எழுத்தாளர்: இ.தாஹிர்பாட்சா
“கடையில ஒரு பழம் அஞ்சு ரூபா. நீ என்னப்பா ஒரு தாரே 80 ரூபாய்க்கு கேட்கிற. எப்படி கட்டுபடியாகும்””இஸ்டமா இருந்தா குடு. இல்ல வேற காட்டுல வாங்கிக்கிறேன்”விவசாயியிடம் ஒரு தார் 100 ரூபாய்க்கு பேரம் பேசி நான்கு வாழைதார்களை தனது டிவிஎஸ் எக்ஸெல் வண்டியில் முன்னாலும் பின்னாலும் வைத்து கட்டிக் கொண்டார் தரகர் குமார். “விளையவச்ச எங்களுக்கு தான் ஒன்றும் இல்லை. நீங்க நல்லாவே இருங்க”என்று புலம்பியபடி சென்ற விவசாயியை பொருட்படுத்தாமல் வண்டியை முறுக்கினான் குமார். வயலில் இருந்து சாலைக்கு சென்று சிறிது தூரம் பயணித்த வண்டியை ஓரங்கட்டினார் டிராபிக் கான்ஸ்டபிள். “2000 ரூபாய் ஃபைன் கட்டு””ஏன் சார்””வண்டி மனுஷங்க போறத்துக்கு தான். லோடு ஏத்துறதுக்கு இல்ல. இப்படி முன்னாளையும் பிண்ணாளையும் சரக்கு எடுத்துட்டு போறது சட்டப்படி குற்றம். இந்த பில்ல புடி கோர்ட்டில பணத்தை கட்டு”பைன் பேப்பரை கையில் வைத்துக் கொண்டு டிராபிக் கான்ஸ்டபிளயும் விவசாயியின் வயல் பகுதிகளையும் மாறி மாறி பார்த்தான் குமார்.
முற்றும்.
