எழுதியவர்: கி.இலட்சுமி
பழமொழி: குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
அர்த்தம்:
எல்லாரிடத்திலும் குறைகள் உண்டு. நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் குற்றம் இருக்கும். குற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் உறவோ, நட்போ நீடிக்காது.
பூவரசன் கொஞ்சம் தயக்கமாய்த் தான் கேட்டார் . இருந்தாலும் கேட்க வேண்டியது அவர்தானே …அவருக்கும் வைதேகிக்கும் ஒரே மகள் மலர்விழி. ஒரு வழியாய் அவளுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கிறது. நல்ல இடம் …தங்கமான மாப்பிள்ளை. மனம் நிறைவாக இருந்தாலும்,
உடன் பிறந்த உறவுகளை அழைக்க வேண்டிய கடமை அவர் மனதை நெருடியது.
சொந்தபந்தங்களின் மீது , வைதேகிக்கு நல்ல எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. அதிலும், ஊரில் உள்ள வீட்டையும் நகைகளையும் பங்கிடும் போது, தங்களின் குடும்பத்தை திட்டமிட்டு நன்றாக ஏமாற்றி விட்டதாக வைதேகி புலம்பித் தள்ளினாள். கடந்த மூன்று வருடங்களாக அவள் சொந்த ஊர் பக்கம் போவதே இல்லை .
தூரத்து உறவினர்களின் விசேஷ நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும், நெருங்கிய உறவான சண்முகத்தையும் தேன்மொழியையும் திரும்பி கூட பார்க்கவில்லை. அவர்களாக பேச வரும்போதும், முகத்தை திருப்பிக் கொண்டு போனாள். பூவரசனின் சமாதானம் வைதேகியிடம் பயனற்றுப் போனது
வைதேகி மனதில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். அதற்காக உடன் பிறந்த உறவுகளை ஒதுக்கி வைத்து விட்டு, திருமணத்தை நடத்த அவர் விரும்பவில்லை. நல்ல நேரமாகப் பார்த்து
வைதேகியிடம் கேட்டு விட்டார் .
“வைதேகி… மலரு கல்யாணத்துக்கு தம்பி சண்முகத்துக்கும் தங்கச்சி தேன்மொழிக்கும் அழைப்பிதழ் கொடுக்க வேண்டாமா …நாளும் நெருங்குது…ஊருக்கு போனா வேலை முடிஞ்சுரும் இல்ல…சொந்தபந்தம் அத்தனை பேரையும் வெத்தல பாக்கு வச்சு அழைச்சிடுவோம்…எப்ப கிளம்பலாம்…அப்படியே குலதெய்வத்துக்கு ஒரு பூசைய போட்டுடலாம்…” பூவரசன் சொல்ல சொல்ல சுரத்தில்லாமல் தலையாட்டினாள் வைதேகி.
“க்கும்…பெரிய சொந்தமாம் சொந்தம்…எல்லாம் வேஷம் போடற கும்பலு…சொந்த அண்ணன்னு கூட பாக்காம பரம்பரை வீட்டை எழுதி உங்க தம்பி…குடும்பத்தோட அவரு மட்டும் சந்தோஷமா வாழணும்…நாம லோனுல வீடு வாங்கி கஷ்டப்படணும்… அப்படித்தானே… தேன்மொழி மட்டும் லேசுபட்டவளா…உங்க
அம்மாவோட ரெட்டைவடச்சங்கிலியும் அட்டிகையும் கல்வெச்ச தோடும் எனக்குத்தான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினவதானே…உங்க அப்பா அம்மா செத்தப்போ நீங்கதானே முழு
செலவையும் ஏத்துகிட்டீங்க… வெறுங்கையோட மூக்கை சிந்திட்டு போனவங்கதான்…நீங்கதான் மெச்சிக்கணும் உங்க உறவுகளை…என்னால உங்க கூட வர முடியாது …நீங்களே போயி
அழைப்பிதழ் கொடுத்து கூப்பிடுங்க…வந்தாலும் சரி வரலைனாலும் சரி…எனக்கு கவலையில்லை… என் பொண்ணு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்…கல்யாணம் முடிஞ்சப்புறம் பொண்ணு மாப்பிள்ளையோட
போயி குலதெய்வத்தை கும்பிட்டுக்க வேண்டியது தான் ” அசட்டையாய்ப் பதில் சொன்னாள்.
