எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
இறந்த கமலாவிற்கு காரியம் செய்துவிட்டு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
பள்ளிப்படிப்பு படித்துக்கொண்டிருந்த பாபு மொட்டை அடித்து காரியம்
செய்துவிட்டு அம்மா இறந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் திண்ணையில்
தனிமையில் அமர்ந்திருந்தான். தந்தை அருகில் அமர்ந்து அவனை மடியில் சாய்த்து
முடியில்லா தலையை தடவி கொடுத்துக்கொண்டே “அப்பா நான் இருக்கேன்யா.
கவல படாத” என்று ஆறுதல் கூறினார். கண்ணீர் தந்தையின் வேட்டியை
ஈரப்படுத்தியது. சில நாட்கள் கழித்து பள்ளி செல்லும்போது தன் சைக்கிளில்
கூட்டிச்சென்று விட்டுவிட்டு சாயங்காலம் கூப்பிடவருகையில் அவன்
கேட்காமலேயே வெயில் அதிகமாக உள்ளது என்று தொப்பி வாங்கி வந்திருந்தார்
அப்பா. அம்மாவுடன் செல்லும்போது வெயிலோ, மழையோ என் தலையை
மறைக்கும் தாயின் சேலையின் முந்தானைக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இந்த
தொப்பி என்று புரிந்தது மகனிற்கு.
முற்றும்.
