பழமொழி போட்டி கதை: பூலோக  சொர்க்கம் 

by admin 2
60 views

எழுதியவர்: நா.பா.மீரா

பழமொழி: குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை           

‘ஹெவன்  ஆன் எர்த்’ கேட்டட் கம்யூனிடி, சகல வசதிகளுடன் கூடிய ஐந்நூறு அபார்ட்மெண்ட்கள் கொண்ட பூலோக சொர்க்கம்தான். 

என்னங்க , எல்லா வசதியும் இருந்தாலும்  இங்க ஏதோ ஒண்ணு குறையுற மாதிரியிருக்கு. நம்ம கிராமத்த விட்டுட்டு வருஷம் ஒரு தடவை வந்து தங்கிட்டுப் போற துக்குள்ளே மூச்சு முட்டுறாப்போல இருக்கு…

கம்யூனிடி மையத்தில் இருந்த பார்க்கில் தன்னருகே அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்த மனைவி அகிலாண்டத்தை சமாதானப்படுத்திய பரமேஸ்வரன் …

ஆமா அகிலா.பேரப்பசங்க பாசமா இருந்தாலும் அதிகமா ஆங்கிலமே பேசறாங்க. ஓரளவு படிச்ச எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. இவங்களும் ஊர்ப்பக்கமே வரமாட்டேங்கறாங்க.நம்ம பையன நாமே விட்டுக்கொடுக்க முடியுமா சொல்லு?

வீட்டுக்குள் நுழைந்த பெரியவர்களிடம், அம்மா,இந்த வாரம் எனக்கும், கேசவுக்கும் வேலை  டைட்.வாரக்கடைசியில நாம எல்லாம் வெளிய போயிட்டு வரலாம்மா ,மருமகள் வாசவியை வாஞ்சையுடன் நோக்கிவிட்டு நகர்ந்தார் அகிலாண்டம்.

வாசவி நல்ல மருமகள்,எந்தக் குறையுமில்லாமல் இவர்களை கவனித்துக் கொள்வாள் .கேசவனும் ,மனைவி குடும்பத்துடன் இயல்பான பிரியத்துடன் நடந்து கொள்வான்.

இப்படி ஒருவர் குடும்பத்தின் மேல் மற்றவர் வெளிப்படுத்தும் அதீதப் பிரியம்தான், வேற்றுமை பாராட்டாத அன்பின் வெளிப்பாடு. இல்லறங்களின் வெற்றிக்கான சூட்சுமமும் இதுதான் .

புகுந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கும் அவள் குடும்பத்துக்கும் கிடைக்கும் முறையான அங்கீகாரம் மணவாழ்வின் வெற்றிக்கு மிகவும் முக்கியம் என்பதை அந்த இரு குடும்பங்களும் உணர்ந்திருந்தது.

ஏதேதோ எண்ணங்கள் அலைமோத தன் வேலையை  முடித்தாள் வாசவி.

மறுக்கப்பட்ட சலுகைகளைப் பற்றி கவலைப்படாமல் பணியை வீட்டிலிருந்தபடியே செய்யுமாறு அமைத்துக்கொண்டாள். வீடு மற்று சமையல் வேலைக்கு ஆள் வைத்திருந்தாள்.

அப்பா என்ன அவசரம் இன்னும் கொஞ்சநாள் இருந்துட்டுப் போலாமே என்று வாசவியும், ஊரில நிலபுலனெல்லாம் வித்துட்டு இங்கேயே வந்துடலாம்னாலும் பிடிவாதம் …யூத்துன்னு நெனைப்பா …உடம்புக்கு முடியலேன்னா என்ன பண்ணறது … உடனேயே ஓடி வர்ற தூரமா நம்ம ஊரு? என அலுத்துக்கொண்ட மகனும்,தாத்தா,பாட்டி ..இங்கேயே இருந்துடுங்களேன் ப்ளீஸ் …என்று பேரப்பசங்களும் சொன்னது அவர்கள் கருத்தில் எட்டவேயில்லை .

ஸ்ரீஜாவக் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கோம்மா ..என்று மாமனார் மகளைக் குறிப்பாகச் சொன்னது நெருடினாலும் தலையாட்டிவைத்தாள்  வாசவி.

   நாகர்கோவில் அருகே சிறு கிராமம்.சுற்றிலும் இயற்கை ஆட்சி செய்ய அமைதியான வாழ்க்கை,இப்படியிருக்க பரமேஸ்வரனுக்கும் , அகிலாண்டத்திற்கும் பட்டண வாழ்க்கை எப்படிப் பிடிக்கும்?

