சித்திரை திருவிழா போட்டிக்கதை: இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்

by admin
129 views

எழுத்தாளர்: அ. கௌரி சங்கர்

அப்பொழுது தான் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து வந்து சேர்ந்தது. அதில் இருந்து நன்றாக உடை அணிந்து, தோளில் தொங்கும் கனத்த பையுடன் இறங்கிய  ஒரு இளைஞன் மெதுவாக அருகிலிருந்த தேநீர் கடையை நோக்கி செல்லவும், அவனை  சிறிது நேரம் உற்று நோக்கிய கடைக்காரர், “என்னப்பா, நம்ம கணேசன் பையன் சந்திரன் மாதிரி இருக்குதே?” என்று கேள்வி கேட்கவும், “ஆம்” என்று தலையாட்டிய சந்திரன் அவனுக்கு கொடுக்கப்பட்ட கண்ணாடி டம்ளரிலிருந்த தேநீரை மெதுவாக உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தான்.

……

அரசன்பட்டி – ஒரு சிறிய ஊர். சரியாக இரண்டு சிறிய நகரங்களை இணைக்கும் சாலையின் மத்தியில் உள்ள ஊர். ஊரின் பிரசித்தமே –  அந்த ஊரின் எல்லையில் உள்ள பேருந்து  நிறுத்தம் தான். அதுவும் சமீப காலமாகத்தான். எத்தனை எத்தனை போராட்டங்கள் நடந்தன. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்  நடந்த போராட்டங்களுக்கு பின்னர் தான், பேருந்துகள் நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த ஆறு மாதங்களாகத்தான்  அந்த பேருந்து நிறுத்தத்தில் பெரும்பான்மையான பேருந்துகள் நின்று செல்லுமாறு அங்குள்ள மக்கள் செய்து விட்டார்கள். அவர்களை பொறுத்தவரையில் அதை ஒரு பெரிய சாதனை என்றே சொல்லலாம்.

ஊரின் மொத்த மக்கள் தொகையே ஐநூறு தான். நான்கே நான்கு தெருக்கள் தான். பிரதான சாலையின் இடது புறம் ஒரு பெரிய கண்மாய். கண்மாய் தண்ணீர் தான் அந்த ஊர் மக்களுக்கு, ஆடுகளுக்கு, மாடுகளுக்கு, கோழிகள் மற்றும் இதர ஜீவன்களுக்கு. வருடத்தில் ஆறு மாதங்கள் கண்மாயில் தண்ணீரை பார்க்கவே முடியாது. கண்களுக்கு எட்டிய வரை கட்டாந்தரையாகவே தெரியும். கண்மாயின்  கரையில்  இருந்து ஒரு பனை ஆழத்திற்கு மெதுவாக மெதுவாக இறங்கிச்சென்று, கண்மாய் நடுவில் தோண்டப்பட்ட சின்ன சின்ன ஊற்றுகளிலிருந்து தான் தண்ணீர் எடுக்கவேண்டி வரும்.

கண்மாயின்  இடது புறம் அமைந்துள்ள குடியிருப்பில் வசிக்கும் நூறு நபர்களுக்கு படிப்பு வாசனை என்பது அறவே இல்லாத நிலையில், வலது புறம் அமைந்துள்ள பகுதிகளில் தான் ஐந்தாவது,  ஆறாவது மற்றும் பத்தாவது வரை படித்தவர்கள் என்று நூறு நபர்கள் வரை இருக்கிறார்கள்.  பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த ஐம்பது நபர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள்  சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு வேலை நிமித்தம் சென்று அங்கேயே தங்கி விட்டவர்கள்.

வேலைக்கு விண்ணப்பங்கள், குடும்ப அட்டைகள் வாங்குவதற்காண விண்ணப்பங்கள் போன்றவை எழுதுவதற்கும், தயாரிப்பதற்கும் அந்த கிராமத்தில் வசித்தவர்கள் அணுகுவது தெற்கு தெருவில் இருக்கும் குருசாமியையும், மேலத்தெருவில் இருக்கும் மாடசாமியையும் தான். பத்தாவது வரை படித்தவர்கள் சிலர் இருந்தாலும், அவர்கள் மெனக்கெட்டு மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் எழுத முன்வருவதில்லை. அதில் வரும் வருமானம் மிகவும் குறைவு என்பது அவர்கள் எண்ணங்களாக ஒரு புறம் இருக்க,   பலருக்கு முறையாக விண்ணப்பங்கள் எழுதவும் தெரியாது மற்றும் அதற்கான மெனக்கெடலை செய்வதற்கும் தயங்குபவர்கள் அவர்கள்.

