எழுதியவர்: நா.பா.மீரா
மெய் எழுத்து வார்த்தை: காகம் /ம்
ஏண்டா ….. வேதாந்து உனக்கே நியாயமா இருக்கா …எச்சக்கையால கூடக் காக்கா ஓட்டாத அவன் கையால நா சாப்பிடணும்னு துடிக்கிறயே,என் புள்ளையப்பத்தி எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி என்னை வற்புறுத்தி அழைக்கிறது எந்த வகையிலடா நியாயம் ?
எனக்கு எல்லாமே நல்லாப்புரியறதுடா கைலாசு…உனக்கு நா எடுத்துச் சொல்லணுமா?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு தெரியும்தானே ….
என் பையன் கூடத்தான் எனக்கும்,என் பொண்டாட்டிக்கும் ஒத்தப் பருக்கை சோறு போடக் கணக்குப் பார்த்து …முதியோர் இல்லத்துல விட்டுட்டான்…இப்ப என்னடான்னா வருஷாவருஷம் எனக்கும் அவளுக்கும்புடிச்சதா செஞ்சு தள்ளறான் …
என்ன இருந்தாலும் ..எல்லாக் காலத்திலேயும் உறவுகளுக்கிடையேயான பாலம் நாமதான் … நம்ம சந்ததியா நாமதானே ஆசீர்வதிக்கணும் ….
போடா …ஒரு எட்டுப் பறந்து போய் உன் புள்ளை படைச்சதைச் சாப்பிட்டிட்டு மனசார ஆசீர்வதிச்சிட்டு வந்துரு ..
நண்பன் வேதாந்துவின் பேச்சில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டுதன் வீடு இருக்கும் திசை நோக்கிப் பறந்தது காகம் கைலாஷ்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.