10 வரி போட்டிக் கதை: நூற்றியென்பது நொடி

by admin 1
94 views

இன்று அவனைக் கொல்வது உறுதியாகிவிட்டது.

மிகச்சிறிய ஊசியில் தடவப்பட்டிருந்த சயனைட் விஷம், குத்துவது கூடத் தெரியாமல் ரத்தத்தில் கலந்து உடன் மரணம் சம்பவிக்கும்.

நண்பன் என்று வீட்டிற்குள் அனுமதித்த தன் முட்டாள்தனத்தையும் அதைப் பயன்படுத்திக்கொண்ட அவனையும் தன் மனைவியையும் மன்னிக்கத் தான் ஒன்றும் மகாத்மா இல்லை என்று மனதுக்குள் உறுமினான்.

கையில் அணிந்திருந்த கையுறையில் உள்ள பிரத்தியேக இடத்தில் அந்த ஊசியை வைத்துப் பலமுறை ஒரு தலையணையைத் தடவிக் குத்திப் பழகினான்.

இங்குத் தலையணை போல் அங்கு அவன் உடலில் கழுத்தோ, கைகளோ, ஏதேனும் ஒரு பகுதி.

நூற்றியென்பது நொடி சிக்னலில் அவன் மாட்டும் அந்த ஒரு நாள் மட்டும் போதும்.

இவனது நல்ல நேரமோ அவனது கெட்ட நேரமோ நடைபாதையையொட்டி அவனும் அவனுக்கு இடப்புறத்தில் மயக்கும் சிரிப்புடன் மனைவியின் ஸ்கூட்டியும்.

சிக்னலில் பச்சை விழுந்ததும் ஸ்கூட்டி சீறிப்புறப்பட அவளது வளைவுகளைப் பார்த்தவாறு வண்டியை உதைத்த அவனுக்குப் பின்னால் ஏதோ கடந்ததது போலத் தோன்றிக் கழுத்தில் சுருக்கென்று சின்ன வலி மட்டும் உணரமுடிந்தது.

கருப்பு நிறத்தில் ஜீன்ஸ், ஜெர்கின்ஸ், முகத்தை முழுதும் மூடிய ஹெல்மெட் என்று அணிந்திருந்த அவன் மிகக்கவனமாக அந்த ஊசியைச் சாக்கடையில் எறிந்து விட்டு மனைவிக்கான புது ஊசியைச் செருகிக் கொண்டு தனது வண்டியில் ஏறிப் பச்சை விழக் காத்திருந்தான்.

மரத்தடியில் நின்றிருந்த அவனது பின்கழுத்தில் ஒரு காகத்தின் எச்சம் விழ அனிச்சையாகத் அதைத் துடைக்க எத்தனித்தபோது சுருக்கென்று ஒரு வலியுணர்ந்தான்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!