குருசாமிக்கு வயது அறுபது. ஒரு சாலை விபத்தில், காலில் காயம் ஏற்பட்டு அதிகம் நடக்க முடியாததால் வீட்டிலேயே தங்கி விட்டவர். என்றாலும் தனக்கு தெரிந்த எழுத்துப்பணியை அவர் சிறப்பாகவே செய்து வந்தார். விண்ணப்பங்கள் எழுதி வாங்கிக்கொண்டு  பணம் கொடுத்துவிட்டு செல்பவர்களும் உண்டு; கொடுக்காமல் செல்பவர்களும் உண்டு. பணம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்ளுவார். மகன் செல்வராஜ் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு  ஒரு நாளைக்கு அவரது வருமானம்  இருநூறுக்கு குறையாமல் இருந்தால் தான் மரியாதை.

இவருக்கு நேர் எதிர் குணங்கள் கொண்ட  மாடசாமி  குருசாமியை காட்டிலும் அதிகம் படித்தவர் மற்றும்  விபரங்கள் அதிகம் தெரிந்தவர் என்றாலும், கறார் பேர்வழி. பணத்தோடு வந்தால் மட்டுமே அவரிடம் காரியம் நடக்கும் – இல்லையென்றால் அவரே வாசல் வரை வந்து குருசாமி வீட்டிற்கு போவதற்கு  வழியும் சொல்லிவிடுவார்.

அந்த ஊரிலிருந்து  இடது புறம் செல்லும் சிறிய தார் சாலையில் சென்றால்  இரண்டு ஊர்களுக்கும், வலது புறம் செல்லும் சிறிய தார் சாலையில் சென்றால், வேறு இரண்டு ஊர்களுக்கும் செல்ல முடியும். கிட்டத்தட்ட ஆயிரம் மக்களுக்கு அந்த பேருந்து நிறுத்தம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அந்த கிராமங்களை பொறுத்தவரையில், விவசாயம் முக்கியமான தொழில் என்பது ஒரு புறம் இருக்க,  அதைத்தவிர்த்து பனை மரங்கள் அதிகம் உள்ளதால், பனங்கள் இறக்குவது, பதநீர் விற்பது, நுங்குகள் விற்பது, பனை ஓலைகளில் தட்டிகள் போன்றவைகள் செய்வது போன்ற சிறு சிறு தொழில்கள் தான் நடந்து கொண்டிருந்தன. பத்தாம்  வகுப்பு படித்தவர்கள் கூட ஒரு கால கட்டத்தில் தங்கள் படிப்பை மறந்து கண்மாய் வெட்டுவது, சாலைகள் போடுவது, மண் அள்ளுவது, கல் உடைப்பது போன்ற தொழில்கள் செய்து அன்றாடம் காட்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். .

ஊரின் வழியாகச்செல்லும் அந்த இணைப்பு சாலையின் நீளமே இருநூறு  மீட்டர்கள் தான். சாலை ஊருக்குள் நுழையும் இடத்தில் தான் மாயாண்டி ஒரு சின்ன தட்டு வீடு ஒன்றை கட்டி, ஊருக்கு வருகின்ற மக்களுக்கு குறி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் வீட்டின் ஓரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழே உடைந்த நாற்காலிகளும், அழுக்கேறிய பெஞ்சுகளும் கிடக்கும். முதல் பேருந்து காலை ஐந்து  மணிக்கு வரும்.  அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இரண்டு திசைகளிலும்  பேருந்துகள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். ஆலமரத்தின் கீழே தினமும் முப்பது நபர்களுக்கு குறையாமல் குறி கேட்பதற்கு வந்து அமர்ந்திருப்பதை காணலாம். அந்த தட்டு வீட்டை அடுத்து தான் பேருந்து நிறுத்தம் இருந்தது. இடது புறம் கண்மாய். வலது புறம் பேருந்து நிறுத்தம். மக்கள் போக்குவரத்து அதிகம் என்பதால், கிட்டத்தட்ட ஐந்து தேநீர் கடைகள் இங்கும் அங்கும் பரவிக்கிடந்தன. அங்கிருந்த ஒலிபெருக்கிகளில் இருந்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும். இடது கையில் எழுத்துக்கூட்டி அன்றை தினசரியை படிப்பவர்கள் பத்து பேர்களாவது இருப்பார்கள். நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும், தேநீர் அருந்திக்கொண்டும், அரசியல் பேசிக்கொண்டிருப்பவர்களும் நிறைய நிறைய இருந்தார்கள். இணைப்புச்சாலை  முடியும் இடம் தான் கண்மாயின்  ஒரு கரையும் முடியும் இடம். வலது புறம் சாலை வளைவில் இருந்தது அம்மன் கோவில்.

