எழுத்தாளர் பெயர்: யாஸ்மின்
அன்புள்ள மச்சானுக்கு!
என்னுடைய அம்மா எனக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் சென்னைக்கு கிளம்பி வரதா முடிவெடுத்திட்டேன். நாம அங்கேயே திருமணம் செய்துக்கொள்ளலாம் மச்சான். என்னால உங்கள விட்டு வேறொருத்தர கனவிலும் நினச்சுப் பார்க்க முடியாது. நீங்க இல்லையென்றால் நான் செத்துருவேன். சின்ன வயசில இருந்து நீங்க தான் என் புருஷன்னு நினைச்சே வளந்திட்டேன். இப்ப எப்படி…….. என்று வாக்கியத்தை முடிக்காமல் தொடர் புள்ளிகளுடன் நிறுத்தியிருந்தால். இதயமும் கண்களும் கலங்கிய நிலையில் அவளின் கண்ணீர் துளி பேனா மையோடு கரைந்து அவளது மனநிலையை ஜெய் சூர்யாவிற்கு கூறியது. கடிதத்தை படித்த உடன் என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. கண்டிப்பா நான் வந்து மாமாகிட்ட பேசி உன்னை கல்யாணம் செய்கிறேன். அதுவரைக்கும் மச்சானுக்காக பொறுமையா இருடி. என் உயிரே நீ தானடி. அனாதையா இருக்கிற எனக்கு உன்ன விட்டா யாருடி இருக்கா. நான் வரவரைக்கும் என்ன நினைச்சிக்கிட்டே இருடி என்று, ஆயிரம் முத்தங்கள் எங்கே இடுவது? என்று குறும்பாக கேள்வியொன்றை கேட்டு பதில் கடிதம் அனுப்பினான்.
………….
சூர்யாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் மூத்த பெண் பிள்ளை. அவளுக்கு பிறகு இரண்டு தம்பி மற்றும் ஆறு தங்கை. வீடே வறுமையில் இருக்கும் போது, பிள்ளைகள் செல்வம் மட்டும் நிரம்பி இருக்கும். அந்தக்காலத்தில் ஒரு வீட்டில் ஏழு பிள்ளைகள் என்பது சர்வ சாதாரணமே. வறுமையின் காரணமாக 50kg தாஜ்மகால் தான் அவள். குணத்தில் சொல்லவே வேண்டாம். அவளிடம் பழக யாருக்குத்தான் பிடிக்காது. மூத்த பெண் பிள்ளை அல்லவா… குடும்ப பொறுப்புகளை உணர்ந்தவள்.
ஜெய் சூர்யாவிற்கு 8 வயது இருக்கும் போது அவனுடைய அம்மா தன் தம்பியிடம் சூர்யாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி இறந்து போனார். அன்றிலிருந்து இன்னாருக்கு இன்னார் தான் என்று ஊருக்கே தெரியும். என்னடி சூர்யா உன் புருஷனை பார்க்கவா இங்கே வந்திருக்க என்று கேலியாக திண்ணைப்பாட்டி அவளை கிண்டல் செய்வதுண்டு.
பருவ வயதில் வருகின்ற காதலை விட பிஞ்சு வயதில் வருகின்ற காமமில்லா காதல் மிகவும் அழகானது. அதனை அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே புரியும் அந்தக் காதலின் ஆழம்.
இருவரும் வளர வளர ஒருவரையொருவர் புரிந்து விரும்ப ஆரம்பித்தனர். சிறு வயதிலே தாய் இல்லை, தகப்பனின் மறுமணம். ஆகையால் கிடைத்த இடத்தில் கூலி வேலை, சாப்பாடு என்றும் தன்னவளின் நினைப்பிலும் நாட்களை நகர்த்தினான்.