லான்ட்லைன் போனின் சத்தத்தில் தன்னினைவுக்கு மீண்ட பரமேஸ்வரன் காதில் வைத்ததுமே, அப்பா சொகமா, அம்மா எப்படி இருக்காங்க? உலகமே ஸ்மார்ட் போனுல …நீங்க என்னடானா இன்னமும் லான்ட் லைனிலேயே தொங்கிக்கிட்டிருக்கீங்க …அம்மா சுத்தம் …அதுலயும் பேச மாட்டாங்க..

அதவிடுப்பா …நீ போன் பண்ணின விஷயதுக்கு வா ..மருமவ,பேரப்பிள்ளைங்க எல்லாம் சொகமா…

எல்லாரும் நல்லா இருக்கோம்.ஆபிஸ்ல ரெண்டு வருஷத்துக்கு என்னை யு.எஸ்.அனுப்புறாங்க.நல்ல வாய்ப்பு …வசுக்கும் அப்பப்ப ஆபீஸ் வந்துட்டுப் போகச் சொல்றாங்க …நீங்க இங்க வந்து இருக்க முடியுமாப்பா .. தயங்கியவாறே கேட்டவனிடம்.. உடனே ,சரிப்பா, நாங்க வந்து பார்த்துக்கறோம் என்றார் சற்றும்  தயங்காமல்.

பேத்தி நினைவாகவே இருந்த அவர் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் கூட இருக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து உடனே மனைவியுடன்  புறப்பட்டு வந்துவிட்டார்.

அப்பா, நீங்க மறுப்பு சொல்லாம வந்தது சந்தோஷம்பா ..தந்தையின் கைபிடித்து நெகிழ்ச்சியுடன் விடைபெற்று யு.எஸ் . பறந்தான் கேசவன்.

சற்றுக்காலாற நடந்துவிட்டு இருட்டும்நேரம் தங்கள் பிளாக்கை நோக்கி நடந்த பரமேஸ்வரன் ..திடீரென்று தன் கால்களில் விழுந்து கட்டிக்கொண்ட உருவத்தைப் புரியாமல் பார்க்க விளக்கு வெளிச்சத்தில் ஆள் யாரென்று தெரிந்தது. 

ஐயா,உங்க புண்ணியத்துலதான் இன்னைக்கு எங்க குடும்பமே பிழைச்சிட்டு இருக்கு. போதையில கண்ணுமண்னு தெரியாம ஒரு பச்சைக்கொழந்தைகிட்ட தப்பா நடந்த என்னைய நீங்க காட்டிக் குடுத்திருந்தீங்கன்னா…ரெண்டு பொட்டைப் புள்ளைகளோட எங்க குடும்பமே நடுத்தெருல நின்னிருப்போம் .அன்னைக்கு நீங்க அடிச்சதுல தெளிஞ்ச போதைதான் …அதுக்கப்புறம் குடிக்கறதையே விட்டுட்டேன்யா .

போதைதான் சபலத்துக்கும், சலனத்துக்கும் காரணம்னு புரிஞ்சிக்கிட்டயே அது போதும்.கைகூப்பியவனிடம் நூறு ரூபாய் கொடுத்து …பசங்களுக்கு ஏதாச்சும் வாங்கிக்கொடு …என்று நகர்ந்தார்.

சென்னை வாழ்க்கை அவர்களுக்கு அவ்வளவு பிடித்தமில்லையென்றாலும் , பேத்தியின் பாதுகாப்பு கருதியே அவர் வந்திருக்கிறார்.

ஷ்ரவனும், ஸ்ரீஜாவும் ஓரளவு நன்றாகத் தமிழ் பேச…பேரப்பிள்ளைகளுடன் அவர்கள் பொழுது நன்றாகவே செல்கிறது 

அப்பா, அம்மா இந்த வாண்டுங்க உங்கள ரொம்பப்படுத்தறாங்களா ?

என்னம்மா பேசறே …கரும்பு தின்னக் கூலியா எங்க பொழுது இவங்களோட நல்லாவே போகுது. வாசவிக்குச் சற்று நிம்மதியாயிருந்தது. 

திடீரென்று சமையற்காரி நீண்ட விடுப்பில் செல்ல,வேறொரு ஆளுக்கு ஏற்பாடு செய்ய முனைந்த மருமகளிடம்,எனக்கு ஒண்ணும் சிரமமில்லைம்மா,நா பார்த்துக்கறேன் ..என்றவள் ஆசை ஆசையாக விதவிதமா ஆரோக்கியமான உணவு வகைகளைச் செய்து பேரக்குழந்தைகளை சந்தோஷப்படுத்தினாள்.

தாத்தா,பேத்தியிடம் நன்றாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள அக்கம்பக்கத்தில் அவர் நட்பு வட்டம் விரிந்தது. 

