மாய புத்தகம் கதைப் போட்டி: பறக்கும் மந்திர கையேடு

by admin 2
111 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்

வண்டியூர் கிராமமே அன்று அங்கு வரும் பண்ணை வீட்டின் பேத்தியைப் பார்க்க தங்கள் வீட்டின் வாசலில் காத்திருந்தனர். 

பண்ணை வீட்டின் ஒரே மகன் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இந்தியாவையும் பெற்றோர்களையும் மறந்து விட்டான்.

இன்று அவன் பெண் அவந்திகா தாத்தா வீட்டுக்கு வருகிறாள்.

கிராமத்தினர் அன்புடன் அவந்திகா விடம் பேசினர்.

வீட்டைப் பாதுகாக்கும் மாயன் வீட்டைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றான். அவன் மனைவி அவந்திகாவிற்கு உதவியாக இருந்தாள்.

வீட்டின் ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்துக் கொண்டே வந்தாள்.

ஒரு அறையில் நிறைய புத்தகங்கள். 

ஒட்டடையும் புழுதியும் நிறைந்த அறையை ஆட்களை விட்டு சுத்தம் செய்து விட்டு புத்தக அலமாரியில் அழகாக புத்தகங்களை அடுக்கி வைத்தாள்.

அதில் ஒரு புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருந்தது. முதல் பக்கத்தில் ‘பறக்கும் மாய கையேடு’ என்று தலைப்பு இருந்தது. 

அதில் பல நிபந்தனைகள் கொடுக்கப் பட்டு இருந்தது.

* துன்பத்தில் இருப்பவர்களை காப்பாற்ற புத்தகத்தின் உதவியால் பறக்கலாம். உதவி செய்து முடிந்ததும் புறப்பட்ட இடத்திற்கே அழைத்து வந்து விடும்.

* ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உபயோகப் படுத்தலாம்.

*யாரிடமும் இந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

 அதை உபயோகித்து பார்க்க எண்ணினாள்.

அப்பொழுது தொலைக்காட்சியில் கிணற்றில் விழுந்த பேருந்து வில் இருந்து மக்களைக் காப்பாற்ற போராடும் தீயணைப்பு வீரர்கள் பார்த்தாள். எங்கும் அலறல். பேருந்து நீரில் மூழ்க ஆரம்பித்தது.

இனியும் தாமதிக்காமல் உடனே புத்தகத்தின் முதல் பக்கத்தில் கையை வைத்து ‘அந்த பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும்’ என்று கேட்டாள்.

அடுத்த நொடி அவந்திகா புத்தகத்துடன் அங்கு இருந்தாள்.

புத்தகம் பெரிய ஏணியை தந்தது. அதில் அவந்திகா இறங்கினாள். ஒவ்வொருவராக ஏணியில் ஏற்றினாள். புத்தகத்தின் மாய மந்திரம் பேருந்து மூழ்காமல் காத்தது.

அனைவரும் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

வேலை முடிந்ததும் அவந்திகாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டது.

தொலைக்காட்சியில் ” மக்கள் காப்பாற்றப் பட்டனர். ஏதோ ஒரு சக்தி அவர்களைக் காப்பாற்றியது.” என்று செய்தி வாசிப்பாளர் அறிவித்தார்.

தீயணைப்பு படையினர் புரியாமல் விழித்தனர். 

“வின்னில் இருந்து ஒரு ஏணி வந்தது. எங்களை ஏற்றி மேலே அனுப்பியது” என்று விபத்தில் சிக்கியவர்கள் கூறினர்.

அன்று இரவு தாத்தாவின் குரல் அசிரீரி யாகக் கேட்டது. “அவந்திகா.! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். ‘பறக்கும் மந்திர கையேடு’ உன் மூலம் எல்லோருக்கும் பயன் படுகிறது.‌”

” எனக்கும் சந்தோஷம். ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு உதவ முடிகிறது. என் உருவமும் யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தால் அவ்வளவு தான். அந்த கையேட்டை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உபயோகிக்க முடியும். சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.”

“நீ சொல்வது ரொம்ப சரி. ஜாக்கிரதையாக இரு மா. உனக்கு தேவை என்றால் ‘தாத்தா’ என்று கூப்பிட்டால் வந்து விடுவேன். உதவுவேன். யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேன். அப்பா எப்படி இருக்கிறார்?”

“நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் இங்கு வருகிறார். இதே மாதிரி நீயும் அவரிடம் பேசலாம். சரி தாத்தா.. உனக்கும் அப்பாவிற்கும் என்ன மனவருத்தம்?

“ஒன்றும் இல்லை. நான் மற்றவர்களுக்காக பணம் செலவு செய்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவன் இங்கு வர மாட்டேன் என்று கூறி விட்டான்.‌”

“இந்த கையேடு உங்களோட தா?”

“இல்லை . நான் அன்னதானம் செய்து கொண்டிருந்த பொழுது யாரோ ஒருவர் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து பயன் படுத்துமாறு சொன்னார். வீட்டிற்கு வந்து படித்துப் பார்த்தேன். நான் பயன் படுத்தவில்லை. அப்பொழுதே என் கண் பார்வை மங்கி விட்டது. ஏதாவது தவறாக உபயோகித்து விடுவேனோ என்று எனக்குள் தயக்கம். எனக்கு ஆசை மட்டும் இருந்தது. ஆசை நிறைவேறாததால் இங்கேயே இருக்க வேண்டியதாகியது.”

“மிக்க நன்றி தாத்தா. நான் பார்த்துக் கொள்கிறேன்.இதன் மூலம் மக்கள் பயன் அடைவது நிச்சயம். நீங்களும் நல்ல கதி அடையலாம்.” என்றாள்.

“அந்த நோட்டு எத்தனை நாட்கள் உன்னிடம் இருக்கும் என்று தெரியவில்லை.வருகிறேன்.” 

தாத்தா விடை பெற்றுச் சென்ற பின்னர் புத்தகத்தை பத்திரமாக வைத்து விட்டு நடந்த நிகழ்வுகளை எண்ணி மகிழ்ந்தாள்.

 இனி ஒவ்வொரு நாளும் தான் செய்யப் போகும் நல்ல செயல்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!