மழைப் பிணித்து ஆண்ட மன்னன்
குமிழித்தூம்பமைத்து ஏரியைப்
போற்றியது……….பொற்காலம்!
பிழைப்புக்காக ஆளும் மன்னன்
“குடி” போற்றி, குடிகளைக் காக்கமறந்து
நீர்நிலையழிப்பது……..தற்காலம்!
ஆற்றுநீரை அணையிட்டுக் காத்த
கரிகாலன் வாழ்ந்தது……. பொற்காலம்!
மாற்றுப் பாதையமைத்து மணல்
கொள்ளையடிப்பபது……..தற்காலம்!
வான் முகர்ந்த விசும்பின் விரிநீர்,
கார்மேகமாகி மாதம் மும்மாரி
பொழிந்தது………பொற்காலம்!
ஏன் என்ற கேள்வியின்றி,
ஏரிஸ்கீமில் மனை விற்கும்
ம(மா)க்கள் கூட்டம்…….தற்காலம்!
நீர்நிலையின் கரையில் மரம் வளர்த்து,
ஆக்கிரமிப்பு செய்யாது, அறத்துடன்
வாழ்ந்தது……… பொற்காலம்!
கூறின்றி வனமழித்து,நேர்கொண்ட
அறமொழித்துக் கூத்தாடும் பல
கூட்டம்……… தற்காலம்!
கோன்வழியே குடியும், இது
பொருந்துமே எக்காலத்துக்கும்.
மதிகெட்ட மூடர் செயல் கண்டு
வான்மகள் கோபத்தில் சிவக்க,
கார்மேகம் கலைந்தோடிப்போக,
கதியற்றுப் போன ஏரியோ,
வண்டல் சுமந்து சுமந்து
வற்றிப்போய் வெடித்துச்சிதறி
வெறுமைக்கோலம் பூண்டது!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
