எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
பள்ளியில் இரண்டாவது படிக்கும் பெண் குழந்தை திடிரென்று வயிற்றை
பிடித்துக்கொண்டு அழுதது. டீச்சர் குழந்தையை பார்த்து யூகித்துக்கொண்டு தன்
அறைக்கு தூக்கிச்சென்றார். குழந்தையின் தாய் ஓடி வந்து டீச்சரிடம் அழுதுகொண்டே
“என்ன ஆச்சுமா, குத்த வைக்குற வயசாமா இது. என்னனு புரியலையே டீச்சரம்மா”
என்றாள். “அடிக்கடி பிராய்லர் கோழி, அது இதுனு சூட்ட கெளப்புற சாப்பாடா
சாப்டா இப்படித்தான். விடுங்க. சடங்கு எல்லாம் முடிச்சுட்டு ஸ்கூலுக்கு அனுப்பனும்.
நிப்பாட்டிறாதிங்க.” என்று சொல்லி அனுப்பி வைத்தார். சில நாள் கழித்து பள்ளி வந்த
பிள்ளை ஓட்டப்போட்டியை பார்த்துக்கொண்டிருந்தது. டீச்சர் தனியாக அழைத்து
மாதவிடாய் கோப்பையை கொடுத்தார். “எதுக்கு டீச்சர். தண்ணி குடிக்கவா. இதுல
எப்படி குடிக்க?” என்றது எதார்த்தமாக. டீச்சருக்கு கண்ணீரே வந்துவிட்டது. பிறகு
சொல்லிக்கொடுத்து புரியவைத்தார். “நானும் ஓட போறேன்” என்று கத்திவிட்டு
டீச்சரை கட்டி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஓடியது பிள்ளை கோப்பையுடன்
கோப்பையை வெல்ல.
முற்றும்.