வாசகர் படைப்பு: கோழி

by admin 3
41 views

எழுதியவர்: இரா.நா.வேல்விழி

தமிழய்யா நடத்திய பாடம்
குழந்தை வேலு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான் .

மனசெல்லாம் படபடத்தது. தன் அப்பா இன்று தாமதமாக வர வேண்டுமே என்று கோட்டைச் சாமியை வேண்டியதோடு  இந்த வருடம்  திருவிழாவிற்கு நேர்த்திக் கடன் செலுத்த வேண்டுமாய் அம்மா சொன்னதும் நினைவிற்கு வந்தது.காலும் மனமும் பரபரக்க வீட்டை வந்து சேர்வதற்குள் அவ்வளவு பதட்டம் அவனுக்கு.

புத்தகப் பையை வீசியவன் நேராக  பஞ்சாரத்தைத் திறந்து பார்த்தான். ஆறு கோழிக் குஞ்சுகள் தன் தாய்க்கோழியின்  இறகுகளுக்குள் அடைக்கலம் புகுந்திருந்தன.நிம்மதி பெருமூச்சு விட்டு , வீட்டிற்குள் சென்றவனை அம்மா ஏலே என்னலே இம்புட்டு சீக்கிரம் வந்தவ… சரி சரி வா வெரசா. கோழி அடிச்சு கொழம்பு வைச்சிருக்கே வந்து சாப்புடு என்றாள்.  தூக்கிவாரி போட்டது குழந்தைக்கு.

வெள்ளச்சிய பாதுகாத்த நான் செவலச்சிய விட்டுட்டேன் என்று… அவன் நினைப்பெல்லாம் பஞ்சாரத்திலே தான் இருந்தது…சாப்பிட அழைத்த அம்மாவின் குரல்  கேட்டதாகவே தெரியவில்லை.

உரக்க கத்தியவள் ஏலே கொழந்த  என்ன நினைப்புல இருக்கரவ  என்று காதை திருக்கியவுடன் உணர்வு பெற்றவனாய் ஏம்மா நா எங்கையாவது தொலைஞ்சு போயிட்டா நீ என்ன செய்வ.. ஏலே உனக்கென்ன பைத்திய புடிச்சா …இப்படியெல்லா பேசரவ…. போல போயி வாயக்கழுவு… என்றவளிடம் செவலச்சிய காங்காம  வெள்ளச்சியும் குஞ்சுகளும் சோகத்துல உக்காந்து இருக்குதுவ… அதையும் நீ ஒரு உசுருன்னு நினைக்காம , கொழம்பு வைக்க, நேத்திக்கடனுங்கற
ஏம்மா இப்படி பண்ணுத.

ஒரு உசுரக் கொல்வது எவ்வளவு தப்பு .அத வேற நீ சாப்புட சொல்லுத .நீயில்லாம நானும் நானில்லாம நீயும் இருக்க முடியுமா … அது மாறி தானே செவலையும்…
மனிச உசுர மவுசா நினைக்கற நீங்க .மத்த உசுர மனசாச்சியே இல்லாம கொல்லுதீகளே. என்று கோபத்துடன் வேகமாக நடந்தான் பஞ்சாரத்தை நோக்கி… ஆசிரியர் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது….

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

முற்றும்.

📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!