அன்று
சட சடவென்ற மழையின்
முத்த சத்தத்தின்
வெம்மை தாங்காது
வெடித்திருந்த மண்
மழைக்கு தன்னை
ஒப்புகொடுத்து ஏக்கம் தீர உழுதுண்டு
தன் வாசனையை
காற்றில் எங்கும்
பரவ விட்ட வசந்தகாலமதில்
அவர்களின் கூடல் பார்த்து
வானம் வெட்கத்தில் சிவந்து
தன் செம்மையை
கருமேகங்கள் பின்
ஒளித்து வைக்க
முயற்சி செய்து தோற்றது…
சத்தமில்லா மென்முத்தத்தின்
மோகத்தின் மெல்லிசை தாங்காது
துயில் கொண்ட
வாலிபம் விழித்து காமனுக்கு தன்னை அர்ப்பணித்து இரு தேகங்களும் உழுதுண்டு பெண் வாசனையை வெற்றிடம் எங்கும் நிரப்பிய காதல்காலமதில்
வறண்ட என்னிதயமெங்கும்
காதல் பரிமாற்ற மழையின் பெருக்கெடுப்பு…
இன்று
அதே செம்மை வானம் தான்
வெட்கத்தில் சிவக்கவில்லை
மழையில்லா வருத்தத்தில் சிவந்திருக்கிறது
அன்றிருந்த செழுமை இன்றில்லையே…
அவளின் வாசனை நிரம்பிய வெற்றிடம் தந்த நினைவின் அணைப்பில்
என் விழியெங்கும் காதலின் கதகதப்பு…
பெண்ணும் மண்ணும்
ஒன்று தான்…
மழையெனும் பொக்கிஷம்
கிடைக்காத வரை
தன் வாசனையை
மண் அறியாமல்
போய்விடுவதும்…
ஆடவனின் மெய்காதல் இன்றி
மங்கையவள் தன்
பெண்மையை உணராமல்
போய்விடுவதும்
வாழ்வின் வல்லிய சாபமே…
மழையின் அணைப்புக்காக
மண்ணும்
என்னவளின்
இதழ் இணைப்புக்காக
நானும்
காத்திருப்பதை தவிர
வேறு என்ன தான் செய்ய முடியும்…?
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
