எழுத்தாளர்: சாந்தி ஜொ
1983 ஆம் ஆண்டு டைரி
“அன்டனுக்கு எக்காலத்திலும் இது தெரியக்கூடாது. அவன் நல்ல மனிதனாக வளர வேண்டும். அதற்கு நான் சிறந்த தந்தையாக வாழ்வது மிக முக்கியம். 1983 ஆம் ஆண்டு. 12 மணிக்கு பொழிவுடன் புதுவருடம் பிறந்தது. பால்ய நண்பர்கள் சிலரை புது வருடம், சந்திக்க வைத்தது. ஆனால் அந்த சூழ்நிலை தான் முதன்முதலாக என்னை குடிக்கவும் வைத்தது. ருசிகண்ட எனக்கு தினமும் குடி இல்லாமல் இருக்க முடியவில்லை. ரெஜினாவுக்கும் எனக்கும் இடையே பிரச்சனைகளும் தலை விரித்தாட ஆரம்பித்தன. அன்டனுக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது. அவனுக்கு 5 வயது. விவரம் தெரிய ஆரம்பித்த நேரம். என் நெஞ்சில் சாய்ந்துதான் தூங்குவான். என்மேல் அவனுக்கு அளவுக்கதிகமான பாசம். இன்று பள்ளியில் என்னவாக போகிறாய் என்று ஆசிரியர் கேட்ட போது கொல்வின் (அப்பா போல) போல் ஆகுவேன் என்று சொல்லியிருக்கிறான். எனக்கு கத்தி அழ வேண்டும் போல் இருக்கிறது. என்னை போல ஆகுவேன் என்று என் மகன் சொல்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் ஒரு மகா குடிக்காரன், தினமும் மனைவியிடம் சண்டைப் போடுபவன். மிருகமாக வாழ்ந்த நான் கூண்டில் அகப்பட்டதை போல இப்பொழுது உணருகிறேன். அய்யோ… இனி நான் குடிக்க மாட்டேன். அன்டனுக்கு இதற்கு முன் நான் குடிக்காரன் என்பது தெரியக் கூடாது. இனி நல்ல தகப்பனாக வாழ போகிறேன். அன்டன் மிகச் சிறந்தவனாக வாழ வேண்டும். அதற்கு நான் ஒழுக்கமானவனாக நடந்து கொள்ள வேண்டும்”. (கொல்வின்).
வீடு மாற்றும் போது கிடைத்த அப்பாவின் டைரியை வாசித்த அன்டன் விழிகளில் கண்ணீருடன் தனக்கு தானே பேசிக் கொண்டான். “அப்பா எனக்காக நீங்கள் வாழ்ந்தீர்கள். அதன் பலன் தான் போதகராக கடவுளுக்கு சேவை செய்ய என்னை உருவாக்கியுளளது. நன்றி அப்பா”.
அன்டன் தான் டைரியை வாசித்ததை அப்பாவிடம் காட்டிக் கொள்ளவில்லை. அதை மறைத்தான். “அன்போ சகல பாவங்களையும் மூடும்” (நீதி மொழிகள் 10:12) பைபிள் வசனத்தை நினைவுக் கொண்டான்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!