எழுதியவர்: அருள்மொழி மணவாளன்
பழமொழி: 1. ஆடத்தெரியாதவள் அரங்கம் கோணல் என்றாளாம்
2. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
மங்கள வாத்தியம் முழங்க, ஐயர் மந்திரம் சொல்ல, தாலி கட்டி ராகாவை தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான் ரஞ்சன்.
நடுத்தர குடும்பம் தான் ரஞ்சனின் குடும்பம். தந்தை தனசேகர் தான் படித்த படிப்புக்கேற்ற வேலை செய்து தன் இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்தார். மூத்தவன் மனோகர் கல்லூரி படிப்பை முடித்ததும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விட்டான். அவன் வேலைக்குச் சேர்ந்ததும் மல்லிகாவை அவனுக்கு திருமணம் முடித்து வைக்க, அவளும் குடும்ப பெண்ணாக, பொறுப்பான மருமகளாக, தன் அத்தைக்கு உதவியாக குடும்பத்தை பார்த்துக்கொண்டும், தன் ஒரே மகனையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறாள்.
ரஞ்சன் ஐடி படிப்பை முடித்து பிரபல ஐடி நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் வேலை செய்து கொண்டு இருக்கிறான். ராகாவின் குடும்பமோ சற்று வசதியானவர்கள். ஆனாலும் திருமணத்தில் பணத்தின் செழுமை அதிகம் தெரியாமல் சொந்தங்களின் பாகங்களும் மகிழ்ச்சியும்தான் நிறைந்து இருந்தது.
திருமணம் சிறப்பாக நடந்து முடிந்து, மறு வீடு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து, ஒரு வாரம் கழித்து சின்ன மருமகளாக வீட்டிற்குள் நுழைந்தாள் ராகா.
வாடகை வீடு என்றாலும், மூன்று படுக்கையறை, சமையலறை, பூஜையறை, ஹால் என்று மிகவும் வசதியாக தான் இருந்தது ரஞ்சனின் வீடு.
மூத்தவன் மனோகரன் வருமானம் வீட்டின் சாப்பாட்டிற்கும் அவன் மகனின் தேவைக்கும் சரியாக இருக்க, வீட்டு வாடகையும் மேற்படி ஆகும் செலவுகள் அனைத்தையுமே இளைய மகன் ரஞ்சன் பார்த்துக்கொண்டான். அதில் ராகாவிற்கு மிகவும் பெருமை, தன் கணவனால் தான் இவர்கள் இவ்வளவு பெரிய வீட்டில் இருக்கிறார்கள் என்று.
அது மட்டுமல்லாமல் ராகாவும் வேலைக்கு செல்வதாலும் கணவன் வீட்டை விட தங்கள் பெற்றோர் பணம் படைத்தவர் என்பதாலும் அவள் மற்ற யாரையும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மூத்த மருமகள் மல்லிகாவிடம் அதிகாரமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார் ராகா. இதை அவர்களது மாமியார் கவனித்தாலும், சின்ன பெண் போக புரிந்து கொள்வார் என்று அமைதியாக இருந்தார். அது மட்டுமல்ல இப்பொழுது அவளை கடிந்து பேசினால் குடும்பத்தில் இருந்து ஒட்டாமல் சென்று விடுவாளோ என்ற ஒரு பயமும் இருந்தது.
ரஞ்சனோ மனைவியின் மீது இருந்த மோகத்தில் வீட்டில் நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தான், புது மாப்பிள்ளை அல்லவா.
நாட்கள் கடக்க கல்யாண வேலைகள் எல்லாம் ஓய்ந்து, திருமண விடுப்பும் முடிந்து ரஞ்சனும் ராதாவும் வேலைக்கு கிளம்பினார்கள்.
காலையிலேயே சமையல்களை எல்லாம் முடித்து, எல்கேஜி செல்லும் தன் மகனை எழுப்பி குளிக்க வைத்து பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தாள் மல்லிகா.
அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ஆண்களுக்கு பரிமாறும் பொறுப்பை மாமியார் கமலம் எடுத்துக் கொண்டார். மல்லிகாவும் கமலமும் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்க சாப்பிட வந்து உட்கார்ந்த ராகா, “என்ன தினமும் இட்லி தானா?” என்று குறைப்பட்டு கொண்டேன் இரண்டு இட்லிகளை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள்.
