எழுதியவர்: ஆதிலக்ஷ்மி
கையில் கூடையுடன் கவனமே கண்ணாக, மருத்துவ மனைக்குள் குடுகுடுவென நடந்து வந்தாள்.
அக்கூடைக்குள்,தொண்டையை நனைக்க மிதமான சூட்டில் சுடுதண்ணீரும்,திடீரென சப்தமில்லாமல் சத்தத்துடன் வெளிவரும் இருமலை அடக்க கைக்குட்டையும்… நிமிர மறுக்கும் தேகத்துடன் டாக்டரைப் பார்க்கத் தன் மகளுடன் உள்ளே நுழைந்தாள்.”நீங்க போய் வெளிய உக்காருங்க”
நெடு நேரமாகியும் தன் மகள் வராததால், அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
“பாட்டி எப்படி இருக்கீங்க”பின்னால் இருந்து வந்த பேத்தியின் குரல் ,தன் வாழ்வை மீட்டுத் தந்துவிடுவது போலிருந்தது..
“டாக்டரு என்ன சொன்னாருன்னு தெரியலப்பா” சொல்லும் முன் இருமல் தொண்டையைக் கிழிக்க தண்ணீரைக் குடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.
டாக்டர் வேல பாக்கும் பேத்தியாவது சொல்லுவா என அவள் கைகளைக் காந்தத்தைப் பற்றிக் கொள்ளும் இரும்பெனப் பிடித்துக் கொண்டாள்.
“எப்பப்பா சரியாகும்” “ஒன்னுமில்லேல”
92 வயதைக் கடந்து நிற்கும் தன் பாட்டிக்கு வந்திருக்கும் கொடிய நோயைப் பற்றி எப்படிச் சொல்வதென அறியாமல் நின்றாள் பேத்தி…
கண்ணீராகிப் போன அவளது வியர்வைத் துளிகளைக் கடவுள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரே?
நிம்மதியுடன் மதிசாய வேண்டுமென வேண்டிய மதிக்கு இதென்ன கதி?
பேத்தியின் கண்ணீர் பதிலைத் தர கூடையுடன் நடக்கத் தொடங்கினாள் மதி பாட்டி.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.