தன் அக்காவிற்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த கண்ணன் தன் மனைவியின் விருப்பம் இல்லாமல் தன் மகளுக்கு ஜெய் சூர்யாவை திருமணம் செய்து வைத்தார். மிக அழகாக எளிமையாக இருவரின் இதயமும் இணைந்தது ஊராரின் சாட்சியாக…..
பல நாள் கனவான நிஜ இரவு அன்று ஆயிரம் முத்தங்கள் எங்கே இடுவது என்று ஆசைப்பார்வையிலே அவன் கிரக்கமாக கேள்வி கேட்க, அதற்கு பதிலாக காத்துக்கொண்டிருந்தது அவனவளின் இதழ்கள். இருவரின் ஆசைகளும், ஏக்கங்களும் இனிதே நிறைவேறின இடைவெளி இல்லாமல்.
சூர்யா பசிக்குதுடி என்று அவன் கேட்க மச்சான் இப்போதான சாப்பிட்டீங்க அப்புறம் என்ன என்று அவள் கேட்க, அவன் மறுபடியும் கிரக்க குரலில் பசிக்குதுடி என்று கூற தன்னவனின் பசிக்கான உணவை புரிந்துக் கொண்டவளுக்கோ வெட்கம் பாடா படுத்தியது.. பசியாறி பசிக்க வைத்து பசியாற்றியே புதுமணத் தம்பதிகளுக்கு நாட்கள் கடந்தன.
வறுமையிலும் காதலில் இருவரும் பணக்காரர்களே. அடுத்த பத்தாவது மாதத்திலே இருவரின் கைகளில் அவர்களின் காதல் பரிசாக ஆண் குழந்தை. அவனுக்கு இதயன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு மாதம் கழித்து சூர்யா மச்சான் நான் மறுபடியும் என்று தன் வயிற்றில் தன்னவனின் கை வைத்து இழுக்க….. ஜெய் சூர்யா புரிந்து கொண்டான் தன் மனைவியின் மீது கொண்டுள்ள காதலை வெளிப்படுத்தியத்தின் விளைவு என்று…. முதல் குழந்தைக்கு பால் மாவு வாங்க கூட பணமில்லா நிலையில் தங்களுக்கு இரண்டாவது குழந்தையா என்று இருவரும் யோசிச்சு இறைவன் விட்ட வழி என்று பெற்றெடுத்தனர் பெண் குழந்தையாகிய இளவரசியை.
நாட்கள் ஓடின இருவரின் காதலும் கடமையாக மாறிப்போனது. ஜெய் சூர்யாவோ பொறுப்பில்லாமல் சுத்த, மனைவியோ குழந்தைகளை வளர்ப்பதில் கவலை கொள்ள இருவரின் காதல் குறைந்து அவ்வப்போது சண்டைகளாக மாறின. ஆனாலும் இருவரின் இதயமும் ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டே இருந்தன.