“சண்முகம் படிக்காதவன்…ஊருல விவசாயம் பார்க்கறான்…அந்த வீடாவது அவனுக்கு கைகொடுக்கட்டுமேன்னுதான் விட்டுக்கொடுத்தேன்…அதுமட்டுமில்ல பரம்பரை வீட்டை அவன விட்டா
வேற யாரு பத்திரமா பாத்துப்பா …ஊருக்கு போனா தங்கறதுக்குன்னு ஒர் இடம் வேண்டாமா …
நம்ம தேனுவுக்கு ரெண்டு பொம்பள பசங்க…மாப்பிள்ளை பழனிச்சாமி தாம் தூம்னு செலவு பண்ணக்கூடிய மனுஷன்… அம்மாவோட நகை அவளோட பொண்ணுங்களை கரையேத்த உதவும்…நமக்கு என்ன குறைச்சல் …ஒரே பொண்ணு மலரு…அவளும் பெரிய கம்பெனியில எம்.பி.ஏ முடிச்சுட்டு கை நிறைய
சம்பாதிக்கிறா…நானும் அரசாங்கத்தில் வேலை பார்த்துட்டு கை நிறைய ஓய்வூதியம் வாங்கறேன் …இதோ அடுத்த மாசத்தோட …வீட்டுக் கடனும் முடியுது …நம்ம ரெண்டு பேருக்கு பெருசா வேற என்ன
செலவு இருக்க போகுது …மலருக்கு தேவையானதை ஏற்கனவே சேர்த்து வச்சுட்டோம் …நமக்கு தேவையானது இருக்கும்போது… விட்டுக் கொடுக்கறதுல என்ன தப்பு …” பூவரசன் சொல்லியது, வைதேகியின் காதில் விழவே இல்லை . வரமாட்டேன் என்று மனைவி பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி தான் மட்டுமே நேரில் சென்று, தம்பியையும் தங்கையையும் பாசமுடன் திருமணத்துக்கு முறையாக அழைத்தார் பூவரசன்.
“ஏன் அண்ணி வரலையா …” என்று இருவரும் கேட்ட கேள்விக்கு,
“உங்க அண்ணிக்கு மூட்டு வலி அதிகமாயிடுச்சுப்பா …ரொம்ப தூரம் பயணம் பண்ணக்கூடாதுன்னு மருத்துவர் சொல்லி இருக்காரு …அதிக வேலையும் செய்ய முடியலை…இந்த காரணத்தால தான் நிச்சயத்தாம்பூலத்தைக் கூட தனியா வைக்காம கல்யாணத்துக்கு முன்நாளே வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம் .. அதான் நான் நேர்ல வந்துட்டேனே …மலர் நம்ம வீட்டு பொண்ணு …எல்லோரும்
குடும்பத்தோட வந்திருந்து சிறப்பா கல்யாணத்தை முடிச்சு கொடுங்க …”பூவரசன் எப்படியோ சமாளித்து விட்டார். ஆனால் திருமணத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று, இப்போதே
யோசிக்க ஆரம்பித்து விட்டார் . ஒரே மகள் என்பதால் பார்த்து பார்த்து சீர்வரிசைகளை வாங்கி
அடுக்கினாள்,வைதேகி . திருமணநாள் நெருங்க நெருங்க வைதேகியை கையில் பிடிக்க
முடியவில்லை . தினந்தோறும் கடைகளுக்குச் செல்வது …தேவையான பொருட்களைப் பட்டியலிட்டு வாங்குவது …வீட்டையும் திருமணத்திற்கு தயார் செய்வது என்று மூச்சு முட்ட நிறைய வேலைகள் …மலருக்கு விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை …பூவரசன் சொல்வதையும்
கேளாமல் அதிக வேலைகளை இழுத்துப் போட்டு செய்து, ஒருநாள் பகல் பொழுதில் மயக்கம் போட்டு விழுந்தாள் வைதேகி. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அதிகபட்ச இரத்த அழுத்தம் உள்ளது என்று சொல்லி, அங்கேயே தங்க வைத்து விட்டனர்.
திருமணத்திற்கு பத்துநாளே இருந்த நிலையில், பூவரசன் நிலை குலைந்து போனார். மருத்துவமனையில் வைதேகி இருக்க , மலரும் தடுமாற என்ன செய்வதென்று தெரியாமல் சோர்ந்து போய்விட்டார்.
