எழுதியவர்: நா.பத்மாவதி
பழமொழி: “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்”
அர்த்தம்:
வெளிப்புறத் தோற்றம், நடை, உடை பாவனைகள் நாகரீகமாக அழகாகத் தோன்றலாம். ஆனால் அந்த அழகின் பின்னால் இருக்கும் குற்றம், குறைகள் தெரிந்தால் மேலோட்டமான தோற்றம் ஒருநாள் மறையும்.
புகழ்பெற்ற நன்னிலம் என்ற ஊரில், பெருமக்கள் அனைவரும் எளிமையாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்தனர். கமலாம்பாள், அவரது ஆடம்பர வசதி வாய்ப்புகளாலும் மனதைக் கவரும் பேச்சாலும், சகல நெறிகளையும் கற்ற அறிவாளியாக புகழ்பெற்று ஊர்த் தலைவி ஆனார்.
அவரின் கம்பீரமான நடை, நாகரீக உடை, தெளிவான பேச்சு பலருக்குத் தீவிர ஈர்ப்பாக இருந்தது. தாலாட்டு பாடுவது போல பேசி மக்கள் இதயங்களில் இடம்பிடித்தார். ஆனால், கமலாம்பாளின் வாழ்க்கையில் உள்ளுக்குள் புதைந்து கிடந்த சில கறைகள் மட்டுமல்லாமல் ஆபத்தான செயல்களும் அவரைச் சுற்றி நிழலாகவே இருந்தன. அது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
கமலாம்பாள் தனது புகழை பெருக்கி, அரசு அதிகாரிகளின் அறியாமையைத் தன் நன்மைக்குப் பயன்படுத்தி, பல அபகரித்தல்களையும், பண மோசடியும், சதி ,சூழ்ச்சிகள் நடத்தியிருப்பதும் ஊரில் யாரும் அறியா விஷயம்.
மேலோட்டத்தில் கமலாம்பாள் மதிக்கத் தகுந்தவராகத் தோன்றினாலும், அவரின் செயல்களால் சுற்றியுள்ள பல கிராம மக்கள் ஏழ்மை நிலைமையிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தனர். இது போல சதிகளை யார் செய்கிறார்கள் என அறியாமல் ஊர்த்தலைவி கமலாம்பாளிடமே புகார் கொடுத்தனர்.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு வணிகர் வந்தார். அவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர் மிகவும் நேர்மையானவராக இருந்தார், மேலும் அவரது செயல்கள் நியாயத்தையும் தர்மத்தையும் பாதுகாத்து வருவதாக இருந்தது. கிருஷ்ணமூர்த்தி, கமலாம்பாளின் புகழைப் பற்றி பல இடங்களில் கேட்டிருந்ததால், அவரை நேரில் சென்று சந்திக்க விரும்பினார்.
அவர் கமலாம்பாளை சந்தித்து, “நீங்கள் மக்கள் வாழ்வில் ஒளி விளக்காக காட்சி அளிக்கிறீர்கள். எனக்கு உங்களைப் போன்ற ஒரு தலைவியின் துணை கொண்டு இந்த ஊரில் நேர்மையாக வணிகம் நடத்த ஆர்வமாக உள்ளது,” என்றார்.
கமலாம்பாளுக்கு இதைக் கேட்டதும் மிகுந்த சந்தோஷமானது. தனது தனித்துவத்தை அறிந்து தான் வந்திருக்கிறான் இந்த வணிகன் என்று பெருமை கொண்டு, “எல்லோரும் என்னை மதிக்கின்றனர், நான் ஏழைகளுக்குப் பெரும் உதவி செய்கிறேன்,” என்று பெருமிதத்துடன் கூறினாள்.
கிருஷ்ணமூர்த்தியை இத்தகைய பேச்சு திருப்தி படுத்தவில்லை.
கிருஷ்ணமூர்த்திக்கு கமலாம்பாளை நேரில் சந்தித்து வந்த பிறகு இந்த பெண்ணை எங்கோ பார்த்த ஞாபகம் ஏற்பட்டது. தீவிர யோசனைக்குப் பின் ஓஓஓ இவள் பாலூரில் சீட்டு கம்பெனி தொடங்கி ஏமாற்றியவளாக இருப்பாளோ என்று சந்தேகமாக இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி தன் சந்தேகத்தை வெளிக்காட்டாது அந்த ஊரில் தங்கி, கமலாம்பாளின் ஒவ்வொரு செயலையும் கவனித்தார். வெகு நாட்களாக கிராம மக்கள் அதிக சிரமங்களில் உள்ளதாகவும், பலர் காணாமல் போகும் நிலை ஏற்பட்டதாகவும் அறிந்தார். மேலும், மக்களிடமிருந்து சொத்துக்களும், உணவுப் பொருட்களும் அபகரிக்கப்பட்டுகமலாம்பாளின் கைத்தடிகளால் அவளிடம் சேர்க்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன.
கிருஷ்ணமூர்த்தி ஒரு நெருங்கிய நண்பரைப் போல கமலாம்பாளின் கைத் தடிகளோடு சேர்ந்தும், அவர்களின் செயல்பாடுகளை மறைந்து இருந்தும் கவனித்தார்.
