பழமொழி போட்டி கதை: நட்புக்கு மரியாதை

by admin 2
74 views

எழுதியவர்: குட்டிபாலா

பழமொழி: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு

மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிணுங்கிய மொபைலை எடுத்து “சொல்லு மதன். வந்து கொண்டிருக்கிறேன்” என்றதும் “இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய்?” என்று கேட்டவனிடம் “மெயின் ரோட்டில் மூர்த்தி மெடிக்கல் ஷாப் முன்னால் நிற்கிறேன். மருந்து வாங்கிக்கொண்டு அரைமணி நேரத்தில் வந்து விடுவேன்” என்றான் கதிர்வேல்.
“எப்போதும் லேட் என்பது உனக்கு வழக்கமாகிவிட்டது. சரி சரி சீக்கிரம் வா. ஜேம்ஸ், வெங்கட், கோமதிநாயகம்,,கைலாஷ், பாக்கியராஜ் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் மதன்.
“ஓகே” என்று கூறிவிட்டு மருந்து கடைக்குள் சென்று டாக்டர் சீட்டைக் கொடுத்து “எல்லா மருந்துகளும் இருக்கிறதா?” என்று கேட்டதும் “சார் எங்களிடம் அனைத்து மருந்துகளும் கிடைக்கும்.
24 மணி நேரமும் கடை திறந்திருக்கும். சுற்று வட்டாரத்தில் பெரும்பான்மை மக்கள் எங்கள் வாடிக்கையாளர்களே. டோர் டெலிவரியும் உண்டு. நீங்கள் சென்னைக்கு புதியவர் போலும் அதனால்தான் எங்களைப் பற்றி சரியாக தெரியவில்லை” என்று சுய புராணம் கூறி போரடித்தவாறே மாத்திரைகளை எடுத்து வைத்தார்.
“ஆமாம். ஆமாம். கூட்டத்தைப் பார்த்தாலே தெரிகிறதே” என்று சொல்லும்போது சிணுங்கிய மொபைலை எடுத்து “சொல் கைலாஷ். நீ வருகிறாயா! மகிழ்ச்சி. மதன் வீட்டு அட்ரஸா? ‘ஏதோ இந்து அப்பார்ட்மெண்ட்’ என்று சொன்னதாக நினைவு. அவனிடமே கேளேன்” என்றதற்கு “அவனது மொபைல் பிஸியாக உள்ளது”
என்று வைத்து விட்டான்.
உடனே மதனை அழைத்து , “கரக்ட் அட்ரஸ் சொல்லு” என்ற கதிர்வேலிடம் “நேதாஜி நகர், நாலாவது கிராஸ், இந்து அப்பார்ட்மெண்ட் பிளாக் ஏ 222”  என்று பதில் சொல்லிவிட்டு 
“சீக்கிரம் வா கைலாஷும் வருகிறான்” என்றான் மதன்.  “அவனுக்கு உன் விலாசம் அனுப்பி விட்டாயா?” என்று கதிர்வேல் கேட்டதற்கு “இப்போதுதான் அனுப்பினேன்” என்றான் மதன்.

மாத்திரைகளடங்கிய பையை எடுத்துக்கொண்ட கதிர்வேல் “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற இனிய பெண் குரல் கேட்டு “எஸ்” என்று திரும்பினான். வயது 60 கடந்தபோதும் பெண்களின் அழகை ரசிக்கும் சராசரி ஆண்களில் அவனும் விதிவிலக்கல்லவே.
செதுக்கி வைத்த சிலை போல் இருந்தாள் அவள்.  20-22 வயது இருக்கலாம். அவளின் சிவந்த நிறத்திற்கு ஏற்றாற்போல்  கச்சிதமான உடை. அதுவும் லேட்டஸ்ட் ஸ்டைலில். கல்லூரி மாணவியாக இருக்கலாம். அவள் கேட்காமலேயே ‘ஏதாவது உதவி வேண்டுமா’ என்று  கேட்க வைக்கும் தோற்றம்.  கண்களால் அவன் தன்னை அளப்பதை புரிந்து கொண்டாள் போலும். பார்வையை திருப்பிக் கொண்டாள்.  இது அவளிடம் ஏதாவது பேசியே தீர வேண்டும் என்ற ஆவலை தூண்டியது அவனுக்குள்.

