மெய் எழுத்து போட்டி கதை: முதன்மை பாடம்

by admin 2
51 views

எழுதியவர்: கி.இலட்சுமி

மெய் எழுத்து வார்த்தை: அவமானம்/ம்

“ரவி…இங்க வா..” ஆசிரியர் கூப்பிட… தயக்கத்தோடு எழுந்து ஆசிரியரின் அருகே பயத்துடன் சென்றான் ரவி.

“இதோ பாரு…இந்த தடவையும் நீ கணிதப் பாடத்துல ஜீரோதான் வாங்கியிருக்க.. வகுப்புலயும் பாடத்தைக் கவனிக்காம தூங்கி வழியுற.. உனக்கெல்லாம் எதுக்கு படிப்பு…மாடு மேய்க்க போக வேண்டியதுதானே..மறந்துட்டேன் பார் நீயும் உங்க அப்பாவ போல செருப்பு தைக்கதான் போற…”கோபத்தில் விடைத்தாளை தூக்கியெறிந்தார் கதிரேசன்.

அன்று அவமானப்பட்டு கண்ணீரோடு  வெளியேறினான் ரவி.

காலம் உருண்டோடியது…

“அப்பா..எனக்கு அலுவலகத்துல முக்கியமான மீட்டிங்… அவளாலயும் லீவு போட முடியாது… வேலையிலருந்து ஓய்வு வாங்கி சும்மாதானே வீட்ல இருக்கீங்க..உங்க பேரனைக் கூட்டிகிட்டு ஸ்கூலுக்கு போங்க.. கணிதத்துல பெயில் அரையாண்டுத் தேர்வுல..போயி என்ன ஏதுன்னு கேளுங்க… மேத்ஸ் டீச்சரை கட்டாயம் பாருங்க…”

மகன் சொல்ல, பள்ளிக்கூடம் சென்றார் கதிரேசன். 

“வணக்கம்.. சார் நீங்களா.. உட்காருங்க..”

குரல் எங்கேயோ கேட்டதைப்போல் தெரிய சடாரென நிமிர்ந்தார்.

“என்ன சார்..என்னை அடையாளம் தெரியுதா..நான்தான் ரவி..ஞாபகமிருக்கா சார்.. அன்னிக்கு என் மூஞ்சில பேப்பரை விசிறியெறிஞ்சீங்களே.. அன்னிக்குத்தான் சார் என் வாழ்க்கையோட முக்கியமான நாள்… அதுக்கப்புறம் வெறியா கணிதத்தைப் படிச்சேன்… ப்ளஸ் டூலயும்..டிகிரியும் கணிதத்தை முதன்மை பாடமா எடுத்துகிட்டேன்…இன்னிக்கு உங்களாலதான் நான் கணித ஆசிரியரா ஆகியிருக்கேன்..அன்னைக்கு கிடைச்ச அவமானம்தான் என்னை வாழ்க்கையில உயர்த்தியிருக்கு…”

ரவி சொல்லிக்கொண்டே போக மௌனமாய்த் தலை குனிந்தார் கதிரேசன்.

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!