எழுத்தாளர்: கஸ்தூரி குருசுவாமி
என் தந்தையை நினைத்தால் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது காவலரை தான் நினைவுக்கு
வரும். கண்டிப்பு என்றால் அதற்கு எல்லையே இல்லை .ஒரு புது பென்சில் வாங்குவதாக
இருந்தாலும் ஏற்கனவே பயன்படுத்தும் பென்சிலை காட்ட வேண்டும். இனி அதை பயன்படுத்த
இயலாது என்றால்தான் புதிது கிடைக்கும். வருடத்திற்கு நாலு சாரி தான் கணக்கு. என்
தோழிகள் விதவிதமாக உடுத்திவரும்போது எனக்கு தாழ்வுமனப்பான்மை அதிகமாகும்.
பணத்திற்கு குறைவில்லை .ஆனால் அப்பா காந்தியவாதி என்பதால் ஆடம்பரம் என்பதே
மறந்து விட வேண்டும் .கல்லூரி விழாவன்று என் தோழி அவரது புதுசாரியும் அணிகலன்களும்
கொண்டு வருவாள். நான் வீட்டில் சொல்வதில்லை. அப்பாவிடம் உள்ள பயத்தால் மறைத்து
விடுவேன். அந்த காலத்தில் கைபேசி இல்லாததால் புகைப்படம் எடுப்பதில்லை. வீட்டில் நாலு
வேலைக்காரர்கள். ஆனால் வீடு பெருக்குவது,ஒட்டடை அடிப்பது எல்லாம் நான் செய்ய
வேண்டும். அப்பாவை கண்டு அஞ்சி அவர் சொன்ன வேலைகளை செய்வேன்.
திருமணம் என்றதும் இனி சுதந்திரம் தான் என்று தோன்றியது. ஆனால் அப்பாவின்
நண்பர்களும் உறவினர்களும் அப்பா குறித்து சொன்னது எனக்கு பெரும் அதிர்ச்சி தந்தது
.நிறைய ஏழைகளை படிக்க வைத்திருக்கிறார். நிறைய ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து
வைத்திருக்கிறார். நோயாளிகளுக்கு உதவி இருக்கிறார். எவ்வளவு பணம் இருந்தாலும்
தேவைக்குத் தான் செலவழிக்க வேண்டும். அது போல் எந்த வேலையும் குறைவானது இல்லை,
கண்டிப்பு, சிக்கனம், பொறுமை ,கடமை உணர்ச்சி, தான தர்மம் இவைதான் நம் வாழ்வை
உயர்த்தும் என எங்களை நல்வழிப்படுத்திய தந்தைக்கு ஒரு நன்றி சொல்லவோ அவருக்கு
மகளாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன் என்று சொல்லவோ தைரியம் வரவில்லை. மனதில்
நினைத்ததோடு சரி. எத்தனை பிறவி எடுத்தாலும் அவருக்கு மகளாகவே பிறக்க வேண்டும்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!