எழுத்தாளர்: சுஸ்ரீ
பஸ்ல நானும் அப்பாவும்,நான் ஜன்னல் ஓரம்,அப்பா பக்கத்துல..
பஸ் வேகமா போறது, காத்து சில்னு,அப்பா தன் இடது கையால்
என்னை சுற்றி வளைத்துக் கொள்கிறார்.
இது என்ன கனவு தொடர்ந்து 3 வது நாளா.பக்கத்தில் சுரேஷ்.
மரத் தொட்டிலில் மகேஷ் எங்கள் 10மாதச் செல்லம்.
அம்மா இல்லை,என் அப்பாதான் எல்லாம்.தேவகோட்டை
கல்லூரியில் முதல் வருஷம் டிகிரி வரை அப்பாதான் என் ஹீரோ.
பெரிய வேலைன்னு சின்ன வயசுல நினைச்சிட்டிருந்த அந்த
போஸ்ட்மேன் வேலை, யூனிஃபார்ம்ல சைக்கிள்ல போற அப்பாவை
பெருமையா பார்க்க வைத்தது.
மெல்ல போஸ்ட்மேன் ஹீரோ இமேஜ், சிறு புள்ளியாய் ஆனது.
என் அப்பா மட்டும் ஏன் தாசில்தார் இல்லை, ஏன் போலீஸ்
இன்ஸ்பெக்டர் இல்லை,ஏன் தலைமை ஆசிரியரா இல்லை?
தேவகோட்டை கோவாபரேடிவ் பேங்க்ல வேலை பாக்கற சுரேஷ்
பைக்கில் வரும் போது எங்களுக்கு ஹீரோவா தெரிஞ்சான்.
கண்ணைக் கவர்ந்து என் மனதைக் கவர்ந்தான், ஒரு நாள்
காதலையும் சொன்னான்.உவகை கொண்டது மனம் ஆனால்
உடனே ஒப்புக் கொள்ளவில்லை.
தெருவில் அப்பா சைக்கிளை மறைத்து என்னை விரும்புவதை
சொன்ன விதம் அப்பாவுக்கு பிடிக்கலை. கல்லூரி படிப்புக்கு தடை.
காதல் கனிந்தது,முருகன் சந்நிதியில் கல்யாணம்,ஜோடியாய்
வந்தோம் அப்பா கதவை திறக்கலை. அப்பாவை இழந்தேன்.
இப்ப சிவகங்கைல குடித்தனம்,.குழந்தை பிறந்தவுடன்தான் அப்பா
ஞாபகம் அதிகம் வருது.
சுரேஷ்,”என்ன அப்பா கனவா”
“ம்” கட்டுப் பாடின்றி கண்ணீர்.
“இன்னிக்கு உங்க ஊர் கண்டதேவில தேர்த் திருவிழா
17 வருஷத்துக்கு அப்பறம், போலாமா”
“ஓ ஆமாம், நான் சின்னப் பெண்ணா இருக்கறப்ப இந்த
தேர்த்திருவிழாவுக்குதான் அப்பா பஸ்ல கூட்டிட்டு போயிருக்கார்.
அதுதான் கனவா வருது, அந்த சொர்ணமூர்த்தீஸ்வரர்தான்
அப்பாவை நல்லா வச்சிக்கணும்.”
இப்பவும் பஸ்ல ஜன்னல் ஓரம் நான்,பக்கத்துல சுரேஷ்,
மடில மஹேஷ், காத்து ஜில்னு. அப்பா நான் வரேன்
கண்டதேவி கோவில்த் திருவிழாக்கு.
அப்பா நீ எங்கே? பாக்க வரேன்பா, உன் பட்டு செல்லம்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!