இரவின் தனிமையில்,
இவள் கூறும் கதை என்ன?இரண்டாம் அகவையில்
என் பிறந்த தினப் பரிசாக
என்னிடம் வந்தாய் நீ!
இன்றோ……
எனக்கு பரிசம் கூடப் போட்டாச்சு!
ஆனாலும்…..
தோழியாய் வந்த நீ,
நான் வளர வளர, நீ மட்டும்
அப்படியே இருந்த போதிலும்,
இன்று வரை என் தோழியாகவே
இருக்கிறாய் நீ!
என்ன மாயமடி செய்கிறாய்?
இரவில் உன்னிடம் நான் பேசிய
கதைகள்தான் எத்துணை?
கதைகளா அவை?
காவியங்கள் அல்லவா!?
என் கண்ணீரில்,சிரிப்பில்,
வெற்றியில்,தோல்வியில்,
விரக்தியில்,துரோகத்தில்,
கோபத்தில்…………………..
அனைத்து தருணங்களிலும்,
உன் மாயக்கரம் எனைத்தழுவி
மருந்திட்டுக் கொண்டே
இருக்கிறதே!
இருட்டுக்குள், தனிமையில்
உன் மீதுமட்டும் வெளிச்சம்படர,
என்ன சொல்ல வருகிறாய்?
கால் வைக்கும் இடமெல்லாம்
தடம் பதிக்க வேட்டுமென்கிறாயா?மேடையில் வெளிச்சப்பூக்கள்
எப்போதும் என்மீது விழவேண்டும்
என்று விழைகிறாயா?
நீ என்னுடன் இருக்கும் வரை
வாழ்க்கை முழுவதும்
வசந்தம்தான்…..என் கரடி
பொம்மைத் தோழியே!
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)