“என்ன மேடம், ஏதோ கேட்டீர்களே?”  என்றதும் “நீங்கள் இந்து அபார்ட்மெண்ட்டுக்குப் போவதானால் எனக்கு லிப்ட் தர முடியுமா? என் ஸ்கூட்டர் ரிப்பேர். தெருமுனையில் உள்ள ஒர்க்க்ஷாப்பில் சொல்லிவிட்டால் போதும். சரி செய்து வீட்டிற்கு கொண்டு வந்து விடுவார்கள்” என்ற அவள் குரலில் தேனின் சுவையை உணர்ந்தான் கதிர்.
“இதற்கா இவ்வளவு தயக்கம்” என்று சிரித்ததும் அவளும் சிரித்தாள். அது அவனை மயக்கிற்று.  அவரவர் மருந்து பைகளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம்.
பின்னால் ஏறிக்கொண்டவள் சினிமாக்களில் வருவது போல் முதலில் என் தோளை பிடித்துக் கொள்வாள்; பிறகு இடுப்பை கட்டிக் கொள்வாளோ என்று உள்ளூர பயந்தாலும் மனதில் ஒரு கிளுகிளுப்பு. ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. சற்று ஏமாற்றந்தான்.
தெருமுனை ஒர்க் ஷாப்பின் உள்ளே சென்று பேசிவிட்டு மறுபடியும் வந்து ஏறிக்கொண்டாள். அப்பார்ட்மெண்டில் உள்ளே வந்து இறங்குகையில் “எந்த பிளாட்டில் இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“ஆர்5. தேங்க்ஸ். பை” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றாள். உள்ளே நுழைந்ததுமே மதன் “என்னப்பா கதிர், வாயெல்லாம் பல்! ரொம்ப குஷியாக இருக்கிறாயே” என்றதும் நடந்தவற்றை முழுவதுமாக விவரித்துவிட்டு  “இனி அடிக்கடி உன்னை சந்திக்க வருவேன். அந்த சாக்கில் அவளையும் பார்க்கலாமே” என்று கண்ணடித்தான்.
“எந்த ஃப்ளாட்டில் இருக்கிறாளாம்?”  என்ற மதனிடம் “ஆர்5” என்றதும் “முட்டாள். இங்கே இருப்பதே H வரை எட்டு பிளாக்தான்.  ஏதோ வசமாக ஏமாந்திருக்கிறாய்” என்று சிரித்தான் மதன்.
“சரி அவள் பெயர் என்ன?” என்று தொடர்ந்தவன் “கேட்கவில்லை என்று நான் சொன்னதும் ஐம்பதாண்டு நண்பன் என்ற உரிமையில் எழுத முடியாத சொற்களில் திட்டினான்.
சுமார் அரை மணி நேரத்தில் மற்ற நண்பர்களும் வந்து விட்டனர். மதன் அவர்களிடம் இது பற்றி சொல்லவும் எல்லோருமாக கதிர்வேலை கேலி செய்து கூத்தடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்த மதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஒருவரும் மூன்று காவலர்களும் வந்தனர். வந்தவர் “டி.என் 82 பி 2345  மோட்டர் சைக்கிள் யாருடையது?” என்று கேட்டவுடன் “என்னுடையதுதான் என்ன விஷயம்” என்றான் கதிர்வேல்.
“இந்த வயதில் ஏன் சார் போதை மருந்து வியாபாரம் செய்கிறீர்கள்?” என்று கடுமையாக கேட்டார்.
