எழுத்தாளர்: ப்ரஸன்னா வெங்கடேஷ்
இன்னமும் பனிப் பொழிவு நின்றபாடில்லை. ஹேமா பத்திரமாய் வீட்டுக்கு வர வேண்டுமே
என்று ஜான் கவலைப்பட்டான். பனியோ ,புயலோ ஹேமா பாடினால் தான் வீட்டில் அடுப்பு
எரியும். ஜானின் கால்கள் செயலற்றுப்போன இந்த ஐந்து வருடங்களாக ஹேமா பக்கத்தில்
ஒரு க்ளப்பில் இரவு விருந்தின் போது பாடுகிறாள். பகலில் ஒரு பள்ளியில் பாட்டு டீச்சராக
வேலை செய்து வந்தாள். “ ஜான், நீங்க போடுற இந்த இஞ்சி டீக்கு எதுவுமே ஈடில்லை” என்று
ஹேமா தினமும் சொல்வாள். இன்றைக்கும் ஜான் அவளுக்காக டீ தயாரித்துக்
கொண்டிருந்தான். அதோ, பனி படர்ந்த மரங்களின் நடுவே,, ஹேமா வருகிறாளே. “ அப்பா,
எதுக்கு டீ போடறீங்க? அம்மா கார் ஆக்ஸிடெண்ட்ல நம்மள விட்டு போயிட்டாங்களே..
இப்படி தினமும் அவங்களுக்காக ஏன் காத்துகிட்டு இருக்கீங்க” என்றவாறு ஜானின் மகள்
ஷீலு அவனை மெல்ல உள்ளே அழைத்துச் சென்றாள்.
முற்றும்.
