எழுத்தாளர்: குட்டிபாலா
மேலாண்மை இயக்குனராக பதவி உயர்வு பெற்ற ஜெயமோகன் பாராட்டு விழாவில்
தனது ஏற்புரையில் தான் இன்று இந்த உயர்ந்த நிலையடைய காரணமே தன் தந்தை
தான் என அந்த நிகழ்வை விளக்கினார்.
” எனக்கு மூன்று வயது. நானும் என் பெற்றோரும் பேருந்தில் தென்காசியிலிருந்து
ராஜபாளையம் போய்க்கொண்டிருந்தோம். புளியங்குடி பேருந்து நிலையம்
அடைந்தபோது ‘அதிரசம் அதிரசம்’ என்று கூவியபடி கூடை நிறைய அதிரசங்களோடு
சுற்றி வந்தார் ஒரு வியாபாரி. சன்னலோரம் உட்கார்ந்திருந்த நான் சட்டென கையை
நீட்டி அதிரசத்தை எடுத்ததை வியாபாரி கவனிக்கவில்லை.
ஆனால் என் தந்தை கவனித்து விட்டார். உடனே என்னை இழுத்து கன்னத்தில்
அறைந்து ‘ஏண்டா இந்த திருட்டுப்புத்தி. எங்களிடம் கேட்க வேண்டியதுதானே. இந்த
வயதிலேயே திருட தொடங்கினால் கெட்டு சீரழிந்து போய்விடுவாய்’ என்று கடிந்து
கொண்டார். உடனே என் அம்மா, “நேர்மை மனசாட்சி என்று சொல்லி சொல்லி
நீங்கள் என்ன சாதித்தீர்கள்? நான்கு வருடங்களில் ஆறு கம்பெனி மாறியதுதான்
மிச்சம். இப்போது வேலையில்லை என்று வெட்கமில்லாமல் என் பிறந்த வீட்டுக்கு
அழைத்துப் போகிறீர்கள். இதில் சின்னக் குழந்தைக்கு புத்திமதி வேறு என்று என்
கன்னத்தை தடவிக் கொடுத்தாள்.
என் தந்தையோ அதிரச வியாபாரியிடம் ‘என் பையன் ஒரு அதிரசத்தை கூடையில்
இருந்து எடுத்ததை நீங்கள் கவனிக்கவில்லை என்று அதற்குரிய தொகையை
கொடுத்தார்.
ராஜபாளையத்தில் இறங்கும் வரை இருவரும் ஏதும் பேசவில்லை.
இரண்டாம் நாள் சென்னையில் இதே கம்பெனியில் ஒரேயொரு காசாளர்
காலியிடத்திற்கு வந்திருந்த 20 பேர்களில் என் தந்தைதான் குறைவாக படித்தவர்.
நான்கு வருடங்களில் ஆறு கம்பெனி மாறியமைக்கு அவர் கூறிய நேர்மை,மனசாட்சி
என்ற காரணங்களை நேர்காணல் நடத்தியவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக
தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.
சரி இந்த வேலை நமக்கு கிடைக்காது என்று தோன்றினாலும் அரை மணி நேரத்தில்
முடிவு அறிவிக்கப்படும் என்பதால் காத்திருந்தார்.
அப்போது குமரன் என்று அழைத்தவரை தொடர்ந்து அறைக்குள் சென்றவரிடம் “தம்பீ
அன்று ஒரு அதிரசம் திருடியதற்காக உன் மூன்று வயது குழந்தையை அடித்து
கண்டித்தபோதே உன் நேர்மையை தெரிந்து கொண்டேன்.வறுமையிலும் நேர்மை
என்பது அரிது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கருதி உன்னைப்
போன்றவர்கள் என் மகனின் கம்பெனிக்கு கிடைக்கவேண்டுமே என்று
ஆசைப்பட்டேன். ஆனால் அது இப்படி உடனே நடந்து விடும் என்று
நினைக்கவில்லை எல்லாம் அவன் செயல் என்று வேலைக்கான உத்தரவை தந்தார்
பெரிய முதலாளி.”
இன்று இதே கம்பெனியில் இந்த நிலையினையடைய என் தந்தை கற்றுத் தந்த
நேர்மையும் அந்த நேர்மைக்கு உரிய மதிப்பளித்து போற்றும் இந்த நிர்வாகமுமே
என்று முடித்தான்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!