நல்ல வேளையாக தம்பி சண்முகமும் தேன்மொழியும் குடும்பத்தோடு, திருமணத்திற்கு முன்னதாக வீட்டுக்கு வந்தனர். “என்னண்ணா அண்ணிக்கு இப்படி ஆகியிருக்கு… எங்களுக்கு தகவல்
சொல்லி இருந்தா முன்னமே வந்திருப்போமே …சரி விடுங்க …எப்படியாவது அண்ணியை தேத்தி கல்யாணத்தை சூப்பரா நடத்திடலாம் …நீங்க ஆக வேண்டியதை பாருங்கண்ணே…துணைக்கு நம்ம கதிரையும் பாபுவையும் கூப்பிட்டுக்கோங்க …பசங்க சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிடுவாங்க…”
உறவுகள் தைரியம் சொல்ல, சற்றே நிமிர்ந்தார் பூவரசன் . தேன்மொழியும் தம்பி மனைவி பரிமளமும் பத்திய சாப்பாடு தயார் செய்து , மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது, வைதேகிக்கு உடன்
இருந்து பணிவிடை செய்வது என்று பொறுப்பை மாறி மாறி எடுத்துக் கொண்டனர். தளர்ந்துபோன வைதேகிக்கு துணையாக ஒருவரின் உதவி கட்டாயம் தேவைப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும் .
ஆரம்பத்தில் உறவுகளைப் பார்த்ததும், வெறுப்படைந்த வைதேகி, பின்னர் அவர்களின் உண்மையான பாசத்தைப் புரிந்து கொண்டாள்.
தேன்மொழியின் பெண் பிள்ளைகளும் தம்பி சண்முகத்தின் பிள்ளைகளும் திருமணத்திற்காக வீட்டை தயார் செய்தனர். மலருக்கு ஆறுதல் சொல்லி அவளுக்கு நலங்கு வைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டு நாளில் எச்சரிக்கையோடு இருக்குமாறு, வைதேகியை வீட்டிற்கு அனுப்பினார் மருத்துவர் .
“அண்ணி நீங்க ஓய்வா இருங்க …திருமணத்தை எப்படி நடத்தணும்னு சொல்லுங்க …ஜாம் ஜாம்னு நடத்திடறோம்..” சொல்லியபடியே பம்பரமாய் சுழன்று வேலை செய்தனர் அனைவரும் …
திருமண வீட்டில் பந்தக்காலிட்டு, மாப்பிள்ளை வீட்டாரை நலங்கு வைக்க அழைத்து , வீட்டிலேயே பக்குவமாய் விருந்து தயார் செய்து அசத்தி விட்டனர். தெருவே வியந்து போகும் அளவுக்கு திருமண ஏற்பாடு செய்தனர். மலரின் முகத்தில் தெரிந்த பூரிப்பை பார்க்க , வைதேகியின் மனம் குளிர்ந்தது.
கட்டிலை விட்டு நகராமல் வைதேகி இருக்க, அவள் நினைத்தபடியே எல்லா திருமண சடங்குகளும் நடந்தன. ஏன் திருமண மண்டபத்தில் கூட …வைதேகியை வசதியாய் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, அனைத்து வேலைகளையும் சந்தோஷமாய்ச் செய்தனர் சண்முகமும் தேன்மொழியும் …
“ சும்மா சொல்ல கூடாதுங்க …உங்க தம்பியும் தங்கையும் அருமையா கவனிக்கிறாங்க … அவங்கள பார்க்கும்போது எங்களுக்கே பொறாமையா இருக்கு … இப்படி ஒரு சொந்த பந்தம் நமக்கு இல்லையேன்னு…” சம்மந்தி வீட்டாரின் புகழுரையில், பூவரசன் மகிழ்ந்தார்.
சிறப்பான வரவேற்பு ஆடம்பரமாக நடந்து முடிந்த பின், அனைவரும் அறையில் ஒன்று கூடினர்.
அப்போது சண்முகமும் தேன்மொழியும் வைதேகியிடம் நெருங்கி அமர்ந்தனர் .
“அண்ணன் எனக்காக பரம்பரை வீட்டை விட்டுக் கொடுத்தாரு…அவருக்கு சேர வேண்டிய பங்கை பணத்தொகையா என் மகன் கொடுத்துடுவேன்னு சொல்லி இருக்கான்…இந்தாங்க அண்ணி இதுல அஞ்சு லட்சம் இருக்கு …முன்பணமா வச்சுக்கோங்க …மத்ததை பின்னாடி தர்றோம்… “ சண்முகம் காசோலையை கையில் திணித்தார்.
