எழுத்தாளர்: முனைவர் இரா.நா.வேல்விழி
அன்பு தந்தையின் அருமையினை
எழுத நினைக்கையில்
எண்ணிக்கையில் முந்திக் கொண்டன
அலைஅலையாய் உன் நினைவுகள்….(11)
எதையெழுதுவது
எண்ணிக்கையில் அடங்குவதா
என் தந்தையின் அற்புதம்….(6)
செங்கீரைப் பருவத்தில்
செல்லமாய் மடிசாய்ந்து
கொஞ்சி விளையாடியது
கொஞ்சமும் நினைவில்லை….(8)
உன்விரல் பிடித்து
குட்டிக்குட்டிக் கதைகள் பேசி
ஊரை வலம் வந்து
உறங்கும் முன் சண்டையிட்டு
கொஞ்சும் சுகங்களை சுவாசித்ததுமில்லை…..(14)
ஐந்தில் வளைத்தால்
ஐம்பதில் நிலைக்குமென்று
அறியாத மொழியில்
அரிச்சுவடி கற்றுத்தர
அன்பாய் எனையழைத்தாய்
ஆயிரமுறைச் சொல்லியும்
அறியவில்லை என் மூளை….(15)
கோல் பிடித்த உன் கைகள்
பதம் பார்த்தன என் காயத்தை
காயத்தின் வழி குருதிவழிய
குழந்தை மனம் குரங்கானது
பெத்தமனம் பித்தானது
கண்ணீரால் மருந்திட்டாய் காயத்திற்கு
அன்றுணர்ந்தேன் உனதன்பை
அடிக்கிறக்கை அணைக்குமென்று…..(23)
செங்கதிருக்கும் சோர்வுண்டு
சோராததுன் சுறுசுறுப்பு….
ஐயிறு திங்கள் அடக்கமாய்
ஐயனேயுனை எங்கனம்
தாங்கி நின்றாள் உனதன்னை(12)
செய்யும் தொழிலே
தெய்வமென தன்னையேச்
செதுக்கிக் கொண்டாய்
வேலையென்று வந்து விட்டால்
வெள்ளி முளைத்தப் பின்னும்
வீடு மனையாள் மறப்பாய்…..(15)
விழி ஏங்கி நிற்கையில்
விடியலில் வந்து நிற்பாய்
விழிக்கு முன் சென்றிடுவாய்…..
உதிர்ந்து கிடக்கும் சருகுகளும்
உசரமாய் உனைநோக்கும்
பாடச்சாலை நேரமென்று
பாங்காய் வழி கொடுக்கும்…… (19)
மனையாளும் இப்பண்பை
ஏற்றதுதான் மகத்துவமே
ஏணியாய் அவள் குணம்
அமைந்தது தான் உன்
வெற்றியின் இரகசியமே……(12)
தோளில் சுமந்ததில்லை
நெஞ்சில் சுமந்திருக்கிறாய்
துன்பமென்று வரும் போது
தட்டிக் கொடுத்திருக்கிறாய்
விட்டுக் கொடுத்ததில்லை (11)
தன்னம்பிக்கையெனும் நீ
விதைத்த விதை இன்று
விருட்சமாய் வேரூன்றி நிற்கையில்
கட்டிப்பிடித்து தட்டிக்கொடுக்க
நீயின்றில்லையப்பா
நாதியற்று நிற்கிறேனப்பா….(13)
வார்த்தைகளை ஒடித்து எழுதவில்லை
வலிகளை மறைத்து எழுதுகிறேன்
வார்த்தைகள் தாங்கும்வலி
மனத்திற்கு இல்லையப்பா
மயான கொல்லையில்
உன்னுடனே உறங்குதப்பா…(15)
அலைபேசியில் பதிந்த எண்ணும்
அடிக்கடி வந்து போகுதப்பா
அதுவுமுன் அழைப்பிற்கு
தவியாய் தவிக்குதப்பா….(10)
எவர்கண்பட்டதோ என்கண்ணேபட்டதோ
எவரிடமும் தோற்காத நீ
காலனிடம் தோற்று விட்டாய்
சொல்லிமாளாது
சொல்லாமல் விட்டக்கதை
சொத்தெல்லாம் தேவையில்லை
சொந்தமாய் நீமட்டும் போதுமப்பா….!!! (16)
முற்றும்.