வாசகர் படைப்பு: கோவிந்தசாமி என்னும் இந்தியன்

by admin 2
40 views

எழுதியவர்: சாந்தி ஜொ

காலை 7 மணி. உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது. செல்போனையும் என்னையும் எழுப்பியது மலேசியாவிலிருந்து சிரோன்.
“ஆ… சொல்லுங்க சிரோன் குட் மார்னிங்”
“ரகு கொஹீவல இருந்து யாராவது கால் பண்ணாங்களா?”
“இல்ல சிரோன் யாரும் எனக்கு கால் பண்ணல. ஏன் என்ன ஆச்சு?”
“உங்க ஐயா இறந்துட்டாரு ரகு”
“என்ன சிரோன் சொல்லுறீங்க. எப்படி”
“காலையில ஐயா பூ பறிக்க போயிருக்காரு போல. எங்க டேவிட் மாமா கடை திறக்க 6 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி போகும் போது நம்ம லேன் வளைவுக்கிட்ட இருக்க பூ மரத்து பக்கத்துல ஐயா விழுந்து கிடந்தத பார்த்து உங்க செந்தில் மாமாகிட்ட சொல்லியிருக்காரு. உங்க மாமா ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனதுக்கு, முன்னமே இறந்து போயிட்டாருனு டாக்டர் சொன்னராம். நெஞ்சுவலியாம் ரகு. எங்க அம்மா
இப்பதான் எனக்கு கால் பண்ணி சொன்னாங்க” சுருட்டு புகை என் அறைக்குள் வருவதை உணர்ந்தேன். ஐயாவின் நினைவுகள் என்னுள் உதிக்க தொடங்கின. விஜி மாமாவின் மச்சான் பிரசாந் தான் ஐயாவிடம் நான் குடிப்பதை பற்றி சொன்னான்.
“ஏண்டா குடிக்க பழகியிட்டியா” என்று சுருட்டு புகையை விட்டு கொண்டே கேட்டார் ஐயா.
பிரசாந்தை முறைத்தப்படியே “யாரு சொன்ன உங்களுக்கு அதெல்லாயில்ல” என்றேன்.
ஐயா பேக்கை பிடுங்கி சோதனை செய்ய ஆரம்பித்தார். பேக்கிலிருந்த பியர் டின்கள் அவரிடம் அகப்பட்டுக் கொண்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கும், பிரவீனுக்கும் ஒவ்வொரு டின் கொடுத்து அவர் ஒரு டின்னை திறந்து மடக் மடக்கென குடித்தார்.
அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்வது எரிமலையின் அருகில் நின்று படம் பிடிக்க ஆசைப்படுவதும் ஒன்றே. என்னதான் நான் அவரது மகளின் மகன், பேரன் என்றாலும் எனக்கும் அவருக்கும் ஏழரை பொருத்தமே.
அம்மம்மா, அம்மா, மாமா முதற்கொண்டு எல்லோரும் அவரை ஐயா என்று அழைப்பதால் சிறுவயதிலிருந்து நானும் அவரை அப்படியே அழைத்து பழகினேன். திருமணத்திற்கு பிறகு எனது அப்பா அம்மாவை கூட்டிக் கொண்டு அவரது சொந்த ஊரான ஹட்டனிலே நிரந்தரமாக தங்கி விட்டார். சிறு வயதில் பள்ளி விடுமுறைக்கு தான் ஐயா, அம்மம்மா வீட்டிற்கு வருவேன். அப்பாவின் மறைவுக்கு பின் கொழும்பில் தனியார் றிறுவனத்தில் வேலை கிடைத்ததால் ஐயா, அம்மம்மாவின் வீட்டில் தங்கினேன். அந்த சமயத்தில் தான் குடிக்கவும் பழகினேன். தினமும் ஐயாவிற்கு பியர் டின் வாங்கி வந்து கொடுக்க ஆரம்பித்தேன். அவருடன் நானும், பிரவீனும் அவரது அறையிலே குடித்தோம். அப்போது மறக்க முடியாத பல சம்பாக்ஷணைகள் நடந்தது. ஐயாவின் சொந்த இடம் தமிழ்நாடு இராமேஸ்வரம். 1950களில் தனது 12
வயது வயதில் அவர் இராமேஸ்வரத்திலிருந்து படகில் இலங்கைக்கு வந்ததாக என் அம்மா அடிக்கடி சொல்லி கேட்டுள்ளேன். நேரடியாக அவரிடம் அதை பற்றி கேட்டால் “போடா அங்கிட்டு” என்பார். அதை
பற்றி பேசுவது அவருக்கு விருப்பமில்லை. எனது அப்பாவும் பல தடவை “உங்க சொந்தத்த பார்த்துட்டு வாங்க ஐயா” என்று சொல்லிருக்கிறார்.
நானும் ஒரு முறை மாமாவிடம் இப்படியாக கேட்டேன். “ஏன் மாமா ஒரு தடவையாவது ஐயாவ அவரோட ஊருக்கு கூட்டிட்டு போகலாம் தானே?”
“நாங்க என்ன கூட்டிட்டு போக மாட்டமுனடா சொல்றோம். எத்தனையோ தடவ கேட்டு பார்த்துட்டோம். விவரம் சொல்லவே மாட்டேங்குறாரு. உன் அப்பாவும் தான் கேட்டு பார்த்தாரு. மத்தது இப்படிதானேடா, ஐயாவுக்கு இப்ப வயசு 70. இனி அவர் சொந்தத்த தேடி போய் மட்டும் என்ன ஆகப்போகுது” என்றார் மாமா.