சாம்பாரை ஊற்றிக் கொண்டு “இதற்குப் பெயர் சாம்பாரா?” என்று மட்டம் தட்டிக் கொண்டே இரண்டு இட்லிகளையும் விழுங்கி விட்டு “ஒழுங்கா சமைக்க கத்துக்கோங்க அக்கா” என்று மல்லிகாவை பார்த்து சொல்லிவிட்டு மாமியாரிடமும் “நான் கிளம்புகிறேன்” என்று சொல்லி அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள்.
மல்லிகாவிற்கு அவளது சமையலை ராகா குறை கூறியது வருத்தமாக இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இனிமேல் இன்னும் கொஞ்சம் கவனமாக சுவையாக செய்ய வேண்டும் என்று நினைத்து, ராகாவிற்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு கேட்டு சமைத்தாள்.
நாட்கள் கடக்க எவ்வளவு தான் ருசியாக செய்து வைத்தாலும் ஏதாவது ஒரு செய்து சொல்லிக் கொண்டே தான் இருந்தால் ராகா.
எல்லோருக்குமே சுவையாக இருக்க, ராகா மட்டும் குறை சொல்ல, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்டார் கமலம்.
அதற்குள் மாதங்கள் ஓடி இருக்க ஒரு ஞாயிறு அன்று தாமதமாக எழுந்து வந்தாள் ராகா.
அன்று காலை உணவாக இட்லி இருந்தது ராதாவிற்கு கோபம் வந்தது. “அலுவலகம் செல்லும் பொழுது தான் தினமும் இட்லி தோசை என்று போடுறீங்க. விடுமுறையில் வீட்ல இருக்கிற அன்றாவது, பூரி பொங்கல் என்று ஏதாவது வித்தியாசமாக செய்யலாம் அல்லவா?” என்று எரிச்சலாக கேட்டாள்.
உடனே கோபம் கொண்ட கமலம் “மல்லிகாவிற்கு நேற்றிலிருந்து காய்ச்சல். உடம்பு சரியில்லை. என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். எனக்கும் கை கால் எல்லாம் வலிக்கிறது. அதனால் மதியானத்திற்கு நீயே சமைத்து விடு” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்று விட்டார்.
முதலில் அதிர்ந்த ராகா, அதான் யூடியூப் இருக்குதே அதை பார்த்து சுவையாக சமைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டாள். உடனே என்ன சமைக்கலாம் என்று ஃபோனை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.
கணவனிடம் சென்று அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, “மட்டன் செய்” என்று சொல்லிவிட்டு ஞாயிறு ஓய்வு என்று குப்புற படுத்து தூங்க ஆரம்பித்து விட்டான்.
சரி மட்டன் குழம்பு செய்து விடுவோம் என்று, தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் போட்டுவிட்டு, அக்காவிற்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று, அவர்களது அறைக்கு கதவை தட்டி விட்டு சென்றாள்.
காய்ச்சலின் காரணமாக மல்லிகா சோர்வாக படுத்திருக்க, ஒரு பக்கம் கீழே உட்கார்ந்து அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான் அவர்களது மகன். அறைக்குள் வந்த ராகாவை கண்டதும் எழ முயன்ற மல்லிகாவிடம், “படுத்துக்கோங்க அக்கா” என்று சொல்லி “காலையில் சாப்டீங்களா?” என்று அக்கரையாக கேட்டாள்.
“அத்தை இட்லி கொடுத்தாங்க. வாய் ரொம்ப கசக்குது. கஷ்டப்பட்டு சாப்பிட்டேன்” என்று சோர்வாக கூறினாள்.
“மத்தியானம் நான்தான் சமைக்கப் போறேன் உங்களுக்கு ஏதாவது செய்யணுமா?” என்று கேட்க
“ரசம் வைப்பாய் தானே.ஜஅதுவே போதும். சோறு குழைவா வச்சு ரசம் வெச்சி சாப்பிடுகிறேன்” என்றாள் மல்லிகா.
“சரிக்கா, நீங்க ஓய்வெடுங்க. நான் சமையல் ரெடி ஆனதும் உங்களை கூப்பிடுகிறேன்” என்று சொல்லி சமையலறைக்கு சென்றாள். அதற்குள் மட்டன் வந்துவிட அனைத்தையும் சுத்தம் செய்தாள். ஃபோனை அடுப்பு மேடையில் வைத்துக் கொண்டே, ஒவ்வொன்றாக அதில் உள்ள குறிப்பு படி பார்த்து பார்த்து செய்தாள்.