தன் மச்சான் வெளிநாட்டிற்கு சென்றால் தன் குடும்பம் முன்னேறும் என்று எண்ணியவள் மிகவும் சிரமப்பட்டு அவனை பாலைவன தேசத்துக்கு அனுப்பி வைத்தாள். தன்னவனின் முகம் பார்த்தே ஆயுளை கழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவள் அவன் குரல் கேட்டால் போதுமென்று ஏங்கி நிற்பாள் பக்கத்து வீட்டு தொலைப்பேசி முன்பு. அப்போதெல்லாம் தெருக்களில் யாராவது ஒருத்தர் வீட்டில் மட்டும் தான் தொலைபேசி இருக்கும். வீட்டில் சுற்றி ஆட்கள் இருக்கும் போது கொஞ்சியா பேசிட முடியும். நலம் விசாரிப்பு மட்டுமே, ஆனாலும் இதயங்கள் பேசும் அதனை அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
மச்சான் வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா என்று அவள் கவலையுடன் கேட்க, கஷ்டமாகத் தான் இருக்குடி. பாலைவன மண்ணில் உன்னையும் நம் பிள்ளைகள் முகத்தையும் நினைச்சிக்கிருவேன். அப்போ கஷ்டம் பெரிசா தெரியாதுடி. சூர்யா முதல் நான்கு மாதம் சம்பளம் கம்பெனியில் புடிச்சிக்கிருவாங்க. என்னால பணம் அனுப்ப முடியாது. நீ என்ன பண்ணுவ செலவுக்கு என்று அவன் கவலையாக கேட்க, நீங்க கவலைபாடாதீங்க மச்சான் நான் பார்த்துகிறேன். நான் தான் தைக்கிறேனே அத வச்சி சமாளிச்சிக்கிறேன் என்று தன்னவனுக்கு ஆறுதல் கூறினாள். அவளுக்குத்தான் தெரியும் தன் பிள்ளைகளுக்கு அரை வயிறு சாப்பாடு கொடுத்து தான் பட்டினியாக இருப்பது. நீ என்ன நினைச்சு கவலைப்படாத. உன் உடம்ப பார்த்துக்கோ. மத்ததெல்லாம் கடிதத்தில எழுதுடி என்று சொல்லி போனை வைத்தான்.
விடிய விடிய அவளவனுக்கு கடிதம் எழுதுவதில் அவளுக்கு அவ்வளவு பிரியம்.
கப்பலுக்கு போன மச்சான்,
கண் நிறைந்த ஆசை மச்சான்
எப்பதான் வருவீங்க எதிர்பார்கிறேன்.
என்று பாடலின் வரிகளில் ஆரம்பித்து அன்று நடந்த அத்தனை விஷயங்களையும் எழுதிடுவாள். தன்னுடைய ஆசை, ஏக்கங்கள், எதிர்பார்ப்பு அத்தனையும் மச்சான், மச்சான் என்று சொல்லியே எழுதிடுவாள்.
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும்
உயிர் வாழ்வதெங்கே?
என்று பாடலின் வரிகளிலே கேள்வி கேட்டு கடிதத்தை முடித்து அனுப்பி வைத்திருந்தாள்.
வறண்ட பூமி முழுவதும் அவள் வாசம் வீசும் அவளிடமிருந்து கடிதம் பெற்ற பிறகு. ஆசையுடன் கடிதத்தை படிக்கும்போதெல்லாம் அவளுடைய ஏக்கங்கள், தவிப்புகள், எல்லாம் அவனை பாட படுத்தி விடும்.
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி
எண்ணைக் கிணறு போல எண்ணம் எல்லாம் ஊறுதடி
உன்னை அங்க விட்டு வந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்க உயிர் அங்கு வாழுதடி
பாலைவனம் எல்லாமே சோலை வனம் ஆகுதடி
பாயரது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்கிறது பைங்கிளியே எதுக்கடி?
பாவை உனக்கு அல்லாமல் பாரிலே யாருக்கடி?
என்று பாட்டிலே பதில் கடிதம் எழுதி அனுப்பிடுவான். அப்போதெல்லாம் கடிதம் மற்றும் கேசட்டுக்களில் குரல் பதித்து அனுப்புவார்கள். இப்படியே இருவரும் காதலை வெளிப்படுத்தியே மூன்று வருடங்கள் கடந்தது.
தன்னவனின் காதலிலே மயங்கியவள் தனக்கு உண்டான நோயை அவனிடத்தில் தெரியப்படுத்தவில்லை. தெரிந்து கொண்டால் ரொம்ப கவலைப்படுவான் என்று அதனை மறைத்து வைத்தாள். அப்படியிருந்தும் தொலைபேசியில் பேசும் போது அவன் கண்டு கேட்டல் வேறு காரணம் சொல்லி சமாளிப்பாள். மச்சானின் திருமுகம் காணவே உயிரை சுமந்து இருந்தவள் கடைசியாக அவனுக்கு கேசட்டில் மச்சான் எப்போ வருவீங்க? உங்கள பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. சீக்கிரம் வாங்க என்று குரல் பதித்து,
வாய்மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?
