சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: தந்தையின் மந்திரச்சொல்

by admin 1
40 views

எழுத்தாளர்: குட்டிபாலா

பாபு வெகு மகிழ்ச்சியுடன் தி.நகருக்கு வந்து தன்னுடைய மேல் அதிகாரியிடம்
ரிப்போர்ட் செய்தான். ஆம். பாபு ஒரு கான்ஸ்டபிள். பயிற்சி முடித்து இன்று முதல்
முறையாக தி.நகரில் வேலையை ஒப்புக்கொள்கிறான்.  சம்பிரதாய சடங்குகள்
முடிந்ததும் ஏட்டு அவனை கூட்டிக்கொண்டு பனகல் பார்க் பக்கம் வருகிறார்.
ஏட்டு, பாபுவிடம் “நடைபாதையில் கடை போட்டிருப்பவர்களை கடைகளை எடுக்க
செய்து கிளியர் செய்வோம்” என்று சொல்லிக்கொண்டு தடியால் தட்டி மிரட்டி
கடைகளை எடுக்குமாறு சொல்லிக் கொண்டே போனார். கூடவே பாபுவும் பின்
தொடர்ந்தான்.
அரை மணி நேரத்தில்   மீண்டும்  ரோந்து வந்தனர் ஏட்டும் பாபுவும்.  அவர் அவ்வளவு
சொல்லியும் கடைகளை அகற்றாததால் கோபம் கொண்ட ஏட்டு வியாபாரிகளுடைய
மேசைகளை சரித்து அதிலுள்ள பொருள்களை கீழே தள்ளி உடனே அகற்றும்படி
கத்தினார். பாபுவையும் அதேபோல் செய்யும்படி ஆணையிட்டார்.
எதிர்புறத்தில் கடை விரித்து நின்றிருந்த தன் தந்தை சுந்தரத்தை கண்டான் பாபு.

” வா பாபு.  எதிர்ப்பக்கம் போவோம்” என்ற ஏட்டு நேராக சுந்தரத்திடம் சென்று”
எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டாயோ”  என்று மேசை மேலிருந்த
காலணிகள் அத்தனையையும் கீழே தள்ளி
“இனி இங்கே கடை போட்டால் கைது செய்து சிறையில் தள்ளி விடுவேன்” என்று
அனைவரையும் எச்சரித்தார். முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்த மகன் பாபுவிடம் 
மௌனமாக இருக்குமாறு சைகையால் சொன்னார் சுந்தரம்.
அன்று இரவு வீட்டுக்கு வந்ததும் தாயாரிடம்  “அப்பா வந்தாயிற்றா?” என்று
கேட்டதற்கு “நான் மாலையிலேயே வந்து விட்டேனப்பா” என்று சுந்தரத்தின் பதில்
நலிந்த குரலில் வந்தது.
” அம்மா, இந்த போலீஸ் வேலை எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று அழுதான்.
அருகில் வந்து அமர்ந்த சுந்தரம் ” நீ படித்தவன். அரசாங்கத்தில் வேலை செய்கிறாய்.
சட்ட திட்டங்களைத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில்
மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்வதும் சட்டப்படி
தப்புதானே. அரசின் எச்சரிக்கைகளை நாங்கள் கேட்டோமா! அதனால் தான்
அவ்வப்போது இது போன்ற நிகழ்ச்சிகள் சம்பவிக்கின்றன. இதைவிடவும் 
பரபரப்பான நிகழ்ச்சிகள் முன்பும் பலமுறை நடைபெற்றுள்ளன.  அத்தனையும்
எதிர்கொண்டுதான் நாம் இன்றும் வயிறார சாப்பிட்டு வருகிறோம். நீ படித்து
நல்லதொரு நிலைக்கு வந்துவிட்டால் எங்கள் துன்பம் குறைந்துவிடும் என்ற
நம்பிக்கையில்தானப்பா இதை தாங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் கனவு
கண்டபடி இப்போது நீ  ஒரு பொறுப்பான அரசு ஊழியனாகிவிட்டாய் என்று நானும்
உன் அம்மாவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். அதனால் இந்த வேலை வேண்டாம் என்று

சொல்லாதே. மாறாக  நீ எடுத்துக் கொண்ட வேலையில் சட்டப்படி உன் கடமையைச்
செய். அதே சமயம் அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள். இதை
மந்திர சொல்லாக கடைப்பிடிக்க முயற்சி செய். கவலைப்படாதே. நாளையும் நம் கடை
அங்கு நடக்கும். அரசு நிரந்த தீர்வு காணும்வரை நடக்கும்” என்று சொல்லி அவனை
தேற்றினான்.
மறுநாள் காலை தி. நகர் ஸ்டேஷனுக்கு போனபோது ஏட்டு அவனை ஆயிரம் விளக்கு
பகுதிக்கு மாற்றி விட்டதாக சொன்னதும்.
சிரித்துக்கொண்டே”நன்றி” என்று சொல்லிவிட்டு “எல்லாம் நன்மைக்கே. விரைவில்
அப்பாவை “போதும் உழைத்தது” என்று சொல்லி வீட்டுப் பொறுப்பை
எடுத்துக்கொண்டு அவருக்கு ஓய்வு தர வேண்டும் என்று தனக்குத்தானே பேசியபடி
ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்றான்.

முற்றும்.

சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!