புதிதாக சமையல் செய்வதால் வீடியோவை 10 15 தடவைக்கு மேல் பார்த்து விட்டாள். ஒவ்வொன்றையும் அப்படியே செய்ய, ‘என்னடா இது? வீடியோ பத்து நிமிஷம் தான் ஓடுது. சமையல் ஒரு மணி நேரம் ஆகியும் இன்னும் முடியலையே!’ என்று நினைத்தாள்.
ஒரு வழியாக சோறு ஆக்கி, மட்டன் குழம்பு வைத்து, ரசம் வைக்க அவளுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
உடம்பும் மிகவும் அலுப்பாகவும் வேர்வையாகவும் இருந்தது. அனைத்தையும் எடுத்து உணவு மேஜையில் அடுக்கி வைத்து விட்டு குளித்துவிட்டு வந்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தாள்.
மனோகர் ஒரு வேலை விஷயமாக வெளியில் சென்று இருக்க, மற்ற அனைவரும் வந்து சாப்பிட அமர்ந்தனர். முதன் முதலில் ராகா சமைத்து இருப்பதால் அவள் மிகவும் ஆர்வமாக அனைவரின் முகத்தையும் பார்த்திருந்தாள்.
சாப்பாட்டை பிசைந்து வாயில் வைத்த ரஞ்சன் அப்படியே துப்பி விட்டான். “என்னடி சாப்பாடு இது? ச்சை வாயிலையே வைக்க முடியல. வீட்ல இருந்த உப்பு எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டியா?” என்று கோபமானான்.
அவனின் செயலில் எல்லோருமே ஒரு நிமிடம் அதிர்ந்தனர். கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு பார்த்த கமலமும் “உனக்கு சமைக்க தெரியுமா? தெரியாதா?” என்றார்.
‘இரண்டு மணி நேரம் கஷ்டப்பட்டு சமைச்சிருக்கேன் இவங்க என்ன இப்படி சொல்றாங்க’ நினைத்த ராகா, “எனக்கு எல்லாம் நல்லாதான் சமைக்க தெரியும். எங்க வீட்ல கிளாஸ் டாப் ஸ்டவ், அதிலும் நான்கு பர்னர் இருக்கும். இங்க வெறும் சில்வர் ஸ்டவ், அதுவும் ரெண்டு பர்னர்தான் இருக்கு. இதில் இவ்வளவு சமைத்ததே பெரிய விஷயம்” என்று தன் சமையலில் குறையில்லை, வீட்டில் இருந்த அடுப்பில் தான் குறை என்று பெருமையாக கூறினாள்.
உடனே கமலம் “ஆடத் தெரியாதவ, அரங்கம் கோணல்னு சொன்னாலாம். அந்த கதையா அல்லவா இருக்கு. இந்த அடுப்புல தானே மல்லிகா இத்தனை நாள் சமைச்சுக்கிட்டு இருந்தா. அப்ப மட்டும் எப்படி ருசியா இருந்தது” என்றார் கோபமாக
“முதலில் நீ எடுத்து சாப்பிட்டு பாரு” என்று சொல்லி ஒரு தட்டில் அவள் செய்ததை வைத்து சாப்பிட கூறினார்.
வீம்பிற்காக சாப்பிட ஆரம்பித்த ராகாவால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிட முடியாமல் திணறினாள். அவளின் நிலையை கண்ட கமலம் “பார்த்தாயா? உன்னால ஒரு வாய் கூட சாப்பிட முடியலை. இந்த லட்சணத்துல நீ மல்லிகாவின் சமையலை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறாயா?” என்று திட்ட, அனைவருக்கும் ராதாவைக் கண்டு வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனாலும் சாப்பிட முடியாமல் சென்று விட்டதை என்று அமைதியாக இருக்க, மல்லிகா தான் “பாவம் அத்தை. முதல் முறை அமைத்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். போகப்போக கத்துக்குவா” என்று அவளுக்கு ஆதரவாக பேசினாள்.
