தாயும்……….சேயும்
அழகான சித்திரக்காட்சி….
ஆயிரம் நினைவுகள்!
ரங்க ராட்டினமாகக் காலச்சக்கரம்
சுழல்கிறதே பின்னோக்கி!
அதில்………. நானே
மரணவாசலில்….
அழுகையோடு அன்னையைத்
தள்ளிய குழந்தையாக…….
மரணவாசலையும்……
மகிழ்வோடு சந்தித்த
அன்னையாக…..எது நான்?
இங்கோ……
அழகான நீரோடை, சுற்றி வண்ணச்சோலை!
மயிலிறகும்,பூந்தளிரும்
கொஞ்சி விளையாடும் ஆனந்தவேளை!
அழுது அடம் பிடிக்காது
நிலவூறும் கண்ணில் குறும்பு மின்ன
படிகார நுரையள்ளி நீ விளையாட
கடிகாரம் கூடச் செயலிழந்து போகுமே!
இறைவன் தன்னையே வார்த்தெடுத்து
மண்ணில் தவழவிட்ட சிற்பமே!
குறையிலா உன் எழில் முன்னே
எல்லாமும் அற்பமே!
ஆயினும்……… .என் தங்கமே,
உனைச்சுற்றிப் பறக்கும்
நீர்க்குமிழி போல, அதில்
தோன்றும் வானவில்
வண்ணங்கள் போல. இங்கு
எதுவும் இல்லை நிரந்தரம்!
என்பதே வாழ்வியல் நிதர்சனம்!
நாளையே நீ என் அன்னையாக
நான் உன் குழந்தையாவேன்!
நாளை நடப்பது நடக்கட்டும்….
இன்று….. இந்த நொடியில்
இன்பச் சாகரத்தில் மூழ்கி
சந்தோஷ முத்தெடுப்போம்..
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