ஊரில் இருந்ததோ ஒரு சிறிய பள்ளிக்கூடம். ஐந்தாவது வரை பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். சில நேரங்களில் ஒரே ஒரு ஆசிரியர் தான் இருப்பார். எவரும் பிள்ளைகளின் படிப்பைப்பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலங்களைப்பற்றியோ அதிகம் கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. பிள்ளைகளை படிக்கவைக்கவேண்டும் என்று விரும்பியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாகலாபுரம் என்ற சிறிய நகரத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.

……

தேநீர் குடித்துக்கொண்டு இருந்த சந்திரனை கேட்டார் கடைக்காரர்.

“என்ன தம்பி பண்ணுறீங்க?”

“நான் சென்னையில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வேலை தேட ஆரம்பித்திருக்கிறேன்.”

“வேலை கிடைச்சுருமா, தம்பி?”

“நிறைய படிக்கணும்; நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும். உதாரணமா பத்தாயிரம்  பேர் தேவைப்படுற வங்கி குமாஸ்தா வேலைக்கு பதினெட்டு  லட்சம் பேர் பரீட்சை எழுதுவாங்க; முதலில் ஒரு பரீட்சை எழுதி அதில் பாஸ் ஆகி; அதுக்கு அப்புறம் இன்னொரு பரீட்சை எழுதணும். இப்படி எழுதி எழுதி நிறைய மதிப்பெண்கள் வாங்கினால் தான் அந்த பத்தாயிரம்   நபர்களிலே ஒருத்தராக நாம் வர முடியும்.”

“அப்படி எதாவது பரீட்சை எழுதியிருக்கீங்களா?”

“எழுதினேன்; தேர்வாகவில்லை.”

“அப்புறம் என்ன செய்யப்போறீங்க தம்பி?”

“இனிமே தான் யோசிக்கணும்; ஊரிலேயே ஏதாவது  செய்யலாம்னு பார்க்கிறேன்.”

கடைக்காரர் அவனை ஒரு மாதிரியாக  பார்த்தார். படித்து முடித்து விட்டு, வேலையை தேடி தேடி அலைந்து அலைந்து கடைசியாக ஒரு வழியாக பனை ஏறுவதற்கும், கண்மாய் வெட்டுவதற்கும், மண் அள்ளுவதற்கும் வந்து சேர்ந்தவர்களில்  இவனும் ஒருவனாக மாறிவிடுவானோ என்ற சந்தேகம் அவர் மனதில் மின் வெட்டு போல வந்து போனது.

“எல்லாம் காலம்; இந்த கிராமங்களுக்கு  எப்போது விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை” – அவரது மனம் கனக்கத்தொடங்கியது.

……

சந்திரனுடைய  ஊர் அங்கிருந்து இரண்டு  கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. இடது புறம் செல்லும் சாலையில் நடந்து சென்றால் அரை மணி நேரத்திற்குள்ளாக சென்று விடலாம்.

“தம்பி, எப்படி போகப்போறீங்க; பசங்களை வண்டி கொண்டு வரச்சொல்லட்டுமா?” அந்த ஊரில் படித்தவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து விடவேண்டும் என்று துடியாய் துடித்தாலும், ஒன்று  அல்லது இரண்டு பேர் தான் பட்டப்படிப்பு வரை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு நடந்து வந்து கருப்பண்ணசாமி கோவில் தாண்டியவுடன் வீடு வந்து சேர்ந்தான் சந்திரன். ஒரு சிறிய ஒட்டு வீடு. தந்தை இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. தாயார் தான் விவசாயம் செய்து குடும்பத்தாரை காப்பாற்றி வந்தாள்.. அவனது அக்காவுக்கு திருமணம் ஆகி கேரளாவில்  வசிக்கிறார்.

சந்திரன் வீட்டுக்கு அருகில் வரவும், அவனது தாயார் பக்கத்து தெருவில் இருந்து அவனை நோக்கி ஓடி வரவும் சரியாக இருந்தது.

“வாடா, சந்திரா வா; உடம்பு எப்படிடா இருக்கு?”

“நல்லா இருக்கேன்மா; எங்கம்மா போயிட்டு  வர்ற?”

“நம்ம குருசாமி ஐயா வீட்டுக்கு போயிட்டு, அப்படியே உங்க அக்காவுக்கு அவர் கையாலே ஒரு கடுதாசி எழுதி தபால் ஆபிசில் கொடுத்துட்டு வர்றேன். இந்த கை  நாட்டு போடுறவளுக்கு அவர் தான்யா பத்து வருசமா கடுதாசி எழுதிக்கொடுத்திட்டு இருக்காரு.”

