எழுத்தாளர்: அனுஷாடேவிட்
உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அருகருகே இருக்கும் மாடி வீடுகளில் பெண்கள் துவைத்த துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தனர். அதில் கால்மிதி துணிகளும் அடக்கம்.
பக்கத்து வீட்டு பெண்மணி சிவப்பு வண்ண கால்மிதியை காயப்போட அடுத்த வீட்டில் கருப்பு வண்ண கால்மிதி தண்ணீர் சொட்ட சொட்ட அப்பொழுது தான் தொங்க விடப்பட்டிருந்தது. ஆள்நடமாட்டம் மறைந்ததும் பேச்சு தொடர்ந்தது.
“என்ன செவப்பி காலையிலேயே உன்னை தொங்க விட்டுடாளா உன் வீட்டுகாரி? கலரெல்லாம் போய் ரொம்ப நைந்து போய் இருக்கியே” என்று கருப்பு வண்ண கால்மிதி நக்கலடித்தது.
“கருப்பி நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன். நீயும் கடுப்பேத்தாத. அந்த குந்தானி என்னை மாசத்துல ஒருக்க தான் வாஷ் பண்ணவே செய்ரா. அழுக்கும் மண்ணும் பாக்டீரியாவும் கொழுத்து போன பிறகு தான் என்னை சுத்தபடுத்தனும்னே அவளுக்கு தோணும் போல” கடுப்புடன் கத்தியது
சிவப்பு வண்ண கால்மிதி.
“ஹா ஹா ஹா. அதுதான் உனக்கு வாய்ச்ச விதி போல. என் எஜமானி ரெண்டு நாளைக்கு ஒருக்க என்னை குளிப்பாட்டி காய வச்சிடுவா. சுத்தம் சோறு போடும்னு சொல்வா”
“ம்ம்ம் உனக்கு ராஜயோகம் தான். உன் எஜமானிட்ட சொல்லி இந்த குந்தானிக்கு புரிய வை கருப்பி. ஏற்கனவே நான் மெலிஞ்சி தேய்ஞ்சி போய்ட்டேன். இதுல ஹைகீல்ஸ் போட்டு வந்து மிதிப்பா அப்படியே நான் உள்ளே நசுங்கி போயிடுவேன்”
“அதலாம் அவங்கவங்களா புரிஞ்சிக்க வேண்டியது செவப்பி”
“உன்கிட்ட சொன்னேன் பாரு ம்க்கும்… வெயில் வேறு கொளுத்துது. மேலெல்லாம் சுட்டெரிக்குது கருப்பி. எப்படியும் மறுபடியும் மிதிக்க தான் போறா அழுக்காக்க தான் போறா தூசியும் மண்ணுமா கிடக்கதுக்கு இப்படி வெயில்ல கரிய வைக்றாளே”
“இன்னும் கொஞ்சம் நேரம் தான் நெருப்பன் மலை இறங்கிடுவான். கிழிஞ்சி தொங்குற துணியை எடுத்து கட்டு செவப்பி”
இரண்டும் வம்பளந்து நேரம் கடக்க கதிரவன் மலையின் பின்னால் ஒளிந்துக்கொள்ள இறங்கினான். மாலை காற்றில் கால்மிதிகள் அசைந்தாட அதனின் உரிமையாளர்கள் குந்தானியும்எஜமானியும் எடுத்துச் செல்ல வந்தனர்.
முற்றும்.