“சார், அவர் அப்படிப்பட்டவர் இல்லை. மிகவும் நல்லவர்” என்று குறுக்கிட்ட மதனிடம் “உங்கள் எல்லோரையும் சேர்த்து கைது செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம்”  என்றவர் “நீங்கள் யார் யாருக்கு சப்ளை செய்கிறீர்கள்? முக்கியமாக கல்லூரி மாணவர்களையும் I.T. இளைஞர்களையும் குறி வைத்து இந்த கொடுமை செய்வதற்கு வெட்கமாக இல்லையா?  அதிலும் உங்கள் பேரன் பேத்தி வயதுள்ள இளைஞர்களை கெடுக்கும்
இத்தகைய தொழிலில் இந்த வயதில் கும்பலாக சற்றும் மனிதாபிமானமில்லாமல் ஈடுபட்டிருக்கிறீர்களே? உங்களில் யார் தலைவன்?  என்று பொரிந்து தள்ளினார். ஜேம்ஸ் “சார், நீங்கள் தவறுதலாக எண்ணுகிறீர்கள். நாங்கள் எல்லோரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். பிளஸ் டூ வரை ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தோம். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேலைகளில் இருந்த போதும் எங்கள் நட்பு
இன்றுவரை தொடர்கிறது. இன்று மதனின் 65 ஆவது பிறந்தநாள். அவன் வீட்டில் மனைவியும் மற்றவர்களும்  வெளியூர் போயிருப்பதால் ஒரு சின்ன பார்ட்டி. நீங்கள் நினைப்பதுபோல் எங்களில் யாருக்கும் போதை பழக்கம் கிடையாது. போதை மாத்திரை விற்றுப் பிழைக்கும் ஈனப்பிறவியும் நாங்கள் அல்ல” என்று சற்றே கோபத்தோடு சொன்னான்.
அவரை முறைத்துப் பார்த்த இன்ஸ்பெக்டரிடம் கைலாஷ், “சார், ஜேம்ஸ் ஒரு நேர்மையான ரிட்டையர்டு தாசில்தார். நான் ரிட்டயர்டு இன்ஜினியர். நாங்கள் மனச்சாட்சியையும் சட்டத்தையும் மதிப்பவர்கள். நாங்கள் ஏன் சார் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் இறங்க வேண்டும்?” என்றான்.
அவர்களை மீண்டும் முறைத்துப் பார்த்த இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம்  “மெடிக்கல்
ஷாப்பில் வாங்கி வந்த போதை மருந்துகள் எல்லாம் எங்கே?” என்று அதட்டினார்.
அதிர்ச்சியில் வாயடைத்துப்போன கதிர்வேல்  மருந்துக் கடையிலிருந்து வாங்கி வந்த
பையை அப்படியே டீப்பாய் மீது கவிழ்த்தான்.
ஒவ்வொன்றாக சோதனை செய்த இன்ஸ்பெக்டர் ஒரு கவரிலிருந்த பத்து மாத்திரைகள்
அடங்கிய மூன்று அட்டைகளைக் காண்பித்து “இது என்ன? சொந்த உபயோகத்திற்கா? இல்லை வியாபாரத்திற்கா?” என்று கேட்டார். பதில் சொல்ல முடியாமல் திருதிருவென்று விழித்தான் கதிர்வேல். 
மற்றவர்களும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு செய்வதறியாது
திகைத்து நின்றனர்
“சார் நான் ஒரு கிரிமினல் வக்கீல்”  என்ற மதனிடம் “அதனால்தான் இந்த கிரிமினல் வேலைகளோ” என்று நக்கலாக சிரித்தார்.