ஒருாள் அவரது அறையில் நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் போது அவரது கதையை கேட்கலாம் என நான் நினைத்தது தான் ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்து விட்டார். என்னவென்று கேட்டதற்கு அவரது அம்மா சில வருடங்களுக்கு முன்பாக இறந்து போன செய்தி இன்று தான் தனக்கு தெரிந்தது என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மறுநாள் காலை எழுந்ததும் சாமி படங்களை துணியால் மூடினார். அன்று அவர் செய்த செயல்கள் அனைத்தும் இழவு வீடு என்பதை எங்களுக்கு நினைவூட்டியது.
ஒருநாள் ராம் மாமா வீட்டை சுத்தம் செய்யும் போது ஐயாவின் படுக்கைக்கு கீழே நாங்கள் குடித்து போட்டிருந்த பியர் டின், சாராய பாட்டில்கள் எல்லாம் அவர் கண்ணில் பட்டுவிட்டது. ஐயாவிடம் மாமா
கேட்டாராம் “என்ன ஐயா இப்படி குடிக்கிறீங்க. வீடு ஏதாவது கைமாத்துனீங்களா? பெரிய கமிக்ஷன் கிடைச்சிருக்கு போல” ஐயா நிதானமாக “அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன் அக்கா பையன்
ரகுவும், உன் அண்ணன் மச்சான் பிரசாந்து ஒண்ண தினமும் இந்த ரூம்ல தான் குடிப்போம். ரகு தான் வாங்கிட்டு வருவான்” என்றாராம்.
மாமாவும் குடிப்பார் தான் என்றாலும் என் அப்பாவுக்கு குடிப்பழக்கம் இல்லாததால் நானும் குடிக்கமாட்டேன் என்று நினைத்து கொண்டிருந்த அவர்களுக்கு நான் குடிப்பது சற்று அல்ல பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். அந்த சமயத்தில் கூட ஐயா அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
ஒரு கட்டத்தில் குடிக்கே அடிமையான என்னை திருத்தி காட்டுவேன் என்று எல்லோரிடமும் சவால் விட்ட என் காதலி தான் பின்னாளில் குடி என்ற அடிமைத்தனத்திலிருந்து என்னை மீட்டெடுத்து கரம் பிடித்தாள்.
எழுத்தாளர் என்ற அந்தஸ்த்தை நான் அடைந்த பிறகு இந்தியாவிற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். ஐயாவின் ஞாபகமும் அப்படியாக எனக்குள் வந்து போகும். இவ்வளவு வருடம் இலங்கையில் வாழ்ந்த ஐயாவுக்கு இலங்கை தமிழ் பேச வராது. சிங்களமும் தெரியாது. தமிழ்நாடு மக்கள் பேசும் வழக்கில்
தான் பேசுவார். இந்தியா – இலங்கை கிரிக்கெட் மேட்சின் போது வீட்டிலுள்ளவர்கள் இலங்கைக்கு ஆதரவு அளித்தால் கண்ணிலே அவர்கள் மீது நெருப்பை கக்கி பொசுக்கி விடுவார். அதுபோல இந்தியா