“எனக்கும் அவளை ஒன்றும் திட்டனும்னு அவசியம் இல்லை மல்லிகா. சமையல் தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லி இருக்கலாம் இல்ல? இப்ப பாரு! யாராலயும் சாப்பிட முடியலை, அவ்வளவும் வேஸ்ட். சாப்பாட்டு பொருள இப்படித்தான் வீண் செய்வாங்களா?” என்று ஆதங்கமாக கூறினார்.
“அதெல்லாம் ஒன்னும் வீணா போகாது அத்தை. ஒரு பத்து நிமிஷம் இருங்க” என்று சொல்லி அனைத்தையும் எடுத்து சமையலறையில் வைக்க கூறினாள். அமைதியாக மல்லிகா சொன்னவற்றை செய்தால் ராகா. ஒரு ஸ்பூன் எடுத்து குழம்பை ருசிப்பார்த்த மல்லிகா, உடனே மடமடவென்று வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். அரிசி மாதிரி ஆக்கி வைத்திருந்த வேகாத சொற்றை மறுஉழை வைத்து நன்றாக வேக வைத்து வடித்தாள்.
வெறும் புளிப்பாக இருந்த ரசத்தை மேலும் அதற்குரிய பொருட்கள் போட்டு உப்பையும் புளிப்பையும் சமப்படுத்தினாள். அது போலவே வேகாத மட்டனையும் மீண்டும் வேக வைக்க அதில் காரத்தையும் உப்பையும் குறைப்பதற்கு உருளைக்கிழங்கையும் போட்டு சமன்படுத்தினாள். இப்படியாக கால் மணி நேரத்தில் அனைத்தையுமே மாற்றி சமைத்து எடுத்து வைத்து அனைவரையும் சாப்பிட கூறினாள். மல்லிகா வேலை செய்வதை பார்த்துக் கொண்டே நின்று இருந்த ராகாவிற்கு தான் செய்த தவறு புரிய ஆரம்பித்தது.
காத்திருந்த அனைவரும் உணவு வந்ததும் உண்ண ஆரம்பிக்க, உணவின் சுவையை பாராட்டினான் ரஞ்சன். “அப்பா.. இப்பதான் சாப்பாடு, சாப்பிடுற மாதிரி இருக்குது” என்று சொல்லி.
சோகமாக அமர்ந்திருந்த ராகாவை கண்ட கமலம் அவளை சாப்பிடும் படி சொல்லி, “எந்த ஒரு வேலையிலும் மிக சுலபமாக குறைகளை கண்டுபிடித்து, இப்படி செய்யலாம், அப்படி செய்திருக்கலாம் என்று சொல்வது சுலபம். செய்வது கடினம். அதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். குறை கூறிக் கொண்டு இருக்க கூடாது, சரியா?” என்றார்.
ராகாவும் தனது தவறை உணர்ந்து “என்னை மன்னித்து விடுங்கள் அத்தை” என்று மனதார மன்னிப்பு கேட்டாள்.
பின்னர் மல்லிகாவிடவும் “அக்கா என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் தினமும் எங்களுக்காக பார்த்து பார்த்து சமைப்பதை நான் குறை கூறிக் கொண்டே தானே இருந்தேன். இருந்தும் நீங்கள் என்னிடம் அன்பாக தான் பேசினீர்கள். அது எப்படி அக்கா?” என்று கேட்க,
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” ராகா. இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் வாழ்வோம் என்று தெரியாது. மீண்டும் இப்படி ஒன்றாக பிறந்து இருப்போமா என்றும் தெரியாது. அப்படி இருக்க இருக்கும் காலம் வரைக்கும் நம் அருகில் உள்ளவர்களின் தவறுகளை கண்டு வருந்தி, அவர்கள் திருத்துகிறேன் என்று சொல்லி, சண்டை போட்டுக் கொண்டு வாழ்வதைவிட, அவற்றை கண்டு கொள்ளாமல், அவர்களின் மீது நாம் உண்மையான அன்பை செலுத்தி, வாழ வேண்டும் என்று நினைத்தேன். நாம் இருவரும் தனித்தனி வீட்டிலிருந்து இங்கு வாழ வந்தவர்கள். நாம் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தானே குடும்பமும் கூட்டுக் குடும்பமும் நிம்மதியாக இருக்கும்?” என்றாள் மல்லிகா.
மல்லிகா சொல்வதும் சரியாக பட, இனிமேல் அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் ராகா.
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.