எழுத்தாளர்:எஸ். பத்மினி அருணாசலம்
அன்புள்ள அப்பா,
“ஸ்வர்க்கலோகம்”
சுகமாகவுள்ளதா அப்பா? அம்மாவும் உங்களுடன்தானே
இருக்கிறார்?
எனது எட்டாவது வயதில் நீங்கள் எங்களை விட்டு பிரிந்தீர்கள். அம்மாவுக்கு அப்போது முப்பத்தெட்டு வயதுதான். மூத்த அண்ணனுக்கு இருபத்தொன்று. அடுத்த அக்காவிற்கு பத்தொன்பது வயதிலேயே மணம் செய்து வைத்த வருடமே நீங்கள் விடை பெற்றுவிட்டீர்கள். அடுத்து லலிதாவும் நானும்.
‘வயதுக்கு வந்துவிட்டால் பெண்களை பள்ளிக்கூடத்தை விட்டுநிறுத்திவிடும்’ காலக்கட்டத்தைக்கடந்து, லலிதாவையும் என்னையும் அம்மாவும் அண்ணாவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்கள்.
முதல்முறையாக பள்ளியிறுதி படித்த பெண்களாக நாங்கள்நம் குடும்பத்தில் பெருமை கொண்டோம். அடுத்த தலைமுறை குழந்தைகளை நாங்கள் எம்.பி.ஏ. என்ஜினியர், மருத்துவர் என
படிக்கவைத்தோம். அதில் உங்களுக்கும் பெருமைதானே அப்பா?
நாங்கள் வேலைக்குப்போனது, திருமணமாகி குழந்தைகள் பெற்றது வரை அம்மா உடனிருந்ததால், அந்த கதையையெல்லாம், அவர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள்.
அதற்குப்பின் நடந்தவைகளை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்பா.
உங்கள் குழந்தைகள் நால்வருமே இப்போது தாத்தா பாட்டி ஆகிவிட்டோம்பா. சொந்தவீடு, கார், போன்ற வசதிகளுடன் வாழ்கிறோம். எங்கள் முன்னேற்றத்தையும், பேரக்குழந்தைகளையும், கொள்ளுப்பேரன் பேத்திகளையும் நீங்கள் இருந்து பார்த்து மகிழவில்லையே? என்று நினைக்காத நேரமில்லைப்பா!
இப்போதெல்லாம் ‘தந்தையர்தினம்’ என்று கொண்டாடுகிறார்கள். பலரும் ‘என்னுடைய தந்தை ங்களிடம்
அப்படி பாசம் காட்டுவார், கேட்டதை வாங்கித்தருவார், அவருடன் ஜாலியாக பேசிச்சிரிப்போம்!’
என்றெல்லாம் சொல்வதையும், எழுதுவதைப்படிக்கும்போதும்,’அத்தகைய பாக்யத்தை நாம்
இழந்துவிட்டோமே?’ என்ற ஆதங்கம் கண்ணீரைப்பெருக்குகிறதப்பா!
இதோ இந்த வருடம் உங்களது ‘அறுபதாவது திதி’. வருடந்தோறும் அண்ணா சம்ப்ரதாயங்களை விடாமல் அந்நாளில் மிகுந்த ஸ்ரத்தையுடன் அனைத்து வைதீக காரியங்களையும் மிக சிறப்பாக நடத்துகிறார். அதில் உங்களுக்கு ‘திருப்தி’ தானே அப்பா?
பிராம்மண போஜனத்தின்போது ‘அண்ணா எங்களை பறிமாறச்சொல்வார். அந்த சமயத்தில்,’ நீங்கள் இருக்கும்போது ஒரு டம்ளர் தண்ணீர்கூட கொடுத்ததாக எனக்கு நினைவில்லை! ‘என்பதால்
நான் அழுவேன். மடி, ஆசாரம் என்றும், அக்காலத்தில் பெண்குழந்தைகளிடம் ஆண்கள் அதிகம் பேசமாட்டார்களென்ற வழக்கப்படி, நீங்கள் என்னிடம் பேசியதாகக்கூட நினைவில்லை.
எட்டு வயதில் நான் பார்த்த முதல் மரணம் உங்களுடையதென்பதால், பயத்தினால் நான் ‘வாய்க்கரிசி’ போடக்கூட உங்களருகே வராமல் அழுது கொண்டிருந்தேன். அந்த பாக்யத்தைக்கூட நான்
இழந்து விட்டேன்பா!
அப்பாவுக்கு சமையலில் என்னபிடிக்கும்? அவரது ஆர்வம் எதில்? அவர் தன் வாரிசுகள் எப்படியிருக்கவேண்டுமென்று நினைத்தார்? என்றெல்லாம் பல கேள்விகள் என் உள்ளத்தில்
எழும். ஆனாலும் அவை விடையறியமுடியாத கேள்விகள்தாம்!
ஆனால் அப்பா! உங்களைப்போன்றே ” நியாயம், தர்மம், பரோபகாரம், ” போன்ற நற்சிந்தனைகளுடன், நமது சனாதன தர்மத்தின்படிதான் நம் குடும்பத்தினர் அனைவரும் வாழ்ந்து வருகிறோமப்பா!
சந்தோஷமா அப்பா!
வழி வழியாக நமது குடும்பத்தில் ‘ஒரே ஒரு ஆண் குழந்தை’ தான். பெண்குழந்தைகளே அதிகம். உங்கள் மகன்வழி பேரனுக்கு, ஒரு பெண்குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் ஒரு ஆண்குழந்தை பிறந்தால்தானே?
வம்சம் தழைக்கும்? உங்கள் மகனுக்கே எண்பத்தியிரண்டு வயதாகிவிட்டது. ‘தனக்கொரு
பேரன் பிறக்கவில்லையே? வம்சம் தழைக்க!” என அவர்மட்டுமல்ல, அவருடன் பிறந்த சகோதரிகளான நாங்களுமேதினமும் கவலைப்பட்டு, இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
அன்புள்ள அப்பா! உங்களிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் உங்கள் ஆசிகள்தான்! சீக்கிரமே கொள்ளுப்பேரன் பிறந்து வம்சம் தழைக்க ஆசி கூறுங்களப்பா! எங்களது மீதி வாழ்நாட்களையும்
நல்லமுறையில் உபயோகமாக கழித்திட ஆசி கூறுங்கப்பா!
இப்படிக்கு,
தங்கள் நினைவாகவே வாழும்
தங்கள் அன்பு மகள்
எஸ்.பத்மினி அருணாசலம்.
பி.கு.
அப்பா, சேதுராமன் என்ற உங்கள் பெயரை இனிஷியலாக திருமணமாகியும் மாற்றாமல் வைத்திருப்பதில் நீங்கள் உடனிருப்பதாக திருப்தி பட்டுக்கொள்கிறேன்பா.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!