10 வரி போட்டிக்கதை: நட்பு என்றும் சாகாது

by admin
62 views

எழுத்தாளர்: திருமதி ப்ரஸன்னா வெங்கடேஷ்

நேற்று தானே இதே இடத்தில் , மெழுகுவத்திகளின் மெலிதான வெளிச்சத்தில்,  அந்த சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்தபடி , தன்னோடு பழைய விசயங்களை பேசிக் கொண்டிருந்தான் சபேசன்.

இன்று அவன் இல்லையா என்று அதிர்ச்சியில் உறைந்திருந்தான் சபேசனின் உற்ற நண்பன் பாலு.

“ புத்தகங்கள் தாண்டா என்னோட ஒரே துணை. ராத்திரில பெரும்பாலும் நான் தூக்கம் வராம இங்கியே தான் படிச்சுட்டு இருப்பேன் “ என்று மெலிதான சோகத்தோடு சொன்னவன் இன்று நிரந்தரமாகத் தூங்கி விட்டானே என்று வருந்தினான் பாலு. 

சபேசன் பெரும்பணக்காரன், தொழிலதிபர் என்பதால் கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் இன்ஸ்பெக்டர் விசாரிக்கையில்  “.  பாடியை போஸ்ட்மார்டம் சோதனைக்கு அனுப்பி இருக்கோம்.

ஆனா,  மிஸ்டர் பாலு, நீங்க தான் நேற்று இரவு பத்து மணி வரை சபேசனோட இருந்திருக்கீங்க  என்று பாலுவை சந்தேகத்துடன் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

“ ஸார், அவன் என்னோட நண்பன் சார்  அவனை நான் எப்பிடி …” என்று பாலு திகைத்தான். “ ஏகப்பட்ட சொத்து, வாரிசும் இல்ல… நீங்க அடிக்கடி இங்க வர்றதா சொல்றாங்க…அதனால.. ” என்று இழுத்தார் இன்ஸ்பெக்டர்.

நண்பனின் தனிமையைப் போக்க அவ்வப்போது வந்து ஆறுதலாக இருந்தது இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து விட்டதே என்று வருந்தினான் பாலு. 

அப்போது, புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் பொத்தென்று கீழே விழுந்ததில்,  ஒரு கடிதம் வெளியே துருத்திக் கொண்டு தெரிய,  இன்ஸ்பெக்டர் பாய்ந்து அதை எடுத்துப் படித்தார்.

“  என் மன உளைச்சலிலிருந்து விடுதலை பெற  மதுவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து அருந்தி விட்டேன். அன்பு நண்பா, பாலு, என்னை மன்னித்து விடு” என்று தேதி, நேரம் எல்லாம் குறிப்பிடப்பட்டு சபேசனின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

“ சாரி பாலு சார், நீங்க குற்றவாளி இல்லை என்பதற்கு இந்த ஆதாரம் போதும். என்று இன்ஸ்பெக்டர் கூற, அந்த கம்பீரமான நாற்காலியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான் பாலு.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!