பாட்டி, அந்த ஸ்வேதா ரொம்ப மோசம் , நீங்க எனக்குச் செஞ்சு கொடுத்த புட்டு புல்லா அவளே காலி பண்ணிட்டா.மறுநாள் இவளுக்கு ஒரு  பாக்ஸ், தோழிகளுக்கு ஒன்று எனக் கொடுத்து அனுப்பினாள் அகிலாண்டம்.

சாப்பிடக் கொடுக்கறதுல எல்லாம் கணக்குப் பார்க்கக் கூடாதுடா செல்லம் .’sharing is joy’ன்னு நீதானே எனக்குச் சொல்லிக்கொடுத்த …என்ற தாத்தாவிடம் ,ஆமாமாம்..சாரி தாத்தா , என்றவாறு நகர்ந்தாள்ஸ்ரீஜா.

தாத்தா,இன்னைக்கு கலரிங் காம்படீஷன்ல நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்த வாட்டர் கலர் யூஸ் பண்ணி சூப்பரா செஞ்சேன் .என்கிட்டே ரெண்டு கலர் பாட்டில் வாங்கின பாபு ,திருப்பித் தரவே இல்ல..திருடிட்டான்னு நினைக்கிறேன். 

அவசரப்பட்டு பெரிய வார்த்தையெல்லாம் விடாதே கண்ணா. ஒரு வேளை ,புல் பாக்சையுமே அவன் எடுத்திருந்தான்னாக் கூட வேற வாங்கிக்கலாம் . போன தடவை,நீ எக்ஸாமுக்கு எடுத்துட்டுப்போன பென்சில் ஊக்கு உடைஞ்சப்போ அவன்தானே உனக்குப் பென்சில்கொடுத்து உதவினான்னு சொன்னே. எப்பவும் மத்தவங்ககிட்ட இருக்குற நல்ல குணத்தை வச்சுத்தான் அவங்களை மதிப்பிடணும் சரியா?

அன்று மாலை பள்ளியிலிருந்து திரும்பிய ஷ்ரவன்,தாத்தா,நீங்க சொன்னது கரெக்ட். நேத்தைக்கு உன்கிட்ட கொடுக்க மறந்துட்டேண்டான்னு இன்னைக்கு கலர் பாட்டில்களை திருப்பிக் கொடுத்தான் பாபு.நீங்க சொன்னதால நா அவசரப்பட்டு வாயை  விடல ,ரொம்ப தாங்க்ஸ் தாத்தா,என்று அவர் மடியிலிருந்து எம்பி அவருக்கு ஒரு இச் கொடுத்தான்.

.

அன்று ஷ்ரவனுக்குப் பிறந்தநாள். தங்கள் பிளாக்கிலிருந்த குழந்தைகளையெல்லாம் ஈவ்னிங் பார்ட்டிக்கு அழைத்திருந்தாள்  வாசவி. குழந்தைகளெல்லாம் கூடினால் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்?

அப்பொழுதுதான் கவனித்தார் பரமேஸ்வரன்.எதிர் வீட்டுக்குழந்தை இவர்கள் வீட்டையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை. சட்டென்று ஓடிச் சென்று தூக்கி வந்துவிட்டார். 

சுற்றி நிறைய பேர் இருந்ததால் இது வாசவியின் கண்ணில் படவில்லை. ஸ்ரீஜா  கவனித்துச் சொன்னபோதுதான் பார்த்தாள்.  ஆசையா வந்த குழந்தையை விரட்டறதா..என்று விட்டுவிட்டாள்.

எல்லாக் குழந்தைகளும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த அந்த இளம்பெண் , சீ..உனக்கு வெக்கமா இல்ல என்று குழந்தை ரோஸ்லினை இழுத்துச் சென்றதில் அவள் கையிலிருந்த கேக்கும்,ஸ்நாக்சும் சிதறின .

அந்தப் பார்ட்டியின் சூழ்நிலை முற்றிளலும் மாறிப்போக  வந்திருந்த குழந்தைகள் அனைவரும் சற்றே பயந்து வெளியேறினர். 

அப்பா இது உங்க கிராமம் மாதிரியில்ல ..இனிமே தேவையில்லாம இப்படி சீன் கிரியேட் பண்ணாதீங்க..வெடுக்கென்று சொல்லி சாப்பிடாமல் போய்ப் படுத்து விட்டாள்.பரமேஸ்வரன் வேறுபட்டமருமகளின் பேச்சை ரசிக்கவில்லை.

ஏண்டி, அகிலா..கிராமமா இருந்தா என்ன நகரமா இருந்தா என்ன எல்லா இடத்திலேயும் குழந்தைங்க ஒன்னுதானே ?

எனக்கும்தான் புரியலைங்க.. நம்ம மரியாதையைக் காப்பாத்திகிட்டு ,பிள்ளை வந்தவுடனே ஊருக்குப் போயிடலாம்,நமக்கு எதுக்குங்க வீண்  வம்பு?