“அண்ணி …அம்மாவோட நகைகளை நானே எடுத்துக்கிட்டேன் …ரெண்டு பொண்ணுங்களும் படிச்சிட்டு இப்ப நல்ல வேலை பார்க்குறாங்க …இப்ப அவரும் முன்ன மாதிரி இல்ல …குடும்பத்துக்காக பணத்தை
சேர்க்க ஆரம்பிச்சிட்டாரு … அதான் நம்ம மலருக்கு என் சார்பா பத்துசவரன்ல நெக்லசும் வளையலும் கொண்டு வந்துருக்கேன்…அத்தை சீர் இல்லாம கல்யாணம் நடந்துடுமா என்ன …” தேன்மொழியும்
நகைகளை கையில் கொடுக்க, கண்கலங்கி விட்டாள் வைதேகி .
“அட இருக்கட்டும் சண்முகம் தம்பி …வீடு உங்ககிட்ட இருந்தா என்ன எங்க கிட்ட இருந்தா என்ன …நாளை பின்ன சொந்த ஊருக்கு வந்தா உட்கார இடம் கொடுக்காம போயிடுவீங்களா… பிள்ளைங்க தனியா செட்டில் ஆனதும் பெரியவங்க சேர்ந்து வாழ்ந்துகிடலாம்னு தோணுது … எங்களுக்கும் இந்த ஊர்ல இனிமே யாரு இருக்கா … மலரும் கல்யாணமாகி வெளியூர் போகப் போறா… அவரும் ரிட்டயர்மென்ட் வாங்கிட்டாரு…தனியா இருந்து என்ன சாதிக்கப் போறோம் …பேசாம சொந்த ஊர் பக்கம் வந்து அக்கடான்னு
இருந்துடலான்னு தோணுது … சிங்கம் மாதிரி நம்ம பசங்க இருக்காங்க …பெரியப்பா பெரியம்மாவ பாத்துக்காம போயிடுவாங்களா என்ன …பணம் உங்ககிட்டயே இருக்கட்டும் தம்பி … தேனு எதுக்கும்மா கஷ்டப்பட்டு இந்த நகைகளை வாங்கிட்டு வந்திருக்க … வயசு காலத்துல நீ நகைநட்டு போட்டு நான் பார்த்ததே இல்லை …இந்த நகைகளை நீயே போட்டுக்க … பொண்ணுங்க கல்யாணத்துல கழுத்துல கையில ஒன்னும் இல்லாம இருக்க முடியுமா ..அட உன் பொண்ணுங்களுக்கு முறை செய்யறதுக்கு
எங்களை விட்டா வேற யாரு இருக்கா … அவங்க கல்யாணத்தையும் நாங்களே முன்னாடி நின்னு சிறப்பா நடத்தறோம் .உண்மையா சொல்றேன் …இன்னைக்கு இந்த கல்யாண சீரும் சிறப்புமா நடக்குதுன்னா அதுக்கு உங்களோட நல்ல மனசுதான் காரணம் …கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் பத்துநாள் எங்க கூட
இருந்துட்டு தான் போகணும் …என்னை இவ்வளவு நாளா நல்லா பாத்துகிட்ட உங்கள நானும் கொஞ்ச நாளாவது நல்லா பாத்துக்கிட வேண்டாமா …என்னங்க நான் சரியாத்தானே சொல்றேன்…” வைதேகி
கேட்க , அவளின் மனமாற்றத்தைக் கண்ட , பூவரசனின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிர்த்தது.
ஆம்! உறவுகளாய் நாம் மீண்டும் பிறப்போமா என்று தெரியாது … கசப்பும் வெறுப்பும் கொட்டி…உறவுகளோடு இருக்கும்போது பாரா முகமாய் இருப்பது நல்லதல்ல … இந்த உலகில் குறை இல்லாத
மனிதர் யார் தான் உண்டு …கொஞ்சம் விட்டுக் கொடுத்தும் தட்டிக் கொடுத்தும் சேர்ந்து வாழ்ந்தால் உறவுகளுடன் கூடி வாழும் வாழ்க்கை ஆனந்தமே!
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.