என்ற பாடலை அதனுடன் சேர்த்து அனுப்பி வைத்தாள். அவளின் உடல் நிலை நாளுக்கு நாள் சரியில்லாமல் போனது. தன்னவனின் அருகாமையை விரும்பிய அவளுக்கு தீர்க்கமாக எழுதி முடிக்கப்பட்ட விதியாகிய மரணம் அவளைத் தழுவ அவன் முகம் காணா கண் மூடினாள். அவள் இறந்த செய்தி தெரு முழுவதும் பரவியது. தாய் இல்லா அவளுடைய இரண்டு குழந்தைகளைப் பார்த்து ஊரே பரிதவிச்சது. அவளுடைய மச்சானுக்கோ தந்தி கொடுக்கப்பட்டது.
இறந்த பிறகும் நம்மால் நம்மை சுற்றியுள்ளவர்களை பார்க்க முடியும். அவள் மையமாக இருக்கும் போதும், அவள் இதயம் துடிப்பதை நிறுத்திய பிறகும் அவள் எதிர்பார்த்ததெல்லாம் அவளவனின் திருமுகமே.
மூன்று வருடங்களித்து தன்னவன் வரும்போது அவனுக்கு பிடித்த புடைவைக் கட்டி தனக்கு பிடித்த பிச்சிப்பூ சூடி இன்முகத்தோடு அவனை வரவேற்க வேண்டும். ஆசை ஆசையாய் சமைத்து தன் கையால் மச்சானுக்கு ஊட்டி விட வேண்டும். மூன்று வருட இரவின் ஏக்கங்களை தீர்த்து நீராடிட வேண்டும் என்று ஆசைக்கொண்டவளின் உடலை நான்கு பேர் சேர்ந்து குளிப்பாட்டி அவளின் உடலை மண்ணுக்கு தாரைவார்த்தனர்.
மனைவி இறந்த செய்தி கொண்ட தந்தியை கம்பெனி அவனிடம் கொடுக்க மறக்க, அவனவளின் இதயம் மண்ணுக்குள் புதைந்து ஒரு வாரமாகியும் அவளவனின் இதயம் செய்தி தெரியாமலே அவளுக்காக துடித்துக் கொண்டிருந்தது.
சூர்யா உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கு உங்க ஊர்ல இருந்து என்று செய்தியை கொடுக்க அதனை பிரித்து பார்த்தவனுக்கோ இதயம் உறைந்து போனது. என் மனைவி இறந்த செய்தியை ஏன் என்னிடம் தாமதமாக சொல்லுறீங்க என்று கம்பெனி நிருவாகத்திடம் சண்டை போட்டான். இருந்தும் என்ன பிரோயஜனம் இனி அவள் முகம் எப்போதுமே அவனால் காண முடியாதே!
விரைந்து ஊருக்கு புறப்பட்டான். வருகின்ற வழியெல்லாம் அவளின் நினைப்பு, சின்ன வயதில் அவளுடன் விளையாடியது, வாலிப வயதில் காதல் கடிதம் பரிமாறிக் கொண்டது, முதலிரவில் அவள் வெட்கம், அவளின் கூடல், ஊடல் இதெல்லாம் அவன் நினைவலைகளிலிருந்து அவனுக்கு அவளை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. ஊர் வந்து சேரும் வரையிலும் தன்னை மறந்தவனாக, உண்ண மறந்தவனாக, கண்கள் இரண்டிலும் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது. அவள் மறைவு அவனை பைத்தியக்காரனைப் போல உணரவைத்தது. ஊர் வந்து சேர்ந்ததும் அழுது புலம்பி முடித்திருந்தான். எவ்வளவு அழுதாலும் தீராத வலியாகவே அவனுள் இருக்கும் அவளின் மறைவு.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.