எழுத்தாளர்: இரா சாரதி
சின்ன ஜடை, வசீகர ஜாடை, அதிரடியாய் வெட்டிய இடுப்பு . பார்த்ததும் அவள்தான் என அவதானித்து பின் தொடர்ந்தது, முன்னே சென்று முகம் பார்த்தேன். இதழ்கள் அவளை ஊர்ஜிதப்படுத்த “,என்ன சார் ஃபாலோ பண்றியா?” என்றாள். நான் விஷயத்தை கூறியதும் “உங்க வீட்டிலேயேவா?” என்று கூறி அவள் என்னை பின்தொடர்ந்தாள். வீட்டின் அருகில் இருப்பவர்கள் யாராவது பார்த்தால் அசிங்கமாகிவிடும் என நான் அவளிடமிருந்து சற்று இடைவெளிவிட்டு நடந்தேன். வீட்டிற்குள் வந்ததும் கட்டில் அருகே இருந்த தொட்டிலை விரித்துப் பார்த்தாள். “என்ன குழந்தை சார்? “,என்று கூறி முடிப்பதற்கு எனது 6 மாதம் பையன் அவ்வளவு முகத்திலேயே ‘சூ சூ’ போனான். “புரிஞ்சுகிட்டன் சமத்து பையன் “,உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். “டேய் ஒழுங்கா சாப்பிடணும் சாப்பிடலைன்னா நான் வந்துருவேன் . பயமுறுத்துவேன்” என்று போலியாக அதட்டி புன்னகைத்தவாறு ஆசீர்வதித்தாள். என் பையன் சாப்பிட மறுக்கிறான் என்பதால் அரவாணி ஆசீர்வதித்தால் சரியாயிடும் என்று ஒருவர் கூற இவ்வாறு செய்தேன். நான் கஞ் சத்தனமாக கொடுத்த சில்லறைகளை வாங்கிக்கொண்டு தொட்டிலினுள் உள்ள குழந்தை மீது சில்லறைகளை அப்படியே வைத்து “பெரியவனாகி பெரிய பணக்காரனாகி அப்பாவுக்கு சம்பாதிச்சு கொடு” சடையை சட்டென்று பின்னால் தூக்கி போட்டவாறு விருட்டென்று வெளியேறினாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எங்கு எந்த அரவாணியை கண்டாலும் போஷாக்கான எனது மகன் மூலம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு எனது குற்றணர்ச்சியை ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்.
முற்றும்.