அதனை பொருட்படுத்தாமல் “நன்றாக பாருங்கள் இந்தப் பையிலிருந்தவற்றை. அதில் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை சீட்டும் மருந்துக்கடை பில்லும் இருக்கின்றன.  டாக்டர் பரிந்துரைத்த ஐந்து மாத்திரைகளில் ஒன்று இல்லை. அதற்குப் பதில் இந்த போதை மாத்திரை வந்துள்ளது. கடையில் தவறுதலாக மாற்றி கொடுத்திருக்கலாமே” என்றான் மதன்.
“அந்த மருந்துக்கடைதான் உங்களுக்கு சில்லறை விற்பனைக்கு தருகிறது என்று தகவல் தெரிந்துதான் வந்துள்ளோம். மேலும் உங்கள் கூட்டாளியான அந்தப் பெண்ணை வெகு நாட்களாக கண்காணித்ததில் அவள் இதில் முக்கிய புள்ளி என்பதும் தெரியும். ஆதாரத்துடன் உங்களைப் போன்ற சில்லறை வியாபாரிகளை கூண்டோடு பிடிக்க நெடுநாட்களாக வீசிய வலையில்தான் இன்று இவர் மூலம் நீங்களெல்லாம் சிக்கியுள்ளீர்கள். அந்த டூவீலர்  மெக்கானிக்கும் சிக்கிவிட்டான்.  அந்தப் பெண்ணையும் பிடித்து விட்டால் இந்த அபார்ட்மெண்ட்டில் மட்டுமன்றி உங்களோடு சம்பந்தப்பட்ட மொத்த
குற்றவாளிகளையும் பிடித்து விடுவோம்” என்று சொல்லிவிட்டு  “அந்தப் பெண்ணை கூப்பிடுங்கள்” என்று மிரட்டினார்.
நடுங்கும் குரலில் “சார் அவள் யாரென்றே எனக்கு தெரியாது. மருந்துக்கடையில் லிப்ட் கேட்டாள். இங்கே வந்ததும் இறங்கி போய்விட்டாள்” என்றான் கதிர்வேல்.
“அப்படியா. சரி போகலாம் ஸ்டேஷனுக்கு” என்ற இன்ஸ்பெக்டரிடம் மதன் “சார், ஒரு நிமிடம். என் நண்பன் அந்த மருந்து கடைக்கு சென்று மாத்திரை மாறிவிட்டது என்று சொல்லட்டும். ஒருவேளை கடைக்காரர்  இவரிடம் தவறுதலாக தரப்பட்ட போதை மாத்திரையை அந்தப் பெண்ணை அழைத்து கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன். நீங்கள் சம்மதித்தால் நாங்கள் இருவரும் முயற்சித்து பார்க்கிறோம்”
என்றான்.
யோசித்த இன்ஸ்பெக்டரிடம் “நாங்கள் எங்கும் ஓடிவிட மாட்டோம். நம்பிக்கை இல்லாவிட்டால் மப்டியில் எங்களை கண்காணித்துக் கொள்ளுங்கள்” என்றதும் “சரி. நீங்கள் ஒரு வக்கீல் என்பதாலும் நீங்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் என்பதாலும் சம்மதிக்கிறேன்” என்றார்.
மதனும் கதிர்வேலும் மருந்துக்கடையில் பில்லையும் மாத்திரைகளையும் காண்பித்ததும்
“சாரி சார். அவசரத்தில் அந்தப் பெண்ணிடம் தர வேண்டியதை உங்களிடம் தந்துவிட்டேன். பத்து நிமிடங்கள் முன்புதான் அந்த பெண்ணும்  எனக்கு டோஸ் விட்டாள்” என்று கூறிவிட்டு மொபைலில் அந்தப் பெண்ணை அழைத்தார்.
கதிர்வேல் தன்னுடைய மாத்திரைகளை பெற்றுக்கொண்டு மதனுடன் மறைவில் நின்ற இன்ஸ்பெக்டரோடும் காவலர்களோடும் மற்ற நண்பர்களோடும் சேர்ந்து கொண்டான்.
அரை மணி நேரத்தில் ஆட்டோவில் வந்து இறங்கினாள் அந்த அழகு தேவதை. படியேறி கடைக்குள் நுழைந்தவளை தொடர்ந்து போலீஸாரோடு வந்த கதிர்வேலை கண்டதும் மலைத்து நின்றவளிடம் “ஹாய் ஸ்வீட்டி. R5ல் இருப்பதாக சொன்னாயல்லவா. அதான் உன்னை இப்போது R5 ஸ்டேஷனுக்கு அழைத்துப் போக வந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர்” என்றான்.
“நன்றி மதன். நல்லவேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு உன்னால்” என்றான் கதிர்வேல்.
“ஆமாம். ஆமாம்” என்றனர் மற்ற நண்பர்களும்.
மதன் “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்றதும் இன்ஸ்பெக்டர்
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் டாக்டர் சீட்டையும் கடைபில்லையும் வைத்து விளையாடி விட்டீர்களே சார்” என்றார். தொடர்ந்து “நண்பர்களே. உங்கள் பார்ட்டியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்” என்றவர் மதனிடம் “பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நட்பின் வலிமைக்கு தலை வணங்குகிறேன்” என்று சொல்லி விடைபெற்றார்.

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!