தோற்றுப்போனால் கட்டுக்கடங்காத காளையாகி எல்லோரையும் முட்டி விடுவார். இந்தியாவில் அவரின் குடும்பத்தை பற்றிய ஏதோ ஒரு சிந்தனை தான் அவரை ஆட்கொண்டதாக அம்மம்மா அடிக்கடி சொல்லுவார். ஆன்மீகத்தில் ஊறிப்போன ஐயா சாமிக்கு படைப்பதற்காக பூ பறிக்க விடியற்காலை 4 மணிக்கு வெளியே செல்வார். லேனில் உள்ள மற்ற வீட்டிற்கும் தான் பறித்த பூவில் கொஞ்சம் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் பூ பறிக்க போகும் போது கையில் கத்தியுடன் தான் செல்வார். ஒருநாள்
அப்படியாக பூ பறிக்க போனவர் ரொம்ப நேரமாகியும் வீட்டிற்கு வராததால் மாமா, பெரியம்மா, எல்லோரும் தேடியும் ஆள் கிடைக்கவில்லை. அம்மம்மா மாமாவிடம் “செந்தில் எதுக்கும் கொஞ்சம்
போலிஸ் ஸ்டேக்ஷன்ல போய் பாரு எனக்கென்னவோ… போய் பாரேன்” என்று சொல்லியுள்ளார்.
அம்மம்மா சொன்னது போலவே போலிஸ் ஸ்டெக்ஷன் பெஞ்சில் ஐயா தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். மாமா போலிஸிடம் கேட்டதற்கு கையில் கத்தியோடு விடியற்காலை பூ பறித்து கொண்டிருந்தாராம். விசாரித்ததில் அடையாள அட்டை கையில் இல்லை,
சிங்களமும் தெரியவில்லையாதலால் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்ததாக கூறியுள்ளார்கள். அடுத்த நாளும் எப்போதும் போல தலையில் முண்டாசுடன் அடையாள அட்டை இல்லாமல், கத்தியுடன் பூ பறிக்க சென்றாராம் ஐயா. ஆனால் இன்று கடவுளுக்கு பூவை படைக்க சென்ற அவர் தன்னை படைத்த கடவுளிடமே சென்று விட்டார். அதில் வியப்பொன்றுமில்லையென்றாலும் அவர் குணாதிசயங்கள்
வியப்பக்குரியதே.
சுடுகாட்டில் ஐயாவின் உடலுக்கு சடங்குகள் செய்த பிறகு கடைசியாக சில்லறை காசுகளை அவர் மீது போடுமாறு வெட்டியான் சொன்னதும், என் பர்ஸில் சில்லறைகளை எடுக்க கைவிட்ட போது இந்திய காசு ஒரு ரூபாய் என் கைக்குள் சிக்கியது. எத்தனையோ தடவை நான் இந்தியாவுக்கு போய் வந்த பிறகும் அந்த ஒத்த ரூபாய் செலவாகாமல் இருந்தது ஏன் என்பதை விளங்கி கொண்டேன். அதை அவர் மீது போட்ட போது அவருக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பிரிக்க முடியாத ஒட்டுதலையும் புரிந்து கொண்டேன். ஐயாவோடு அவரின் இந்திய குடும்ப கதையும் முடிந்ததோடு, அவரின் குடும்பத்தை பற்றிய கற்பனைகள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தன. சுருட்டு புகை வர ஆரம்பித்தது.

முற்றும்.

📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!