எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
“போஸ்ட்மேன் இன்னும் வரவில்லையே” என்ற யோஜனையில் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டிருந்த மாமியார் ஜானகியைப் பார்க்க சிரிப்பாக வந்தது விஜயாவிற்கு.
“என்ன அத்தை ! இவ்வளவு நாளும் இல்லாம இப்ப என்ன போஸ்ட்மேனை தேடிண்டு இருக்கீங்க – அரூபியிலே கதை கிதை எழுதி பரிசு ஏதாவது வருதா என்ன? “ என்று சிரித்துக் கொண்டே கேட்ட விஜயாவைப் பார்த்து, ஜானகி,
“ பொங்கலுக்கு என் தம்பி அனுப்பும் சீர் பணம் மணி ஆர்டர் இன்னும் வரலையேன்னு தான் போஸ்ட்மேனை எதிர்பாத்துண்டு இருக்கேன்” என்று சொல்லி அலுப்புடன் சோபாவில் அமர்ந்தாள் ஜானகி.
“ என்ன – உங்க தம்பியா – நான் பார்த்ததே இல்லையே – எங்க கல்யாணத்திற்கு வரவே இல்லையே” என்று ஆச்சரியத்துடன் கேட்ட விஜயாவை பக்கத்தில் சோபாவில் அமரும்படி சைகை காட்டிவிட்டு, ஜானகி தொடர்ந்தாள்.
“விஜயா – என் தம்பி இப்போ ஜெயிலிலே இருக்கான்னு சொன்னா உன்னாலே நம்பமுடியாது – ஆமாம் அவன் ஒரு திருடன் தான்.
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் வீட்டிலே தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது திடுமேன்று வீட்டு ஓடு ஒடிந்து விழும் சத்தம் கேட்டு கண் விழித்த நான் பார்த்தது, வீட்டு ஓடு ஒடிந்து அதிலிருந்து கீழே விழுந்த ஒரு திருடனைத்தான்.
பயந்து ஐய்யோ ! ஐய்யோ ! திருடன் என்று கத்த ஆரம்பித்த என்னை கை அமர்த்தி “அம்மா! பயப்படாதே! நான் திருடன் தான் – ஆனால் இப்போ உன் முன்னாடி கால் ஒடிந்து ஓட முடியாம இருக்கேன்” என்ற அவனைப் பார்த்ததும், எனக்கு என்னவோ பரிதாபமாகத்தான் இருந்ததால், சத்தம் கேட்டு ஓடி வந்த கிராமத்து ஆட்களை, கதவுக்கு வெளியிலேயே “வீட்டுக்குள்ளே யாரும் வரவில்லை” என்று சொல்லை அனுப்பி விட்டு, அவனை மெள்ளமாக எழுந்திருக்க வச்சு கட்டிலில் உட்கார வச்சேன்.
பிறகு அவன் காலில் ஒரு கட்டு கட்டி விட்டு, பிறகு சாப்பிட தோசையும் வார்த்துக் கொடுத்ததும் அவன் அப்படியே உறங்கி விட்டான்.
காலையில் அவன் எழுந்ததும், நொண்டி நொண்டி நடக்க முடிந்த அவனுக்கு காப்பித் தண்ணியும் இட்டிலியும் கொடுத்தவுடன், அவன், “அம்மா ! உன்னை என் மூத்த சகோதரியாக நினைச்சுண்டு, இதோ இந்த வெள்ளி டாலரை – என் அம்மா ஞாபகமா வக்சுண்டு இருக்கிறது – கொடுக்கிறேன்” என்று சொல்லி நான் எவ்வளவு மறுத்தும் கொடுத்துவிட்டு போலிஸில் சரெண்டர் ஆகிட்டான்.
ஆனால் இந்த பத்து வருஷமாக, அந்த ஓடு ஒடிந்து வீட்டுக்கு வந்து, எனக்கு என் தம்பியாகவே ஆகிவிட்டவன், ஜெயிலில் வேலை செய்து சம்பாதித்து பொங்கல் சீர் அனுப்புவதை வாங்கத்தான் போஸ்ட்மேனை எதிர்பார்க்கிறேன்” என்று ஜானகி சொல்லி முடிக்க, வாசலில் போஸ்ட்மேனின் குரல் “ அம்மா! மணி ஆர்டர்” என்று கேட்டது.
முற்றும்.