கருவறை நோக்கிய ஓட்டப்பந்தயத்தின் வெற்றியில்
துவங்கும் வாழ்க்கை,
கல்லறை வரை பயணம்……
தொடர்பயணம்தான்.. அதிலும்,
வான்மேகங்களுடன் போட்டியிடும்
தொடருந்தின் நீராவிப்புகை,
“குபு குபு “எனப் பெருக்கெடுக்க
தொலைதூரத் தொடரிப் பயணம்..
அடடா!
தொலைந்து போன நினைவுகளை
மீட்டெடுக்கின்றதே மனம்!
பெட்டியின் உள்ளே நம் இருப்பைத்
தக்கவைத்துக் கொள்ள நடக்குமே
ஒரு துவந்தயுத்தம்!
சக பயணிகள் அனைவருமே
எதிரிகளாகவன்றோ காட்சியளிப்பர்.
ஆனால் என்ன மாயமோ!,
இறங்கும்போது பங்காளிகளே
தோற்றுவிடுவர்! ஆம் அத்துணை
அன்பு பெருக்கெடுக்க …
பிரியாவிடை பெற்றுக் கொள்வோம்.
அரசன் முதல் ஆண்டிவரை
அலாதியாகப் பயணிக்கும்
தொடருந்துப் பயணம் சுகமான அனுபவமே!
இரவில் நம்முடனே பயணிக்கும்
நிலவு..
நெடிய கரிய பிசாசு போல
ஓட்டம் பிடிக்கும் மரங்கள்…
அது ஒரு பரவசநிலை!
கரியில் ஓடும் வண்டியில்….
இஞ்சினுக்கு அடுத்த பெட்டியில் பயணித்தால்,
“ சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்”
இலவசமாய்க் கிடைத்திடும்.
வண்டியினுள் கூடிக்களித்து,
கண்டதையும் உண்டு, குடித்து
சந்தோஷச் சாரல்தானே நம்
சன்னல் முழுவதும்,….
இன்றோ அனைத்தும் எந்திரமயம்!
மனித மனது உள்பட……
ஓய்வின்றி விட்ட புகையால்
நலன் கெட்டு ஓய்வெடுக்கச் சென்றாயோ? !
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)