற விவரங்களையும் பெற்றுக் கொண்டார்.
அந்த வாரக்கடைசியில் மதுரையில் தமயந்தியின் வீட்டிற்கு கோகுலின் ஜாதகத்தோடு சென்றார். வாயிற் கதவைத் திறந்த பாலகிருஷ்ணனிடம் “டேய் பால்கி, இது உன் வீடா? அப்போ தமயந்தி” என்று நிறுத்திய நாராயணனிடம் “அவள் என் ஒரே மகள். அவளை உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டார் பால்கி என்ற பாலகிருஷ்ணன். “உன் பெண் தமயந்தியின் ஜாதகமே கையில். அவளுக்கேற்ற நளனுடைய
ஜாதகத்தோடு வந்துள்ளேன். ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் என்று அவள் காதலுக்கு தடை போடுகிறாயாமே? என்று கோபத்தோடு கேட்ட நாராயணனை கையைப் பிடித்து தரதரவென்று தனி அறைக்கு இழுத்துப் போனார் பால்கி.
இருபது நிமிடங்கள்  சென்று அறையிலிருந்து வெளியே வந்த பால்கி, “நாராயணா, நீ என் நண்பன் மட்டுமல்ல. ஜோசிய பரம்பரையில் வந்தவன். நீ பொருத்தம் பார்த்து சொன்ன பிறகு எங்களுக்கு என்ன கவலை. வருகிற வைகாசியிலேயே முகூர்த்தம் பார்த்து தமயந்தி-கோகுல் திருமணத்தை ஜாம் ஜாம் என்று முடித்து விடுவோம்” என்றார்.
“என்ன கல்யாண பேச்சு அடிபடுகிறதே?” என்று கேட்டபடி வந்த மனைவி சீதாவிடம் “இது என் பால்ய நண்பன் நாராயணன். தாசில்தாராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். பரம்பரை ஜோசியர். நம்முடைய திருமணத்திற்கே ஜாதகப் பொருத்தம் பார்த்து சொன்னவன். இன்று நம் தமயந்திக்கு நல்ல பொருத்தமான ஜாதக வரனோடு வந்திருக்கிறான்” என்றதும் “திருமணம் ஜாதகப் பிரச்னையினால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதே என்று கவலைப்பட்டேன். இப்பொழுதுதான் கடவுள்
கண்ணைத் திறந்துள்ளான்” என்று சொல்லி நாராயணனை கும்பிட்டாள் சீதா. பாவம் அவளுக்கு தெரியாது- அவள் தந்தையின் பிடிவாதத்தால் பாலகிருஷ்ணன் விரும்பியபடி அவளுடைய ஜாதகத்திற்கு பொருத்தமாக பால்கியின் ஜாதகத்தை தயாரித்து அவர்கள்  திருமணத்தை நடத்தி வைத்தது இதே நாராயணன் தான் என்று. தமயந்திக்கும் கோகுலுக்கும் தெரியாது– இந்த உண்மையை சொல்லி மிரட்டித்தான் பால்கியை தங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார் நாராயணன் என்று.
தான் செய்தது சரியா தவறா என்று குழப்பம் வரும்போதெல்லாம் வாய்மை எனப்படுவது யாதொன்றும் தீமை இலாது சொல்வது தானே என்று தனக்குத்தானே தேற்றிக் கொள்வார் நாராயணன்.

ஜாதக குழப்பத்தால் தன் காதலில்தான் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் கண்ணியமான காதலர்களை சேர்த்து வைக்க தன் ஜோசிய திறமை மூலமாக சேவை செய்ய முடிகிறதே என்று மகிழ்கிறார் நாராயணன்- மீண்டும் அதே மெரினாவில் மணலில் படுத்துக்கொண்டு வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!