எழுத்தாளர்:- அருள்மொழி மணவாளன்
“என்னங்க, நாளைக்கு நம்ம பையன் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே. ஞாபகம் இருக்குல்ல”
“அதான் ஏற்கனவே சொல்லிட்டியே. நானும் ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டேன். நாளைக்கு நம்ம எல்லோரும் போலாம்.
இல்லையென்றால் அவன் நம்பளை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்” என்று புன்னகைத்துக் சொல்லிக்கொண்டே அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டு இருந்தார்.
“இன்னைக்காவது வரும் பொழுதாவது நான் சொன்னதை மறக்காமல் வாங்கிட்டு வாங்க” என்று சலிப்பாக ஞாபகப்படுத்தினாள் மனைவி.
“ம்ம் கண்டிப்பா மா” என்று அசடுவழிய சிரித்தான் கணவன்.
“க்கும். இந்த சிரிப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இன்னைக்கு மட்டும் நீங்க மறந்துட்டு வாங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு” என்று நொடித்துக் கொண்டு அவன் கையில் மதிய உணவை கொடுத்தாள்.
‘இன்று எப்படியாவது மறக்காமல் வாங்கி விட வேண்டும். இல்லை என்றால் நாளைக்கு பத்திரகாளியாக நிற்பாள்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அலுவலகத்திற்குச் சென்றான்.
அவன் நினைத்தது போலவே ‘இன்னைக்கு மட்டும் அவர் வாங்காமல் மட்டும் வரட்டும், நாளைக்கு அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விட வேண்டும். வெயில் எப்படி கொழுத்துது. அதை கொஞ்சமாவது உணர்கிறாரா?’ என்று நினைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்தாள்.
வேலை முடிந்து வெறும் கையுடன் வந்தவனை கண்டு மனதிற்குள் வெறுத்து விட்டாள். ஆனால் எதுவுமே கேட்கவில்லை.
அவளின் கோபம் அவள் காபி கொண்டு வந்து, டேபிளில் வைத்த வேகத்திலேயே தெரிந்தது.
‘எதற்கு இப்போ இவ்வளவு கோபப்படுகிறாள்?’ என்று நினைத்துக் கொண்டே காபியை எடுத்து குடித்தான்.
இரவு டியூஷன் முடிந்து வந்த மகன், அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து “அப்பா இன்றாவது தொப்பி வாங்கிட்டு வந்து விட்டீர்களா? “என்று சோகமாக கேட்டான்.
அவன் கேட்டதும் தான் அவருக்கு மனைவியின் கோபம் புரிந்தது அவளை அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டு, “இதுக்காகத்தான் நீ கோபமாக இருக்கிறாயா?” என்று சொல்லிக் கொண்டு, தன் அலுவலக பையில் இருந்து தொப்பிகளை எடுத்து மனைவியின் கையில் கொடுத்தான்.
“ஐ தொப்பி” என்று மகன் மகிழ்ச்சியாக தொப்பியை எடுத்துக்கொண்டு ஓடினான்.
மகனின் மகிழ்ச்சி கண்டு மனைவியின் முகத்தில் புன்னகை தோன்ற, இருவரின் சந்தோஷத்தில் நிம்மதியானான் கணவன்.
முற்றும்.