10 வரி போட்டிக் கதை: கல் ஜிமிக்கி

by admin 1
66 views

வருணாவிற்கு பூவைத்து திருமணம் முடிவு செய்ய இன்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இருபத்தெட்டு வயதுடைய சுறுசுறுப்பான பொறுப்பான கொஞ்சம் நிறம் குறைவான பெண் வருணா. 

அவளின் தந்தை வாரக்கூலி. பொட்டுத் தங்கம் கூட இல்லாததாலும், திருமணம் செய்ய பணம் இல்லாததாலும் , நிறம் குறைவு என்பதாலும் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது. 

பன்னிரெண்டு குடித்தனம் இருக்கும் இரண்டு மாடி குடியிருப்பில் ஒரு படுக்கை அறை கொண்டு, முதலாவது மாடியில் இருந்தது அவளது வீடு. 

பூ வைக்கும் விசேஷம் என்பதால் வருணாவின் மறுப்பை மீறி, அவளது தாய் பக்கத்து வீட்டிலிருந்து தங்க கம்மலை வாங்கி அவளுக்கு அணிவித்து இருந்தார். 

அரசு ஆரம்பப் பள்ளியில் கணக்கு வாத்தியாராக வேலை செய்பவர் தான் மாப்பிள்ளை. ஏதோ காரணத்திற்காக இவ்வளவு நாள் திருமணம் தடைபட்டு, இப்பொழுதுதான் வருணாவை கரம் பிடிக்க அவளின் வீட்டிற்கு சொந்த பந்தங்களுடன் வந்திருந்தான். 

இவ்வளவு நாட்கள் அக்கம் பக்கம் புறம் பேசுபவர்களுக்கு வருணா வெறும் வாயில் மெல்லும் அவலாக இருந்தாள். இன்று அவளுக்கு அரசாங்க உத்தியோக வாத்தியார் கணவனாக வந்தது வயிறு எரிந்து. மாப்பிள்ளைக்கு ஏதோ குறை போல அதுதான் 32 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருந்திருக்கிறார். அதனால் தான் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி இவளை கல்யாணம் பண்ண வந்திருக்கிறார்கள் என்று கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் ரகசியமாக பேசுவது வருணாவின் காதுகளிலும் விழுந்தது. எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அந்நேரம் மாப்பிள்ளை வீட்டிலிருந்த ஒரு பெண்மணி அவர்களது அறைக்கு வந்து “பொண்ணு எங்க இருக்கா?”  என்று கேட்க, “அதோ அங்க உட்கார்ந்திருக்கிறது தான் கல்யாண பொண்ணு. ஆனா அவ காதுலையும் கழுத்துலையும் இருக்கிறதெல்லாம் இரவல் நகை தான்” என்றாள் இளக்காரமாக. 

அவள் கூறியது வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்டது. ‘இந்த அம்மாவிடம் எத்தனை முறை சொன்னேன். யாரின் நகையும் வேண்டாம் என்று. கேட்டார்களா? இப்போ இந்த அக்கா எல்லோரும் முன்னிலையிலும் இப்படி பேசுகிறார்கள்’ என்று இன்னும் அவமானத்தில் தலை குனிந்து அமர்ந்தாள் வருணா. 

பூ வைக்கும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் மாப்பிள்ளை எழுந்து வருணாவின் எதிரில் வந்து நின்றான். எல்லோரும் அதிர்ச்சியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்க, தன் எதிரில் யாரோ நிற்பது போல் தெரிய வருணா நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்த்ததும் அவள் கையில் ஒரு பெட்டியை கொடுத்தான். வருணாவோ தயங்கி நிற்க, அவளின் வருங்கால மாமியார் “வாங்கிக்கோமா!” என்று அவளின் கையைப் பிடித்து மகனின் கையருகில் வைத்தார். 

அதை திறந்து பார்த்த வருணாவிற்கு கண்கள் ஆச்சரியம், அதிர்ச்சி என்று அனைத்து உணர்வுகளையும் ஒருங்கே காண்பித்து, எதிரில் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள். 

எல்லோரும் அதில் என்ன இருக்கிறது என்ற ஆவலில் எட்டிப் பார்க்க, அதனுள் சிகப்பு வெள்ளை பச்சை வண்ணங்கள் பதிக்கப்பட்ட அழகான கல் ஜிமிக்கி இருந்தது. நல்லெண்ணம் கொண்ட வருணாவின் பக்கத்து வீட்டுப் பெண், “என்ன சார்? பொதுவா பொண்ணுக்கு மோதிரம் வாங்கிட்டு வருவாங்க. நீங்க என்ன ஜிமிக்கி வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்றாள். 

“இவளை புகைப்படத்தில் பார்த்த உடனேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த அழகான முகத்திற்கு ஜிமிக்கி போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் வாங்கி வந்தேன்” என்ற பதில் பக்கத்து வீட்டுப் பெண்ணிற்காக இருந்தாலும், பார்வை முழுவதும் வருணாவின் மீதே காதலாக படிந்திருந்தது. 

வாத்தியாரின் அம்மா தன் மருமகளின் அருகில் வந்து, “நீ போட்டிருக்கிற கம்மல் உனக்கு கொஞ்சம் கூட செட்டாகலை. என் மகன் கொடுத்த கல்ஜிமிக்கியை போட்டுக்கொண்டு அதை கழட்டி உன் அம்மாவிடமே கொடுத்துவிடு. அவர்கள் வாங்கிய இடத்திலேயே கொடுத்து விடுவார்கள்” என்று அந்தப் பெண் பேசியதற்கு பதிலடியாக, அதே சமயம் தன் மருமகளையும் அவள் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமலும் பேசினார். 

அவர் பேசியதை கேட்டதும் வருணாவின் பெற்றோரும் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட அக்கம் பக்கத்தினரும் மகிழ, மட்டம் தட்ட நினைத்த கூட்டத்தின் முகம் கருத்தது. 

வருணாவின் கண்கள் காதலாக தன் வருங்கால கணவனைப் பார்த்தது. 

ஒரு கல் ஜிமிக்கி அங்கு இரண்டு மனங்களை மட்டுமல்ல இரண்டு குடும்பங்களையும் ஒன்றாய் இணைத்தது. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!