தாத்தா சோகமாய் இருந்தது பொறுக்காத ஷ்ரவன் அவர் அருகில் அமர்ந்து..

தாத்தா,போனவருஷம் நானும்,ரோஸ்லினும் விளையாடறப்போ அவ தொட்டில அவங்க அம்மா வாங்கிப் போட்டிருந்த கோல்டன் பிஷ் காமிச்சா.எனக்குக்கையில எடுத்துப் பார்க்க ஆசையா இருந்துச்சு. 

உள்ளாற போட்டுடா ஷ்ரவன், அம்மா வர்ற நேரம்னு சொல்ல, பதட்டத்துல உள்ள போடறப்போ அவ கை தட்டி கீழ விழுந்துடுச்சு . அப்பத்தான் உள்ளே நுழைஞ்ச அவங்க அம்மா என் காதைப் பிடிச்சுத் திருகி , அம்மாட்ட கொண்டுவந்து நிறுத்தி ,பிள்ளைய கொஞ்சம் கூட மானர்ஸ் இல்லாம வளர்த்திருக்கீங்கன்னு ..பொரிஞ்சு தள்ள, அன்னைக்கு எனக்கு செம்ம அடி…

மருமகளின் கோபத்தில் இருந்த நியாயம் ஒருவாறாகப் புலப்பட்டது அவருக்கு. 

மறுநாள் எழுந்தவுடன் அவரைத் தேடி வந்து,சாரி மாமா ..டென்ஷன்ல ஏதேதோ பேசிட்டேன்… என்றவளை இடைமறித்து ..விடும்மா..நா அதை நேத்தைக்கே மறந்துட்டேன் ..என்று வினயமாகச் சொன்னவரைப் பெருமிதம் போங்க நோக்கி கைகூப்பி நகர்ந்தாள் வாசவி.

சே ..எல்லாம் மிசஸ். மாத்யூசால …வந்த பிரச்சினை.பெரியவங்க மனச வேற நோகடிக்கற மாதிரி ஆயிடுச்சி ..

மாடியில் சற்று நேரம் காலாற நின்று வரலாம் என்று மொட்டைமாடிக்குச் சென்ற பரமேஸ்வரன் சற்றுத் தொலைவில் கண்ட காட்சியில் உறைந்து போனார்.சத்தம் எழுப்பாமல் மெதுவாகப் பின்னே சென்று ..கவனக்குறைவால் சன் ஷேடு அமைந்திருக்கும் உச்சியின் விளிம்புக்கு நகர்ந்துகொண்டிருந்த  அந்தக் குழந்தையைக் கிழே இறக்கினார். ரோஸ்லின்தான் ..என்னடா குட்டி 

இப்படி ஏறலாமா?

அம்மா ரெஸ்ட்ரூம் போயிருக்காங்க ,அவங்க மொபைல கேம் விளையாட எடுத்தேன்..சிக்னல் கிடைக்கலையா ..அம்மா மாதிரியே மேல வந்து செக் பண்ணலாம்னு…பின்னால் அரவம் கேட்டுத் திரும்பியவர் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கிவிட்டார் .

கம்யூனிட்டியில் அன்று குழந்தைகள் தின விழா. பாரம்பரிய நடனம், பாரம்பரிய உடை அணிவகுப்பு ..என அசத்தினர் குழந்தைகள். 

இறுதியாகத் தங்கள் பிளாக்கைச் சேர்ந்த குழந்தைகளை அணிவகுத்து ‘சுற்றங்களால் சுகமே’என்ற மைம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் மிசஸ்.மாத்யூஸ்.

மைமின் முடிவில் ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’என்று ரோஸ்லினும்,ஷ்ரவனும் மழலை மொழியில் சொல்ல, தொடர்ச்சியாக, 

‘சுற்றம்கிறது உறவுகள் தாண்டி அக்கம்பக்கத்தினர்,நட்பு என்ற விரிந்த எல்லை கொண்டது. சுற்றங்களுடன் பந்தமும்,நெருக்கமும் அதிகரிக்க வேண்டுமானால் அவர்களிடமுள்ள நல்லவற்றை ஆழப்பதித்து , தேவையற்றதைத் தவிர்த்துக் கடக்கப் பழகினாலே போதும்’, என்று நிகழ்ச்சியின் நிறைவாக மிசஸ்.மாத்யூஸ் கூற, ஒரே கரகோஷம். 

நிகழ்ச்சியின் கொரியோகிராபியில் தனக்குப் பெரிதும் உதவிய   பரமேஸ்வரன் மற்றும் வாசவியை விழிகளில் நீர் நிறைய நோக்கினாள்.

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!