நிழலை அடுத்து, இறைவன்
அனுமதித்தால்….
ஆயுள்வரை தொடர்ந்து வரும்
துணை நீதானடி!
வாழ்க்கையையே ஆகுதியாக்கி,
முழுமையான அர்ப்பணத்துடன்
வளர்த்த குழந்தைகளும்,
சிறகுகள் முளைத்திடவே
பறந்து போயினர் தத்தம் பாதையில்!
பூமிக்கு வருவதற்கு வரமளித்த
பெற்றோரும் கடமை முடிந்ததென
விட்டுச் சென்றாரடி!
சொந்தம் பந்தம் என ஆயிரம்
உறவுகள்!
கூடும் விலகும்……..
அவரவர் கடமை அவரவர்க்கு.
தொடர்பில் இருப்பர்…..ஆனால்
தொடர்ந்து இருப்பவள் நீதானடி!
இல்லறம் நல்லறமாக
இன்னல்கள் பல சுமந்தாயடி!
இன்றுவரை இன்முகம் காட்டி
பணிவிடை பலவும் செய்தாயடி!
ஓடி ஓடிக் களைப்படைந்த
உன் மென் பாதங்களைச் சற்றே
மென்மையாகப் பிடித்துவிடுகிறேன்,
கவலைகளை மறந்து
நிம்மதியாக உறங்கி ஓய்வெடு…
என் கண்மணி!
என்னில் சரிபாதியாகி,
எனக்கு எல்லாமுமாகி,
என்னைச் சுமந்து, என்
கருவைச் சுமந்து………
சுமந்து சுமந்து சுமைதாங்கியான
உன் செம்பஞ்சுப் பாதங்களுக்கு
மயிலிறகாய் வருடிவிட்டு
உரைப்பேனடி கோடானகோடி
நன்றிகள்!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
