எழுத்தாளர்: லீலா ராமசாமி
மந்திரவாதி தூக்கிச் சென்ற தனது மனைவியைக் கண்டு பிடித்து மீட்டு வர, தனது மாய விளக்கைத் தேய்த்து
ஜீனியை அனுப்பி வைத்த அலாவுதீன் கடற்கரையோரம் கவலையுடன் அமர்ந்திருந்தான்.
அலைகளில் மிதந்து வந்த ஒரு தேவதை அவனை நோக்கிக் கண்களில் குறும்பு மின்ன நடந்து வந்தாள்.
“இளவரசியை அந்த மந்திரவாதி கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்தான்.
ஜீனி மந்திரவாதியை மயக்கிக் கட்டிப் போட்டுவிட்டு, தங்கள் மனைவியை அவனிடமிருந்து மீட்டு வந்து
உங்கள் மாளிகையில் சேர்த்தது கூட தெரியாமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கண் சிமிட்டிக்
கேட்டாள்.
“ஜீனி அங்கே செய்தததை எல்லாம் நேரில் பார்த்தவள் போல் சொல்லும் நீ ஒரு மந்திரவாதியா அல்லது என்
மனைவி இல்லாத நேரத்தில் என்னை மயக்கி அடைய வந்த மோகினியா?”
அலாவுதீன் தனது வாளை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கினான்.
ஆனால்.. மயங்கி விழுந்த அலாவுதீனைத் தனது கைகளால் தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தவள்
அரண்மனை அந்தப்புரத்தில் இளவரசியின் அருகில் கொண்டு கிடத்தினாள்.
அப்போது விழித்துக்கொண்ட இளவரசி தன் கணவனருகில் அவளைப் பார்த்ததும் கோபத்துடன், ” யார் நீ?”
என்று அதட்டிய சத்தம் கேட்டுக் கண் விழித்தான் அலாவுதீன்.
“மந்திரவாதியையே மயக்கிய இந்த அழகி உண்மையில் உங்கள் அடிமை ஜீனிதான்” என்றபடி தனது
இயல்பான தோற்றத்துக்கு வந்தது ஜீனி.
“அன்றில் பறவைகள் போன்ற உங்களை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது” என்ற ஜீனி வெண் புகையாய்
விளக்குக்குள் சென்றது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