“இனிமே நீ அவர்கிட்ட போக வேண்டிய அவசியம் இருக்காதும்மா?”

“ஏன்டா, என்னாச்சு உனக்கு?”

“இனிமே நான் எழுதுறேன்மா உனக்காக.”

“நிசமாதான் சொல்றேயா ராசா?”

“ஆமாம்மா; இந்த ஊரில் இனிமே பெரிய படிப்பு படிச்சவன் நான் தான்மா; உனக்கு மட்டும் இல்ல; இந்த ஊர், பக்கத்து ஊர்; இன்னும் நான்கு திசைகளிலும் இருக்கிற ஊர்க்காரங்க;  எல்லோருக்கும் கடுதாசி வகையறா எல்லாம் நான் தான்மா எழுதிக் கொடுக்கப்போறேன். நம்ம வீட்டு திண்ணையிலே ஒரு சின்ன பள்ளிக்கூடம் மாதிரி திறந்து, நம்ம கிராமத்து பிள்ளைகளுக்கும், பக்கத்து ஊர் கிராமத்து பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கப்போகிறேன். என் கூட படிச்ச இரண்டு நண்பர்களும் இன்னும் மூணு மாசத்தில் இங்கு வந்திடுவாங்க. எப்படியாவது, ஊர் ஜனங்களோடு பேசி, இரண்டு அல்லது மூணு வருஷத்தில் ஒரு நல்ல பள்ளிக்கூடம் திறந்து வச்சிடணும்னு எனக்கு ஆசை ஆசையா இருக்கும்மா. வேலைகளுக்கு போயிட்டு வர பெரியவர்களுக்கும் இரவு பள்ளிக்கூடம் மாதிரி நடத்தி பாடம் சொல்லிக்கொடுக்கப்போகிறேன்.”

“சந்திரா – அப்ப நீ பட்டணத்தில வேலைக்கு போகப்போறதில்லையா? பெரிய படிப்பு படிச்சா, நல்லா சம்பாதிக்கலாம், வீடு வாங்கலாம் அப்படின்னு கனவுகள் கண்டு கொண்டு இருந்தேனடா. என்னடா இப்படி சொல்றே?”

“நீ சொல்றதை கேட்குறதுக்கு நல்லா இருக்குதும்மா. இப்ப தானம்மா எனக்கு தெரியுது. படிச்ச படிப்புக்கு வேலைங்கிறது எவ்வளவு சிரமம்னு. படிச்ச ஆயிரம் பேர்ல, பத்து பேருக்கு வேலைங்கிறதே பெரிய விஷயம்மா. வெளிநாடுன்னு போறாங்க; அங்கேயும் போய் கட்டிட வேலை; தெரு பெருக்கிற வேலை; ஹோட்டல் சுத்தம் செய்ற வேலை தான் செய்றாங்க. நமக்கு தெரியறது இல்லை. நான் நல்லா யோசிச்சு பார்த்துட்டேன். வேலை வேலைன்னு காத்துக்கிட்டு இருக்கிறதை விட, நாம ஏன் ஒன்றை செய்யக்கூடாதுன்னு யோசிச்சேன். நம்ம ஊர்ல பள்ளிக்கூடம் இல்லேங்கிறதுன்னால தான் வெளியூருக்கு எல்லோரும் போய்கிட்டு இருக்காங்க. இங்கேயே ஒன்னை தொடங்கிட்டா, இங்கேயே படிக்க ஆரம்பிச்சுடுவாங்க. இதுக்கு இடையிலே அரசாங்கத்திற்கு மனு போட்டு ஓர் பள்ளிக்கூடம் தொடங்கிடுவோம்.”

அவன் சொன்னதை வரி விடாமல் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய தாயாரின் கண்களில் நீர் கோர்த்து தரையில் விழுவதற்கு தயாராக இருந்தன.

அவனது பிரியமான நாய் எல்லாம் புரிந்தது போல அவனை உற்று பார்த்து வாலை ஆட்டிக்கொண்டு இருக்க, சந்திரனுடைய தோளிலிருந்து இறக்கி வைத்த கனத்த பையிலிருந்து பாரதியார் எழுதிய புத்தகம் ஒன்று கீழே நழுவி பிரிந்து கிடக்க, அதிலிருந்த வார்த்தைகள் தெளிவாக தெரிய ஆரம்பித்தன:

“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,

இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்”

அருளும் இந்த மறையொலி வந்திங்கே

ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமைத்

தெருளுறுத்தவும் நீர்எழு கில்லிரோ?

தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?

வான் ஒளிக்கு மகாஅர்இ யாம்என்றே”

முற்றும்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் லிங்க்கை கிளிக்செய்யவும்.  

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!