எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
“ராஜி! நாள் பூரா கதைப்புத்தகம் வாசிண்டு இருந்துவிட்டு, பரீட்சையில் வாங்கியிருக்கும் மார்க் பாரு – உன்னோட அப்பா வரட்டும் – அப்போ தெரியும் உனக்கு” என்ற தாயின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் 12 வயது ராஜி.
தாயின் அதட்டலில் கையில் இருந்த பொன்னியின் செல்வன் நான்காம் பாகத்தை கீழே போட்டு விட்டு பயந்து விழித்த ராஜியின் தலையில் ஒரு குட்டு வைத்து விட்டு, பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து பீரோவில் வைத்து பூட்டிய ராஜியின் தாய், “ இனிமேல் எந்த கதைப் புத்தகமும் படிக்கக் கூடாது நீ” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
தாய் குட்டிய குட்டு கூட வலிக்கவில்லை ராஜிக்கு ஆனால் பொன்னியின் செல்வன் கதையில் சுவாரசியமான அத்தியாயத்தை முடிக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது புத்தகப் பைத்தியமான 12 வயது ராஜிக்கு.
வாழ்க்கையே வெறுத்துப் போனது போல் தோன்ற ராஜி அழுது கொண்டே படுக்கையில் போய் படுத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினாள்.
தன் தாயின் கண்டிப்பு பற்றி அறிந்திருந்த ராஜிக்கு இனிமேல் தாய் தன்னை கதைப் புத்தகம் பண்ண அனுமதிக்க மாட்டாள் என்பது தெரிந்தது மட்டுமல்ல அவள் தந்தை அவள் பாரீட்சையில் வாங்கியிருந்த மார்க் பார்த்து ஹாஸ்டலில் சேர்த்து விடுவாரோ என்ற பயமும் சேர்ந்து அழுகையை அதிகமாக்கியது.
யோசித்து யோசித்து பார்த்த ராஜிக்கு அந்த நிலையில், கதைப் புத்தகம் படிக்காமல் ஹாஸ்டலில் போய் பாட புத்தகம் படிப்பதை விட உயிரை விட்டுவிடலாம் என்று தோன்றிவிட்டது.
ஆனால் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்பதைத்தான் முடிவு செய்ய முடியாமல் ஃபேனில் தொங்கலாம் என்றால் ஸ்டூல் போட்டாலும் எட்டாது என்று யோசித்துக் கொண்டே கீழே பார்த்த பொழுது அவள் கண்ணில் கரப்பு சாவதற்க்காக கட்டில் அடியில் வைத்திருந்த ‘கரப்பு கொல்லி’ மாத்திரை கண்ணில் பட்டது.
மிகவும் விஷம் வாய்ந்தது என்று அவள் தாயார் சொல்லி இருந்த அந்த மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கோள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு, அந்த மாத்திரிகையை எடுக்க கீழே குனிந்தாள் ராஜி.
அப்பொழுது ஒரு கரப்பான் பூச்சி ஓடி வந்து அந்த மாத்திரையில் வாய் வைக்க, ‘ஐய்யோ ! கரப்பான் பூச்சி வாய் வச்ச மாத்திரையை எப்படி சாப்பிடுவது” என்று நினைத்து, மாத்திரை உண்டு உயிரை விடும் முடிவையே மாற்றிக் கொண்டு விட்டாள் ராஜி.
ராஜியின் தற்கொலை முயற்சியை தான் வெற்றிகரமாக தடுத்ததையே அறியாமல் வேறு இடம் நோக்கி நகர்ந்தது அந்த கரப்பான் பூச்சி .
முற்றும்.