கமலாம்பாளின் வெளிப்படையான அழகு, பொறுமை, உதவி ஆகியவை வெறும் மேலோட்டமான பாசாங்காகவும் நடிப்பாக மட்டுமே இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
உண்மையை வெளிப்படுத்த சரியான தருணத்திற்காக காத்து இருந்தார் கிருஷ்ணமூர்த்தி.
அந்த நாளும் வந்தது.
ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்தார். விழாவிற்காக அனைத்து மக்களையும் அழைத்து, கமலாம்பாளின் புகழை மக்களிடையே பரப்பி பாராட்டும் நிகழ்ச்சியாக மேடையை அமைத்தார்.
கமலாம்பாளுக்கு எல்லையில்லா மகழ்ச்சி. இந்த மக்கள் நம் புகழை உயர்த்திப் பேச பேச இன்னும் கொஞ்ச நாட்களில் அரசியலில் சேர்ந்துடணும் என்று கனவுக் கோட்டை கட்டினாள் கமலாம்பாள்.
விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்க அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பேசி முடிக்க, கமலாம்பாளை அழைப்பதற்கு முன் கிருஷ்ண மூர்த்தி பேச ஆரம்பித்தார். “விழாவின் நடுநாயகமாக விளங்கும் திருமதி கமலாம்பாளைப் பற்றி சில வார்த்தைகள் உரைக்க கடமைப் பட்டுள்ளேன்” என ஆரம்பிக்க கமலாம்பாளுக்கு பெருமை பிடிபடவில்லை, முகம் நிறைய புன்னகையோடு வணங்கினாள்.
தொடர்ந்த கிருஷ்ணமுர்த்தி “நான் ஒரு ஊருக்கு வரும் முன்பே ஊர் நிலவரங்களை கேட்டு விசாரித்து வருவது வழக்கம். அதுபோல விசாரித்து விட்டு ஊர்த்தலைவியைப் பார்க்க போனேன். பார்த்துமே எங்கோ பார்த்த முகமாகத் தோணிற்று. மிகவும் யோசித்து யார் என உணர்ந்தேன்” என நிறுத்தி கமலாம்பாளின் முகத்தைப் பார்க்க அவள் பதட்டத்தை வெளிக் காட்டாது மனதில் பலநூறு கேள்விகள் ஓட உட்கார்ந்திருந்தாள்.
தொடர்ந்து “நான் பாலூரைச் சேர்ந்தவன், எங்கள் ஊரில் சீட்டு கம்பெனி ஒன்று வந்தது. வட்டி அதிகமாக கொடுப்பதாக ஆசை காட்டி ஏகப்பட்ட பண மோசடி செய்தது. அனைவரும் கூலி வேலை, விவசாயம் செய்பவர்கள். இதை ஏன் உங்கிட்ட நான் சொல்றேன்னு தெரியுமா? இந்த ஊரிலும் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, நெறைய முறைகேடுகள் நடப்பதாக கேள்விப் பட்டேன். யார் செய்கிறார்கள் எனத் தெரியாது இருக்கும் என் போல மக்களுக்காக சொல்கிறேன். அத்தனையும கொள்ளை அடிப்பது நீங்கள் நம்புகிற இந்தத் தலைவி என்ற போர்வையில் இருப்பவர்தான்” என்று அனைத்து துரோகச் செயல்களின் பின்னணி காட்டும் நியாயமான சான்றுகளை வெளியிட்டார்.
கமலாம்பாளின் கைத்தடிகள் அச்சத்துடன் சாட்சியமளித்தனர்.
கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து மக்களிடம் “இதைத்தான் பெரியவர்கள் பழமொழியாக
ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும் என்பார்கள். அதாவது மேலோட்டத்தில் அழகுகாக, பதவிசாக இருந்தாலும் அந்த அழகின் பின்னால் இருக்கும் குற்றம், குறைகள் தெரியாது மேலோட்டமான பழக்கத்தினால் உள்ளத்தின் நன்மையும் தீமையும் தெரியாது.” என்று முடித்தார் கிருஷ்ணமூர்த்தி.
மேலும், பல்வேறு ஊர்களில் திருடப்பட்ட பொருட்களும் கமலாம்பாளின் மாளிகையிலிருந்து மீட்கப்பட்டன. மக்கள் , இவளா ,இவள் இவ்வளவு பெரிய மோசக்காரியா என அதிர்ச்சி அடைந்தனர். கமலாம்பாளின் உண்மை முகம் தோலுரிக்கப் பட்டது.
கமலாம்பாளை மக்கள் போதிய சாட்சியங்களோடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கமலாம்பாளும் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாது அவரின் அரண்மனையை அந்த ஊரின் பள்ளிக் கூடமாக்க எழுதிக் கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வழிகாட்டலில் மக்கள் திருந்தி வாழத் தொடங்கினர்.
இந்தக் கதை மூலம், ஒருவரின் வெளிப்புற ஆடம்பரத்திற்குப் பின்னால் உள்ள மறைந்த உண்மையை அறிந்து செயல்படுவது முக்கியம் என்பதை அறிய முடிகிறது.
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.